ஏதோ சொல்லத் துடிப்பதும் பின் தயங்கி சொல்லாமல் செல்வதுமாக இருக்கும் அலைகளை ரசித்தபடி கடற்கரையோரம் அமர்ந்திருந்தாள் மைதிலி.
மனோஜ் எப்போதும் சொன்ன நேரத்திற்கு வந்ததில்லை. கேட்டால் என்னோட சூழ்நிலை உனக்குத் தெரியாது என்பான்.இவள் தாமதமாக வந்தால் திரும்பத் திரும்ப ஃபோன் செய்து கொண்டே இருப்பான். வண்டியை நிறுத்தி பேசி வருவதே இன்னும் லேட்டாகும். ஆனால் ஒரு நாளும் இதை அவன் புரிந்து கொண்டதில்லை.
இந்த மூன்று வருடமும் இப்படித் தான் போகிறது.ஒரு நாளும் இவள் தவறாக எடுத்துக் கொண்டதில்லை.
பட்டாணி சுண்டல் விற்கும் பையன் சிநேகமாகச் சிரித்தபடி அருகில் வந்தான்.
என்னக்கா அண்ணன் இன்னும் வரலையா? என்றான். பதிலேதும் சொல்லாமல் சிரித்தாள். நீ இருக்கா வரேன் என்றபடியே நகரவும் மனோஜ் வரவும் சரியாக இருந்தது.
ஹாய்! மைதிலி என்றபடியே அருகில் உட்கார்ந்தான். என்ன மனோஜ் நீங்க வர்ற வரைக்கும் டென்ஷனாவே இருந்தது.வீட்ல பேசினீங்களா? அம்மா என்ன சொன்னாங்க?என்றாள் ஒருவித தடுமாற்றத்துடன்.
ம்......பேசினேன்.
அம்மா யோசிக்கிறாங்க மைதிலி. தங்கச்சி கல்யாணம் என்னாகும்னு யோசிக்கிறாங்க. அதுமட்டுமில்ல அக்கம் பக்கம் இருக்கிறவங்க பலதும் பேசுவாங்க.எங்க தூரத்துச் சொந்தத்தில் இருக்கற அத்தையப் பத்தியும் யோசிக்கிறாங்க.
பொங்கிவரும் பாலைத் தண்ணீர் தெளித்து நிறுத்துவது போல தன்னுடைய கோபத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டாள். மற்றவர்கள் சொல்வதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறானே ஒழிய இவன் என்ன சொல்லப் போகிறானென்று இதுவரை சொல்லவில்லை.
என்ன மைதிலி அமைதியா இருக்க? என்றவனிடம் நீங்க என்ன முடிவு எடுத்திருக்கீங்கன்னு சொல்லலையே உங்க முடிவைச் சொல்லுங்க என்றாள்.
நான் உன் மேல அளவு கடந்த அன்பு வச்சிருக்கேன்.
அதான் தெரியுமே! அன்பு இல்லாமையா இத்தனை வருஷம் நம்ம லவ் பண்ணிட்டு இருந்தோம்.
இதுதான் மைதிலி உங்கிட்ட பிடிச்ச விசயம்.நான் நினைக்கறத அப்படியே புரிஞ்சுக்குவ. உன்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா என்னை விட அதிர்ஷ்டசாலி
யாருமில்லை. ஆனால் சூழ்நிலை அதற்கு ஒத்துக்கல.
எது எதையோ காரணமாகச் சொல்லி எங்கம்மா மறுக்குறாங்க என்று சொல்லும் போதே கண்கள் கலங்கின அவனுக்கு.
ஒரு நிமிடம் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் பின்னர் தெளிவானாள் மைதிலி.
காலோடு ரகசியம் பேசிய அலைகளில் காலை நனைத்து விட்டு தன் கைப்பையை எடுத்து நகர்ந்தாள்.
மைதிலி ஒண்ணும் சொல்லாமப் போறியே என்றவனிடம் நான் என்ன சொல்லணும்னு நீங்க நினைக்கிறீங்க என்றாள்.
