திண்டுக்கல்:
தமிழக முதல்வரின் சாதனைகள் இன்னும் 50 ஆண்டுகள் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே டி.புதுப்பட்டியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பேசிய திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, ''தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதற்கான சிறப்பு முகாம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும்.
முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தில் 20 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில், 196 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. புதிதாக மேலும் 1200 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட உள்ளன. கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் முதல் கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக மேலும் ஒரு லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வரின் சாதனைகள் இன்னும் 50 ஆண்டுகள் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெறும். மீண்டும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார்,'' என தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்துக்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ப.க.சிவகுருசாமி தலைமை வகித்தார். கன்னிவாடி நகர செயலாளர் இளங்கோவன், டி.புதுப்பட்டி திமுக கிளைச்செயலாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.