சுந்தரத்திற்கு நண்பர்கள் பலர் உண்டு. அவர்கள் வீட்டிற்கு அவர் அடிக்கடி செல்வார். அரசியல் இலக்கியம் அலுவலக அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். அவர்கள் தண்ணீர் காபி கொடுத்து உபசரிப்பார்கள்.
தீபாவளி விநாயக சதுர்த்தி கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகை காலங்களில் சென்றால் பலகாரங்களும் கொடுப்பார்கள்.
சுந்தரம் 70 வயதை கடந்துவிட்டார். அவருடைய நண்பர்களும் ஏறக்குறைய சம வயதினர். இப்பொழுதெல்லாம் சுந்தரம் எந்த நண்பர் வீட்டிற்கும் சொல்வதில்லை.
நெருங்கிய நண்பரான கந்தசாமி ஒருநாள் வீட்டிற்கு வந்தவர் ,"ஏன் நீங்கள் வீட்டுப் பக்கம் வருவது இல்லை" என்றார்.
சுந்தரம் , நீயும் உன் மனைவியும் என்னை விழுந்து விழுந்து உபசரிப்பீர்கள். உனக்கோ 75 வயது உன் மனைவிக்கோ 72 வயது. இந்த வயதில் என்னை வரவேற்று தண்ணீர் காபி பலகாரம் கொடுத்து உபசரிப்பீர்கள். இளம் வயதில் இது பெரிய வேலை அல்ல. இப்பொழுது உங்கள் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளவே கஷ்டப்படுகிறீர்கள். இந்த நிலையில் என்னை உபசரிக்க நீங்கள் சங்கடப்பட வேண்டாமே என்று எண்ணி தான் நான் வருவதில்லை" என்றார் சுந்தரம்.
சுந்தரம் சொல்வதும் ஒரு விதத்தில் உண்மைதான் என்பதற்கு அடையாளமாக மௌனமானார் கந்தசாமி.
க.ரவீந்திரன்,
22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,
ஈரோடு
- 638002.