இல்ல...... நான் இவ்வளவு நேரம் என்னோட சூழ்நிலையைச் சொன்னேன். நீ பதிலே பேசாமக் கிளம்புறியே! அதான் கேட்டேன் என்றான். எல்லா நேரமும் தன்னுடைய சூழ்நிலையையே நினைக்கும் அவனது மனம் இவளுக்கும் ஒரு சூழ்நிலை இருக்கும் என்று எப்பொழுதும் எண்ணியதில்லை. அனாதை இல்லத்தில் படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கித் தனக்கென்று ஒரு நிரந்தர வேலையையும் நல்ல வருமானத்தையும் ஏற்படுத்திக் கொண்டவள் மைதிலி.
இந்தக் கல்யாணம் வேண்டாம்னு மத்தவங்க சொல்றாங்களா? இல்ல நீங்க நினைக்கிறீங்களா? அதனால் தான் இந்தத் திருமணத்திற்கு அனுமதி இல்லை என்பதும் புரிந்தது அவளுக்கு.
நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன். நான் எப்படி வேண்டாம்னு சொல்லுவேன்?
போதும் மனோஜ் போதும்.இது கூட ஒருவகை எஸ்கேப்பிஸம் தான். மத்தவங்களக் காரணமா வச்சு இது நீங்க எடுத்த முடிவு. உங்கள லவ் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து எவ்வளவோ கஷ்டங்களைத் தாங்கி இருக்கேன். நீங்க எப்பவுமே நீங்களா தான் இருந்திருக்கீங்க. சுயநலமா தான் முடிவு பண்ணி இருக்கீங்க.
எனக்கு இதெல்லாம் கஷ்டம்னு நீங்களா நினைச்சிட்டீங்களே ஒழிய உண்மையிலேயே எனக்கு என்ன கஷ்டம்னு ஒருநாளும் யோசிச்சது இல்ல. இப்ப சொல்றீங்களே பக்கத்து வீட்டுக்காரங்களையும் அத்தையையும் அவங்கென்ன அவங்க வீட்டு விஷயங்களுக்கு உங்ககிட்ட கேட்டா முடிவு எடுத்தாங்க?
இல்ல உங்களுக்கு ஒரு கஷ்டம் வரும்போது நான் இருக்கிறேன்னு யாராவது வந்து நின்னாங்களா?
நீங்க மட்டும் தான் உலகம்னு நினைச்சேனே! அப்போ எதுவுமே சொல்லாம இப்ப அவங்களையெல்லாம் காரணமாச் சொல்றீங்க. நீங்க ஒரு கோழை. இத சொல்றேன்னு நீங்க வருத்தப்பட்டாலும் பரவாயில்லை. ஆனா இதுதான் உண்மை. சரியான காரியவாதி. நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களைப் பத்தி தெரிஞ்சுருச்சு. இனிமேலாவது மனுசங்களப் பயன்படுத்தாதீங்க. அன்பைக் கொச்சைப்படுத்தாதீங்க.
குட்பை....... என்று சொல்லிக் கிளம்பினாள்.
மைதிலி!...... என்றவனிடம் கவலைப்படாதீங்க நான் ஒண்ணும் தற்கொலை பண்ணிக்க மாட்டேன். எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. நான் உங்க மேல வச்ச அன்பு இந்த நொடி வரைக்கும் உண்மை. இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு அதை நான் கொச்சைப்படுத்த விரும்பலே. இந்தச் சமுதாயத்துக்கு ஏதோ ஒரு வகையில பயன்படணும்னு நினைக்கிறேன். நான் வளர்ந்த அனாதை இல்லத்துக்கு முழுப் பொறுப்பு எடுத்து சேவை செய்யப் போறேன். வர்றேன் என்றபடியே கிளம்பியவளை எதுவும் சொல்லத் தோன்றாமல் பார்த்தான்.நல்ல உறவைத் தொலைத்து விட்டு தான் எதைத் தேடிப் போகிறோம் என்று தெரியாமல் கலங்கினான்.அவளது தெளிவான முடிவால் உறவுகள் சேரும். தெளிவில்லாத, குழப்பமான, சுயநலமான தனது முடிவால் நல்ல உறவைத் தொலைத்து நிற்பதை உணர்ந்தான்.
***************************
தமிழ்நிலா