tamilnadu epaper

எங்கள் ஊர் கல்லாவி சிறப்பு

எங்கள் ஊர் கல்லாவி சிறப்பு

எங்கள் ஊர் கல்லாவி கிருஷ்ணகிரி மாவட்டம்,

ஊத்தங்கரை தாலுக்காவில் உள்ளது.

எங்கள் ஊர் கிராமமும் இல்லை.நகரமும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்டது. எங்கள் ஊர்

ஊத்தங்கரை சட்ட மன்றத் தொகுதிக்குள்ளும், கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குள்ளும் வருகிறது.

 

எங்கள் ஊருக்குள் அமைந்துள்ள புராதன கோயில்கள் ஊருக்கு அழகு சேர்க்கின்றன. ஊரின் நடுவில் தேவிராதா, தேவிருக்மணி சமேதர ஸ்ரீவேணுகோபாலசாமி கோயில் அமைந்துள்ளது.

புராதனமான இக்கோயில்

அனைவரையும் கவர்கிறது. வருடத்திற்கு ஒரு முறை ஸ்ரீவேணுகோபாலசாமி தேர் கொண்டாடப்படுகிறது. விழா நடைபெறும் பத்து நாட்களும் தம்பதி சமேதரராக ஊருக்குள் தேரில் வலம் வரும் சாமியின் திருக்கோலம் கண்கொள்ளா காட்சி. விழா நடைபெறும் நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய விருந்தினர்கள் இருப்பார்கள்.

 

ஊர் ஓரமாக தேவிஸ்ரீபட்டாளம்மன் ஆலயம் அமைந்திருக்கிறது. ஊருக்குத் தேவையான வளங்களையும், மழையையும் அள்ளித்தரும்

இந்த தாயை வழிபட தினமும் நிறைய பேர் வருகிறார்கள். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் நிறைய பெண்கள் கோயிலுக்கு வந்து, இந்த சக்தி வாய்ந்த அம்மனை வழிபடுகிறார்கள்.

 

ஊரிலிருந்து சிறிது தூரத்தில் ஸ்ரீவேடியப்பசாமி கோயிலும், பக்கத்தில் ஸ்ரீமுனியப்பசாமி கோயிலும் உள்ளன. தொலை தூரங்களிலிருந்தும் இங்கு நிறைய பக்தர்கள் வருகிறார்கள். காது குத்துதல், மொட்டை அடித்தல், பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றுதல், ஆடு வெட்டுதல் போன்றவை தினமும் இங்கு நடந்து கொண்டேயிருக்கின்றன.

 

இது தவிர ஊரில் மசூதியும், தேவாலயமும் உள்ளன. அனைத்து இன மக்களும், அனைத்து மத மக்களும் எங்கள் ஊரில் ஒற்றுமையாக வாழுகிறார்கள்.

 

கல்வி வளர்ச்சியில் எங்கள் ஊர் சிறந்து விளங்குகிறது. அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு

பெண்கள் உயர்நிலைப் பள்ளி, அரசு துவக்கப் பள்ளி ஆகியவைகள் எங்கள் ஊரில் உள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் இவைகள் சிறப்பாக செயல்பட்டு, நல்ல தேர்ச்சி விழுக்காட்டை அளித்து ஊருக்கு பெருமை சேர்க்கின்றன. இது தவிர சிறப்பான தனியார் பள்ளிகளும் எங்கள் ஊரில் உள்ளன.

 

எங்கள் ஊரில் சிறப்பான மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன. அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப

சுகாதார நிலையம் இங்கு இருக்கிறது. சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராம மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

இது தவிர சிறந்த தனியார் மருத்துவ மனைகளும் இங்கு உள்ளன.

 

ஊராட்சி அலுவலகம் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது. ஊராட்சி சிறப்பாகச் செயல்படுவதால் குடிநீர்,

மின்சாரம், சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவைகள் மக்களுக்கு நல்லபடியாக கிடைக்கின்றன.

 

இங்கு சிறப்பான நூலகம் ஒன்று உள்ளது. பல தரமான புத்தகங்கள் இங்கு உள்ளன. பள்ளி மாணவர்களும், நூல் வாசிப்பாளர்களும் இதை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நூலகத்துக்கு தினமும் படிக்க வருகிறார்கள்.

 

எங்கள் ஊரின் ஓரத்தில்,

ரயில் நிலையம் இருக்கிறது. ஊரின் பெயர் கல்லாவியாக இருந்தாலும், ரயில் நிலையத்தின் பெயர் தாசம்பட்டி என்றே அழைக்கப் படுகிறது. பல ரயில்களும், பல எக்ஸ்பிரஸ்களும் இதன் வழியாகச் செல்லுவதால், இது மக்களுக்கு வசதியாக இருக்கிறது.

 

எங்கள் ஊர் மக்கள், மளிகை, ஜவுளி, உணவகம், விவசாயம் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்கிறார்கள். ஊரின் முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல் படுகிறார்கள். எனவே எங்கள் ஊர் விரைவில் பெரிய நகரமாக மாறிவிடும் என்பதில்

ஐயமில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

.................................................

அனுப்பியவர் முகவரி

.........................................

இரா.வசந்தராசன்

கல்லாவி (P.O)

கிருஷ்ணகிரி