ஒரு கடைக்கு போனேன் ஐம்பது ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்தேன்.ஒரு தினசரி பத்திரிகை கேட்டேன். அவர் உடனே அங்கு அடுக்கி வைத்திருந்த பத்திரிகை ஒன்றை எடுத்து என் கையில் கொடுத்தார்.
பணத்தை வாங்கிக் கொண்டு மீதி பணத்தை எடுத்தார். அதையும் என் கையில் கொடுக்க வேண்டுமே ஆனால் அவர் கொடுக்கவில்லை. எதிரில் இருந்த பலகையில் வைத்து எடுத்துக்கொள்ளச் சொன்னார். எப்போதும் அவர் அப்படித்தான் செய்வார். நானும் எடுத்துக்கொண்டு வந்து விடுவேன்.
இவர் ஏன் இப்படி செய்கிறார்? என்று எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் இருந்தது.
ஒரு நாள் அவரிடமே இதைக் கேட்டேன். ஏன் நீங்கள் உங்கள் கடைக்கு வந்து பொருட்கள் வாங்குபவர்களுக்கு மீதி பணத்தை கையில் கொடுக்காமல் பலகையில் வைக்கிறீர்கள்? ஏன் அப்படி? என்று கேட்டேன்.
காசை கையில் கொடுத்தால் நம்மிடம் இருக்கின்ற லட்சுமி போய்விடுவாள் என்றார். அதாவது பணம் செலவாகி விடும் என்று அர்த்தமாம்.
இந்த வெள்ளை சட்டை போட்டு போனாலே ஏதாவது ஒரு பிரச்சினை தான் ச்சே... என்று புலம்பல் கேட்டு உள்ளேன்.
இன்னொரு நண்பர் அவர் ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தார்.
ஏன் என்ன ஆச்சு? ஏன் இப்படி கப்பல் கவிழ்ந்த மாதிரி உட்கார்ந்து இருக்கிறீர்கள்? என்றேன்.
கப்பல் கவிழ்ந்தால் கூட நான் இப்படி கவலைப்பட மாட்டேன். வேறு ஒன்று நடந்து விட்டது என்றார்.
என்ன என்று கேட்டேன். என் உச்சந்தலையில் பல்லி ஒன்று விழுந்து விட்டது என்றார்.
அதற்காகவா இப்படி? என்று ஆச்சரியப்பட்டேன்.
உச்சந்தலையில் விழுந்தால் பலன் என்ன என்று பஞ்சாங்கத்தில் பார்த்தால் மரணம் என்று போட்டிருந்தது என்று சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து கவலைப்பட ஆரம்பித்தார். இப்படியும் ஒருவர்.
மனைவி காஃபி குடித்தால் கிரிக்கெட் வீரர் சிக்ஸர் அடித்து விடுவார் என்று காஃபி போட்டு கொண்டு வந்து தரும் விளம்பரங்கள் .
இன்னொருவர் கேரம் போர்டு ஆட உட்கார்ந்தால் வேண்டுமென்றே ஸ்ரைக்கரை கைதவறி கீழே போடுவார். அதை எடுத்துக்கொண்டு உட்காருவார். ஏனென்றால் ஒருதரம் அது நிஜமாகவே கைதவறி கீழே விழுந்தபோது அன்று பிரமாதமாக ஜெயித்துவிட்டார். உடனே முடிவுக்கு வந்துவிட்டார் கை தவறினால் லாபம் என்று! அதன் பிறகு அதையே பழக்கமாக்கி கொண்டார்.
பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் ஒருத்தர் எப்படி தெரியுமா?
அவர் வெளியில் கிளம்பும் சமயம் பக்கத்து வீட்டு ரேடியோவில் மியாவ் மியாவ் பூனைக்குட்டி என்ற பாட்டு சத்தம் கேட்டால் கூட சகுனம் சரியில்லை என்று பிரயாணத்தை நிறுத்திவிடுவார்.
இவ்வாறான விஷயங்களை நம்ப வேண்டாம் என்றோ அல்லது நான் அவை தவறனாவை என்றோ வாதிடவரவில்லை.
அளவுக்கு மீறின சகுனங்களை தான் நம்ப வேண்டாம் என்கின்றேன்.
இந்த அளவுக்கு மீறிய சகுன நம்பிக்கைகளோடு சேர்ந்து ஒரு பயமும் நம்மை தொற்றிக் கொண்டால் ஒருவருடைய மனநிலையே பாதிக்கப்பட்டு நேர்மறை எண்ணங்கள் அழிந்து எதிர்மறையான எண்ணங்கள் அவர் மனதில் விதைக்கப்பட்டுவிடும் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
அதாவது வாழ்க்கை தடுமாறக் கூடிய வாய்ப்புகளும் அதிகம். பாதுகாப்பில்லாத உணர்வு, ஒருவிதமான டிப்ரஷன் இதெல்லாம் உருவாக இவை காரணமாக அமையலாம்.
சிலபேர் காய்கறி நறுக்கும் கத்தியை கையில் எடுத்தால் கூட நேரம் சரியாக இருக்கிறதா? என்று பார்த்து விட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பார்கள்.
எனவே அறிவுதான் மனதை வழிநடத்த வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அறிவு மனது சொல்கிறபடி எல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டால் இடைஞ்சல்தான்.
அதுசரி...இன்னைக்கு நீங்க யார் மூஞ்சியில முழுச்சீங்க.
முனைவர் பாலசந்தர் மண்ணச்சநல்லூர்