இலக்கின்றி நடப்பது கூட ஒரு இலக்கு தான்.
எந்த இலக்கை கைக் கொள்வது?? மாய உலகில் ஒவ்வொரு கணமும், எல்லாம் மாறிக் கொண்டிருக்கிறது.
நம் இலக்குகளும் ஒன்றை அடைந்த பின் அடுத்தது உருவாகிறது. உருவாகுவதும், வெல்வதும் , பெறுவதும், இழப்பதுமே இலக்குகளின் அடிப்படையாகிறது.
என்றாலும் , ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டு ஏதோ ஒன்றை நோக்கி நடை போடுவதே வாழ்க்கை.
விரிந்து கிடக்கிறது நம்முன் பாதை . உதிர்ந்து கிடக்கிறது சருகுகள். முன் சென்றவர்களின் காலடித்தடம் பதிந்து இருக்கிறது. அதில் கால் வைக்கும் போகலாம். அதை ஒதுக்கியும் போகலாம்.
வசதியான, சௌகரியமான பாதை என்றால் காலடித்தடத்தை பின்பற்றலாம். போராடும் குணமும், எதிர்த்து நிற்கும் துணிச்சலும் இருந்தால் அந்தத் தடங்களை ஒதுக்கி விட்டுப் போகலாம்.
எப்படி இருந்தாலும் பாதையில் நடந்து போவதே கட்டாயம். எங்கோ தெரியும் ஒரு புள்ளி வெளிச்சத்தை நோக்கி, ஏதோ ஒரு பாதையில் நாம் நடந்து சென்றே ஆக வேண்டும் .
எனவே அந்தப் பாதையில் நடப்பதையே நம் இலக்காகக் கொள்ளலாம் . அதுவும் நமக்கு ஒரு மகிழ்ச்சிதானே. விழாமல், விழுந்தாலும் எழுந்து, நடை போட்டுக் கொண்டே போவது தான் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதுவும் ஒரு ஆனந்தம்.
அதுவே நம் இலக்கும்.