tamilnadu epaper

உலகப் புகழ்பெற்ற பத்து சொற்பொழிவுகள்

உலகப் புகழ்பெற்ற பத்து சொற்பொழிவுகள்

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் 1797 மார்ச் மாதம் பதவியில் இருந்து விலகும் நேரத்தில் உரையாற்றிய போது, "அனைத்து நாடுகளிடையில் நம்பிக்கைகளையும் நீதியையும் கடைப்பிடித்து அனைவரிடமும் அமைதியையும் எண்ணங்களின் ஒற்றுமையும் விதைக்க வேண்டும் . எளிதில் உணர்ச்சிக்கு ஆட்பட்ட ஒரு நாட்டை மற்றொரு நாட்டு இணைக்கும் செயல் பலவித தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பேசினார். 


*1801-ல் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியான தாமஸ் ஜெபர்சன் மார்ச் 4-ம் நாள் பதவி ஏற்பு விழாவில் மத சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், தனிமனித சுதந்திரம் இந்த கொள்கைகள் அடங்கிய அறிஞர்கள் கூட்டம் நாம் எடுத்து வைக்கின்ற வழிகாட்டியாக உள்ளது. ஆழ்ந்த அறிவு உடையவர்களின் அறிவு நுட்பமும் நம்முடைய வீரர்களின் இரத்தமும் அவர்களது முயற்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது "என்று பேசினார். 


*1863-ம் ஆண்டு நவம்பர் 19-ல் ஆபிரகாம் லிங்கன் கெட்டில்பர்கில் படைவீரர்களின் தேசிய இடுகாட்டை திறந்து வைத்து இரண்டு நிமிடங்கள் சொற்பொழிவாற்றினார். 272 சொற்கள் மட்டுமே அடங்கிய இந்த சொற்பொழிவில்தான் மக்களே-மக்களை-மக்களுக்காக (Government of the people, by the people, for the people) என்ற எளிய சொற்றொடரைக் குறிப்பிட்டார்.


 *1893 -ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் கூடிய சர்வ சமையப் பேரவை சுமார் 4000 பேர் அமரக்கூடிய கலைக்கூடத்தில் காலை பத்து மணிக்கு ஆரம்பித்தது. உலகின் முக்கியமான பத்து மதங்களின் பிரதிநிதிகள் அதில் அங்கம் வகித்தனர். பிற்பகலில் வரவேற்புக்கு மறுமொழியாக விவேகானந்தர் உரையாற்றினார். 


"அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே! இன்பமும் இதமும் கலந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழி கூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. 

உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்; பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்." என அவரது உரை துவங்கியது. 17 நாட்கள் நடந்த சர்வ சமய பேரவையில் விவேகானந்தர் ஆறு முறை பேசினார். இந்த உரைகள் அனைத்து மதங்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது.


*லெனின் 1917-ம் ஆண்டு அக்டோபர் புரட்சிக்கு சில நாட்களுக்கு முன்பு அனைத்து அதிகாரங்களும் 

சோவியத்களுக்கே( All Power to Soviets) என்று குறிப்பிட்டார்.

இந்த சொற்றொடர் அக்டோபர் புரட்சியின் மேற்கோள் வாசகமாக‌ திகழ்ந்தது. 


* வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட சில நாட்களில் காமன்ஸ் சபையில் 1940-ம் ஆண்டு மே 13-ல் ஒரு உரையாற்றினார். அதில் "என்னால் இரத்தம், உழைப்பு, கண்ணீர் மற்றும் வியர்வையை அளிக்க முடியும்.அனைத்து விலை கொடுத்தும் வெற்றி - அனைத்து குரோதம் கொள்கின்ற வன்முறைகளுக்கும் எதிரான வெற்றி-வெற்றிப் பாதை நீண்ட மற்றும் கடுமையானது. எனினும் வெற்றி இல்லாமல் உயிர் வாழ முடியாது".என்றார்.நாஜிகளுக்கு எதிரான இந்தப் பேச்சு சர்ச்சிலின் முக்கிய சொற்பொழிவாகும்.


*1942 ஆகஸ்ட் 8-ல் மகாத்மா 

காந்தியடிகள் மும்பை கௌலியா டேன்க் மைதானத்தில் வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தை துவக்கி ஆற்றிய உரை காந்தியடிகள் ஆற்றிய உரைகளில் ஒன்றாகும்.நடு இரவிற்கு சற்று முன்வரை காந்தியடிகள் நிகழ்த்திய உரை அவரது உரைகளிலேயே மிகச்சிறந்தாகக் கருதப்படுகிறது.


"இந்தியாவின் நாற்பது கோடி மக்களை எங்கே இட்டுச் செல்வது?

மனித குலத்தின் இந்த பரந்த மக்கள் திரள் சுதந்திரத்தை தொட்டு அதை உணராத வரையில், எப்படி அது உலக விடுதலைக்கான உலக மக்களின் மேம்பாட்டுக்கான செயல்பாடுகளில் தனிப்பங்கை ஆற்ற தீப்பிழம்பென வீறீட்டெழும்?.

இன்று அவர்களுக்கு உண்மையான வாழ்க்கையின் உள்ளுணர்வு என்பதே இல்லை.

