tamilnadu epaper

ஊர்க்காவலர்

ஊர்க்காவலர்

 

"புதிதாகவோ சந்தேகப்படும்படியாகவோ யாராவது நடமாடினால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் " என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடி ரோந்து வந்து கொண்டிருந்தது போலீஸ் வாகனம்! 

 

இதைக் கேட்டவுடன் பழைய ஊர்த்தலைவரான ஆறுமுகம் மிகவும் வேதனைப்பட ஆரம்பித்தார். 

ஆறுமுகம் தலைவராக இருந்த போது ஒழுங்காக இருந்தது. ஆனால் இப்போது திருட்டும் கொலையும் அதிகரித்து வருகிறது! 

 

ஊரில் உள்ளவர்கள் வீட்டை பூட்டிப்போட்டுவிட்டு வெளியூரில் செட்டில் ஆவது வழக்கமாகிவிட்டது! 

அந்த ஊரில் அவர்கள் வம்சாவளியைத் தவிர வேறு புது நபருக்கு வீடு வாடகைக்கோ, கிரயத்துக்கோ விடுவதில்லை என பஞ்சாயத்து கூடி முடிவெடுத்தார்கள். அதன்படி அதாவது ஆறுமுகம் ஊர்த்தலைவராக இருந்த வரை ஒழுங்காக இருந்தது. 

 

ஆனால் அவருக்குப் பின் வந்தவர்கள் அதை ஒழுங்காக வழிநடத்தத் தவறியதன் விளைவு இன்று ஊருக்குள் முகம் தெரியாத நபர்களின் ஆதிக்கம் அதிகமாக வழித்திருட்டும், இரவில் ஆள் இல்லாத வீட்டில் திருடு நடப்பதும் அதிகரித்துக்கொண்டே வந்தது! 

 

எல்லோரும் பயந்து நடுங்கினார்களே தவிர 

தடுப்பதற்கான எந்த முயற்சியும், தற்போதைய தலைவரிடம் முறையிடவும் இல்லை! 

 

வேறு வழியின்றி ஆறுமுகம் ஒருநாள் ஊர்த்தலைவர் வீட்டிற்கு சென்றார்! 

"தலைவரே! ஊரில் திருட்டு நிறைய நடக்குது! யார் என்று காவல்துறை கண்டுபிடிக்கும் வரை புதிய நபர்களை ஊருக்குள் வரவோ அல்லது குடியிருக்கவோ அனுமதிக்க வேண்டாம்! 

மேலும் புரோக்கர்கள் அதிக விலைக்கு வீடு வாடகை மற்றும் ஒத்திக்கு முன்பின் தெரியாதவர்களை அழைத்து வந்து வீட்டு உரிமையாளர்களிடம் அதிக விலைக்கு வாடகை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி இரு பக்கங்களிலும் கமிஷனை வாங்கிக்கொண்டு கை மாற்றி விடுகின்றனர்! 

 

இது ஒருபுறமிருக்க வெளியூரில் செட்டில் ஆகி விட்ட நமது ஊர் காரர்களின் வீடுகள் இங்கே பூட்டிக்கிடப்பதும் திருடுபவர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது! எனவே வீட்டிற்கு ஒருவர் கட்டாயம் அவர்கள் வீட்டிற்கு வந்து நிரந்தரமாக இருக்க வேண்டும். அல்லது வந்து வந்து போக வேண்டும்!" என்று ஆறுமுகம் சொன்னதைக் கொஞ்சமும் மதிக்காமல்   

அவரை போகச் சொல்லி விட்டு அலட்சியமாகச் சிரித்தார்! 

 

இவ்வளவு சொல்லியும் தன் பேச்சு எடுபடாமல் போனதால் மிகவும் மனமுடைந்து வெளியேறினார் ஆறுமுகம்! 

 

ஒருநாள் மிக முக்கியமான திருமணம் ஒன்றிற்கு கிளம்பிய ஊர்த்தலைவர் நம்பகமான பக்கத்து வீட்டுக்காரரிடம் மட்டும் 

சொல்லிவிட்டு கிளம்பினார். 

 

மறுநாள் வீடு திரும்பிய ஊர்த்தலைவர் வீடு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியாகி பக்கத்து வீட்டுக்காரரிடம்

கேட்க, "நான் இங்கே தான் இருந்தேன். இரவில் தான் யாரோ வந்திருக்கக்கூடும்!"

என்று தனது வாக்குமூலத்தைக் கொடுத்தார். 

 

திடீரென ஞாபகப் வந்தவராக வீட்டுக்குள் சென்று எல்லாப் பொருட்களையும் சரி பார்த்தார். கொஞ்சம் பணம், நகை எல்லாம் அப்படி அப்படியே இருந்தன. 

திருட்டு நடப்பதிலிருந்தே

உஷாரான தலைவர் அனைத்து நகைகளையும் பெரும் பணத்தொகையையும்

பேங்கில் ஏற்கெனவே பத்திரப்படுத்தியிருந்ததால் தப்பித்தார். 

 

இருந்தாலும் வந்த திருடனைப் பிடித்து விடவேண்டுமென்ற ஆவலில் சி. சி. டி. வி கேமராவைப் பார்த்த போது தான் அது கடந்த இரண்டு வாரமாகவே வேலை செய்யாதது ஞாபகத்துக்கு வந்தது. 

 

இதை வெளியே சொன்னால் நமக்குத் தான் அவமானம் என

நடந்ததை மறைத்து அப்படியே விட்டுவிட்டார். 

 

அடுத்த நாள் ஊரைக் கூட்டி எல்லோருடைய சம்மதத்துடன் அந்நியர்களை யாரும் குடி வைக்கக்கூடாது என்றும் பூட்டிக் கிடக்கும் வீட்டு உரிமையாளர்கள் அத்தனை பேரையும் உடனடியாக வரச் சொல்லி அடுத்த கட்ட நடவடிக்கை உடனடியாக எடுக்க ஆதரவு கோரினார். 

 

ஊரில் இருப்பவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

ஏதோ நல்லது நடந்தால் சரி என ஒத்துழைப்பு கொடுத்தனர். 

 

ஆனால் என்ன நடந்தது எதனால் இப்படி அதிரடி ஆக்ஷன் என ஊர்த்தலைவருக்கு உணர்த்த தான் நடத்திய நாடகம் என ஆறுமுகம் சொல்லாமல் யாருக்கும் தெரியப்போவதில்லை! 

 

தான் செய்ய நினைத்தது நல்லபடியாக நிறைவேறிய சந்தோஷத்திலும், ஊரைக் காப்பாற்றி விட்ட திருப்தியிலும் நிம்மதி பெருமூச்சு விட்டார் ஆறுமுகம். 

 

      பிரபாகர்சுப்பையா, மதுரை-12.