மலைகளின் இளவரசி* என அழைக்கப்படும் ஊட்டி - நீலகிரி மாவட்டத்தின் தலைநகரம். இது முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. கடல் மட்டத்திலிருந்து உயரம்: 2,240மீ.
உதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர். எனவே உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் *ஒட்டெகமண்ட்* எனவும் அழைக்கப்பட்டது. அதுவே சுருங்கி *ஊட்டி* என்றானது.
இந்தியாவிலேயே மிக அழகான மலைப்பிரதேச ஸ்தலங்களில் ஒன்றான உதகை,தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பொதிந்துள்ள ஒரு வைரம். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோடை விடுமுறை பிரதேசமாக இருந்த ஊட்டி இன்று தமிழகத்தின் மிகமுக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
ஏரிகள், தோட்டங்கள், பூங்காக்கள், மலையுச்சிகள்,நீர்வீழ்ச்சிகள்... இவைமட்டுமின்றி தங்குவதற்கு ஏதான பல இடங்கள் நிறைந்ததால் உதகை *இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து* என்று செல்லமாக அழைக்கப் படுகின்றது.
இங்கிருந்து 19 கிமீ தொலைவில் குன்னூர் மற்றும் 31 கிமீ தொலைவில் கோத்தகிரி உள்ளது. இந்த மூன்று இடங்களுமே மலைவாசஸ்தலங்கள் ஆகும். கோவையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஏரிகள், அடர்ந்த காடுகள், பசும் புல்வெளிகள், வித்தியாசமான தாவரங்கள், தூய்மையான காற்று என்று மக்களை கவர்ந்திழுக்க கூடிய ஏராளமான சிறப்பம்சங்கள் இருக்கின்றன.
மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயிலில் ஊட்டிக்கு செல்வது இன்னும் சுவாரசியமான அனுபவமாக இருக்கும். தாவரவியல் பூங்கா, ஏரியில் படகு சவாரி, பல வண்ண நிறங்களில் ஏராளமான ரோஜாக்கள் அணிவகுத்து இருக்கும் பூங்கா, அருங்காட்சியகம் போன்றவை ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள்.
நீல நிற புகை போன்ற படலம் எப்பொழுதும் சூழ அமைந்துள்ளதால் நீலகிரி என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு 2549 ச.கி.மீ, தலைமையிடம் உதகமண்டலம் (ஊட்டி) கடல் மட்டத்திலிருந்து 2240 மீட்டர் உயரம் உள்ளது. ஆண்டிற்கு 121 சென்டிமீட்டர் மழை பெய்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் பகுதியில் நீலகிரி மாவட்டம் உள்ளது.
ஏப்ரல் மே ஜூன் மாதங்கள் உதகமண்டலம் செல்வதற்கு சரியான காலம்.
*ஊட்டி ஏரி*
ஊட்டி ஏரி 1842 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை ஏரி.
*பொட்டானிக்கல் கார்டன்*
அரசு தாவரவியல் தோட்டமான இப்பூங்கா 1847 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள் மற்றும் தாவரங்களால் அழகு செய்யப்பட்ட அற்புத பூங்கா இது. மற்றும் ஏராளமான மலர் செடி வகைகள், அபூர்வ தாவரங்களும், மூலிகை செடிகளும் இங்கு உள்ளன. செய்கின்றன. 2 கோடி வருடங்களுக்கு முந்திய கல்மரம் இங்கு உள்ளது. இதன் பரப்பளவு 22 ஹெக்டேர்.
*தொட்டபெட்டா*
நீலகிரி மாவட்டத்திலேயே அதிக உயரமான சிகரம் தொட்டபெட்டா தான். இதன் உயரம் 2636 மீட்டர்.
*நீலகிரி மலை ரயில்*
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்லக்கூடிய இந்த மலை ரயில், unescoவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது .ஊட்டியின் கரடுமுரடான மலைப்பாதையில் கம்பீரத்துடன் செல்கிறது. இந்த ரயிலில் செல்வதன் மூலம் ஊட்டியில் ரம்மியமான வானிலையையும், ஊட்டி மலையின் அழகையும் ரசிக்கலாம். கிட்டத்தட்ட 5 மணி நேர பயணம் மூலம் ஊட்டியை அடையலாம்.
*எமரால்டு ஏரி*
இந்த ஏரி இருக்கும் இடத்திலிருந்து சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் காண்பது அவ்வளவு அழகாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும்.
*முதுமலை வனவிலங்கு காப்பகம்*
கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் முதுமலை தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகமாகும். இது யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. யானைகள், காட்டெருமை, புலி, சிறுத்தை, மான், பறக்கும் அணில், சிவப்பு அணில், காட்டுப்பன்றி, முயல், போன்ற பல்வேறு வகையான விலங்குகள் இங்கே இருக்கின்றன. வனத்துறையினரின் வாகனத்தில் காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக பயணித்தவாறே இவைகளை கண்டு ரசிக்கலாம்.
*ரோஸ் கார்டன்*
இந்த தோட்டம் சுமார் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை உள்ளடக்கிய ஐந்து மாடிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இடமாகும். இங்கே 20,000 க்கும் மேற்பட்ட வகையான ரோஜாக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
*பைகாரா அருவி*
பைகாரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைகாரா அருவியாக இங்கே உருவெடுக்கிறது. சுமார் 55மீ உயரத்திலிருந்து சலசலத்துக் கொட்டும் அருவி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவந்திழுக்கிறது. இங்கே குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை
*பைகாரா படகு சவாரி*
பைகாரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலை அருகே அமைந்திருக்கிறது பைக்காரா அணை. இங்கே இருக்கும் படகு நிலையத்தில் நீண்டதூரம் படகுசவாரி செய்யலாம். மலைகளுக்கு நடுவே பயணம் செய்வதைப்போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.
இந்த முக்கியமான இடங்கள் தவிர மேலும் பல சுற்றுலா இடங்கள் ஊட்டியில் காணலாம்
உதகமண்டலம் வந்தடைய தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதி உண்டு. அருகில் உள்ள விமான தளம் கோவை.
ராஜா சக்ரவர்த்தி,
சென்னை 41