அவர்களிடமிருந்து அது சக்கையாக பிழியப்பட்டுவிட்டிருக்கிறது. அவர்களின் கண்களில் ஒளி பாய்ச்சப்பட வேண்டுமானால் சுதந்திரம் நாளை வந்து பயனில்லை:அது இன்றே வந்தாக வேண்டும். ஆகவே காங்கிரசுக்கு நான் ஆணையிட்டு சூளுரைக்கிறேன் . காங்கிரசு அதன்படி சபதம் எடுத்துள்ளது. செய் அல்லது செத்து மடிவோம் என்று." இப்படி முடிகிறது காந்தியடிகளின் அந்த நீண்ட சொற்பொழிவு.


*1947 ஆகஸ்ட் 14 அன்று டெல்லியில் நடந்த அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தில் நள்ளிரவுக்கு சற்று முன்னர் அரசியல் நிர்ணய சபையின் தலைவரான ராஜேந்திர பிரசாத் இந்திய யூனியன் என்ற புதிய அரசின் பிறப்பை அறிவித்தார்.


இக்கூட்டத்தில் ஜவஹர்லால் நேரு 

"நெடுங்காலத்துக்கு முன்பு நாம் விதியோடு ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டோம். அன்று செய்த உறுதியை நிறைவேற்றும் காலம் இப்பொழுது வந்துவிட்டது. அதை மொத்தமாகவோ அல்லது ஒரு அளவிலோ இல்லாவிட்டாலும் கணிசமான அளவில் நிறைவேற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது. நள்ளிரவு மணி ஒலிக்கும் பொழுது,

உலகம் உறக்கத்திலாழ்ந்திருக்கும்

பொழுது இந்தியா புதிய வாழ்க்கையிலும் சுதந்திரத்திலும் கண் விழிக்கும்... இந்த பெருமிதமான நேரத்தில் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் இன்னும் விரிந்த அளவில் மனிதகுலத்துக்கும் சேவை செய்வோம் என்று அர்பணித்திக் கொள்கின்ற உறுதி மொழியைச் செய்வது பொருத்தமானதே" என்று உரையாற்றினார். இந்த உரை நேரு ஆற்றிய சொற்பொழிவுகளில் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. 


* 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது நேரு வானொலியில் பேசியபோது நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டிய விளக்கு அணைத்து விட்டது. இருள் நம்மை சூழ்ந்து விட்டது. உங்களிடம் எதை சொல்வது அதை எப்படிச் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. நாம் அன்போடு நேசித்த தலைவர்-பாபு என்று தான் நாம் அவரை அழைத்தோம்- நாட்டின் தந்தை மறைந்து விட்டார். அறிவுரை அல்லது ஆறுதல் வார்த்தைகளைக் கேட்பதற்காக நாம் இனிமேல் அவரிடம் போக முடியாது. இது ஒரு பயங்கரமான அடி- தனியே எனக்கு மட்டுமல்ல- நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கும்தான். 


விளக்கு அணைந்துவிட்டது என்று கூறினேன். இல்லை; நான் சொன்னது தவறு. ஏனென்றால் இந்த நாட்டிலே எரிந்து கொண்டிருந்த விளக்கு சாதாரணமான விளக்கு அல்ல. கடந்த பல வருடங்களாக இந்த நாட்டில் ஒளியேற்றிய விளக்கு. எதிர்காலத்தில் இன்னும் பல வருடங்களுக்கு இந்த நாட்டை ஒளிரச் செய்யும். ஆயிரம் வருடங்களுக்கு பிறகும் இந்த நாட்டிலும் உலகத்திலும் அந்த விளக்கை இன்னும் காண முடியும்"

என்றார். இந்த உரையும் நேருவின் 

முக்கிய உரையாகக் கருதப்படுகிறது. 


*

அமெரிக்காவின் 35 வது ஜனாதிபதியாக ஜான் பிட்ஜெரால்ட் கென்னடி 1961 ஜனவரி 20-ம் நாள் பதவியேற்றார். அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவு உலக வரலாற்றிலேயே ஒரு திருப்பு முனையாக திகழ்ந்தது. 


தனது சொற்பொழிவில் கென்னடி 

"அன்பிற்குரிய உலக மக்களே! அமெரிக்கா உங்களுக்காக என்ன செய்யக்கூடும்? என்று கேட்காதீர்கள் நாம் எல்லோரும் மனித உரிமையை காக்க என்ன செய்யக்கூடும் என்று கேளுங்கள்."


"அமெரிக்கா மக்களாயிருப்பினும் சரி அல்லது உலக 

மக்களாயிருப்பினும் சரி இக்குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குரிய ஆற்றலையும் தியாக உணர்வையும் நாம் பெற வேண்டும். நம் முயற்சிக்கும் உழைப்புக்கு உரிய பங்கை எதிர்கால வரலாறு நமக்கு கொடுக்கும். இப்பணி முற்றுப்பெற ஆண்டவன் அருளை வேண்டி நிற்போம் இவ்வுலகில் ஆண்டவன் கடமையும் நம் கடமையும் ஒன்றுதான் என்பதை உணர்வோமாக!" என்று பேசினார்.


க.ரவீந்திரன்,

22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,

ஈரோடு - 638002.