மும்பை,
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இதனால் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் புதிய கேப்டனை தேடும் பணியில் பி.சி.சி.ஐ. இறங்கியுள்ளது. இதில் கேப்டன் பதவிக்கு சுப்மன் கில்லின் பெயர் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பண்ட்டின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ரோகித் சர்மாவுக்கு அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா அடிக்கடி காயத்தை சந்திப்பதால் அவருக்கு கேப்டன் பதவி வழங்க பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டவில்லை என கூறப்பட்டது.
இதனால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்ஷிப் பதவியை ஜஸ்பிரித் பும்ரா நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த ஜஸ்பிரித் பும்ராவை கேப்டன் பதவிக்கு பி.சி.சி.ஐ. அனுகியதாக கூறப்படுகிறது. இருப்பினும் பணிச்சுமை மற்றும் அடிக்கடி காயம் சந்திப்பதை கருத்தில் கொண்டு பும்ரா அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின்போது முதுகு பகுதியில் காயமடைந்த பும்ரா சாம்பியன்ஸ் டிராபியை தவறவிட்டார். அதன்பின் குணமடைந்த அவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இருப்பினும் அவரால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அனைத்து போட்டிகளிலும் (5 போட்டிகள்) விளையாட முடியுமா? என்பது தெரியவில்லை. அதனால் அவர் கேப்டன்ஷிப் பதவியை நிராகரித்ததாக கூறப்பட்டுள்ளது.