tamilnadu epaper

எங்கள் ஊர் செங்கல்பட்டு சிறப்பு

எங்கள் ஊர் செங்கல்பட்டு சிறப்பு

சென்னையின் நுழைவாயில்* என்று அழைக்கப்படும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

பாலாறு ஏரியின் கரையில் அமைந்துள்ள சிறிய நகரமாகும்.

 

 

*செங்கழுநீர் மலர்*

 

இங்குள்ள நீர்நிலைகளில் செங்கழுநீர் மலர் பூத்துக் குலுங்கியதால் செங்கழுநீர்பட்டு என்று முதலில் அழைக்கப்பட்டு, பின்னர் அதுவே செங்கல்பட்டு என்று மருவியது. செங்கல்பட்டு, பல்லவர் காலத்தில் உருவான பழமையான நகரமாகும். இங்கு மூன்று பக்கம் மலைகளும், ஒரு பக்கம் கொளவாய் ஏரியும் உள்ளது. இம்மாவட்டத்தில் ஏரிகள் அதிகமாக உள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி தமிழ்நாட்டிலுள்ள பெரிய ஏரிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது.

 

இது மாநில தலைநகரான சென்னைக்கு 60 கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 45-இல் அமைந்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையம் ஆனது, தெற்கு ரயில்வேயின் முக்கிய தொடருந்து சந்திப்புகளில் ஒன்றாகும்.

 

*செங்கல்பட்டு அரசு மருத்துவமனை*, இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக உள்ளது. இம்மருத்துவமனைக்கு சொந்தமாக மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த நகரத்தில் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றமும், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் உள்ளன.

 

விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட செங்கல்பட்டு கோட்டை, அதன் பக்கவாட்டில் உள்ள ஏரி ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்நகரில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிலையங்கள் உள்ளன.

மதுராந்தகம் ஏரிக்குப் பிறகு, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் இரண்டாவது பெரிய ஏரியாக கொலவை ஏரி உள்ளது. கொலவை ஏரி வற்றாத தன்மையுடைய ஏரியாகும். சென்னையில் உள்ள ஏரிகள் வறண்டு போகும் போது, இது சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு கூட தண்ணீரை வழங்குகிறது. செங்கல்பட்டு விரைவாக நகரமயமாக்கப்பட்டதால் ஏரி தற்போது மாசுபட்டு வருகிறது. இந்த ஏரியில் அதிகாலை சூரிய உதயமும், சந்திரன் ஏரிக்கு மேலே அதன் நீரின் மேல் இரவில் வருவதும், கண்களுக்கு அழகாக இருக்கும். செங்கல்பட்டு நிலையத்திலிருந்து பரணூருக்கு ரயிலில் செல்லும் போது, ஏரியின் அழகை காண முடியும்.

 

தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கியமான நதிகளில் ஒன்றான பாலாறு செங்கல்பட்டு மாவட்டத்தின் வழியாக சுமார் 54 கிலோ மீட்டர் பயணிக்கிறது. 

 

ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்களான சிறுசேரி SIPCOT தொழிற்பூங்கா இம்மாவட்டத்தில் திருப்போரு்ர் வட்டத்தில் அமைந்துள்ளது.

 

 Ford Motors, Hyundai, Rane போன்ற முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருவதால் இதனை செங்கல்பட்டு மாவட்டத்தின் டெட்ராயிட் என்று அழைப்பது மிகையல்ல. செங்கல்பட்டு நகரை ஒட்டியுள்ள மகிந்திரா வோல்டு சிட்டி ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக உள்ளது. இது இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தொழில் நகரமாகும். இன்போசிஸ், பி.எம்.டபிள்யூ, டி.டி.கே குழுமம், கேப்ஜெமினி, ரெனால்ட் நிஸ்ஸான், விப்ரோ, டெக் மகிந்திரா ,டி.வி.எஸ். குழுமம் போன்ற முன்னனி தொழில் நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் செயல்பட்டுவருகின்றன. சுமார் 25,000 க்கும் அதிகமான பணியாளர்கள் இம்மண்டலத்தில் பணியாற்றி வருகின்றனர்.

 

*கோவில்கள்*

 

மன அமைதி தரும் ஸ்ரீஅகோர வீரபத்திரர் கோயில் இருக்கும் ஹனுமந்தபுரம், நலம் யாவும் தரும் ஸ்ரீநந்தீஸ்வரர் இருக்கும் நந்திவரம், நரசிம்மர் கோயில் இருக்கும் சிங்கப்பெருமாள் கோயில், நித்ய கல்யாண பெருமாள் வீற்றிருக்கும் திருவிடந்தை, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடம், குளத்திலிருந்து சங்கு வெளிப்படும் திருக்கழுக்குன்றம், ஹயக்கிரீவர் கோயில் இருக்கும் செட்டிபுண்ணியம், சிவன் கோயில் இருக்கும் அச்சரப்பாக்கம் ஆகிய திருக்கோயில்கள் இந்த இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன.

 

*பறவைகள் சரணாலயம்*

 

இங்குள்ள வேடந்தாங்கலுக்கு கனடா, சைபீரியா, வங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்கிறது. பறவைகள் சரணாலயத்திற்குப் புகழ்பெற்ற வேடந்தாங்கல், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கிறது.

 

கோவளம் கடற்கரை, முட்டுக்காடு படகு குழாம், முதலியார்குப்பம் படகு குழாம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா போன்ற சுற்றுலாத் தலங்களும் இம்மாவட்டத்தில் உள்ளன

 

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி , தமிழக அரசின் ஏழு சட்டக்கல்லூரிகளில் ஒன்றாகும்.

 

சென்னை சர்வதேச விமான நிலையம் இம்மாவட்ட எல்லைக்குள், திரிசூலம் ரயில் நிலையத்திற்கு எதிரில் அமைந்து உள்ளது.

 

கீதா ராஜா சென்னை