tamilnadu epaper

இந்திய வரலாற்றை தீர்மானித்த வந்தவாசி போர் - சிறப்பு பார்வை

இந்திய வரலாற்றை தீர்மானித்த வந்தவாசி போர் - சிறப்பு பார்வை

 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், 16-17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை அமைந்துள்ளது. இந்தக்கோட்டை வரலாற்று சிறப்புமிக்க பல போர்களை சந்தித்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்கவை என்று பார்த்தால் கி.பி 1760-ல் நடந்த மூன்றாவது கர்நாடகப் போரின் ஒரு பகுதியான வந்தவாசி போர் ஆகும். 22-01-1760 ல் நடைபெற்ற இந்த போரில் பிரெஞ்சுப் படைகளும், ஆங்கிலப் படைகளும் எதிராக மோதின. வந்தவாசி கோட்டையை கைப்பற்ற பிரெஞ்சுப்படை ஜெனரல் லாலி என்பவரின் தலைமையிலும், ஆங்கிலேயப் படை சர் அயர் கூட் என்பவரின் தலைமையிலும் போரிட்டன. இதில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றனர். இந்தப் போர்தான், ஆங்கிலேயர்கள் சுமார் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆள்வதற்கு அடித்தளமாக அமைந்தது. இதன் பிறகும் பல போர்களை சந்தித்த காரணத்தால் கோட்டை சிதைவடைந்து போனது.

 

வந்தவாசி போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் இன்றளவும் நினைவுச் சின்னங்களாக வந்தவாசி காவல் நிலையம் முன்பும், திருவண்ணாமலை எஸ்பி அலுவலகம் முன்பாகவும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

வந்தவாசி நினைவுச் சின்னமாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய வந்தவாசி கோட்டையும், கொத்தளங்களும் இன்று மண் மூடி மறைந்து வருவது வரலாற்றுக்கு மட்டுமல்ல. நம் இளைய தலைமுறையினருக்கும் பேரிழப்பாகும்.

 

தொகுப்பு: பா. சீனிவாசன், வந்தவாசி.