சென்னையிலிருந்து படப்பை வழியாக காஞ்சீபுரம் செல்லும் வழியில் வாலாஜாபாத் ஊரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் "தென்னேரி' என்ற வரலாற்றுச் சிறப்பும், ஆன்மிகச் சிறப்பும் உடைய எங்கள் ஊர் அமைந்துள்ளது. சென்னை - ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சீபுரம் சாலையில், சுங்குவார்சத்திரத்திலிருந்தும் இவ்வூருக்கு வரலாம்.
எங்கள் தென்னேரியின் மேற்குப்பகுதியில் "கடல்' போன்று காட்சி அளிக்கும் ஏரி அமைந்துள்ளது.
சங்க இலக்கியமான பத்துப்பாட்டு, நூல்களில் ஒன்றான, பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான் எனக்கூறுகிறது.
திரைதருமரபின் உரவோனும் பல
மலர் தலையுலகத்து மன்னுயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர்ப்பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரியன்ன வசை நீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் (பெரும் : 31 36)
என்று இளந்திரையனை பெரம்பாணாற்றுப்படை புகழ்ந்து பேசுகிறது! இம்மன்னனால் இந்த திரையன் ஏரி என்று பெயரிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பின்னாளில் இது தென்னேரி என அழைக்கப்பட்டது.
பல்லவ மன்னர்களில் பல்லவமல்லன் என்று சிறப்பித்துப் போற்றப்பட்ட இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 731 - 796) வெளியிட்ட காசாக்குடி செப்பேடுகளில், இவ்வேரி திரளலயதடாகம் எனவும் திரையன் ஏரி எனவும் குறிப்பிடப்படுவது சிறப்பாகும்.
பல்லவ மன்னர்களுக்குப் பின்னர் ஆட்சி செய்த சோழ மன்னர்கள் இங்கு இரண்டு கோயில்களைக் கட்டி வளம் பெருக்கினார்கள். இவ்வூர் உத்தமசோழ சதுர்வேதி மங்கலம் எனவும் திரையனூர் ஆன குலோத்துங்கசோழ சதுர்வேதி மங்கலம் எனவும் அழைக்கப்பட்டது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் திரையனூர் என்றும் ஏரி தென்னேரி எனவும் அழைக்கபட்டன.
காஞ்சீபுரம் மற்றும் நத்தம்பேட்டை, கலியனூர், ஊத்துக்காடு பகுதிகளில் பெய்யும் மழை நீரால்,மேலிருக்கும் குளங்கள் நிரம்பி பின்னர் 16 கி.மீ. நீர்வரத்துக் கால்வாய் மூலம், தென்னேரிக்கு நீர் வந்து சேருகிறது. காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் கிழக்கு கோபுரத்தின் மீது பெய்யும் மழைநீர் இவ்வேரியில் கலப்பதாகவும், பாரம்பரிய நம்பிக்கையுடன் ஊரார் சிறப்பித்துக் கூறுகின்றனர்.
தென்னேரியின் ஏரிக்கரையின் நீளம் 3.80 கி.மீ. இதன் பரப்பளவு 15.5 சதுர மைல். நீர்ப்பாசன பரப்பு 5858 ஏக்கர். கொள்ளளவு 18 அடி. இவ்வேரிக்கு 5 மதகுகள், 5 கலிங்குகள் உள்ளன. 32 கிராமங்கள் இவ்வேரியினால் பயன் அடைகின்றன. இவ்வேரிக்கு அருகில் மடவிளாகம், அயிமச்சேரி, தென்னேரி என்ற ஊர்கள் உள்ளன. ஏரிக்கரையில் எட்டியம்மன் என்ற பெயரில் சப்த கன்னியர்களின் கோயில் சிறப்பாக வழிபடப் பெறுகிறது.
தென்னேரி கிராமத்தில் கந்தளீசுரவரர், ஆபத்சகாயேசுவரர் என்ற இரு சிவாலயங்களும் விஜய நாராயணப்பெருமாள் (கல்யாண வெங்கடேசப் பெருமாள்) கோயிலும் உள்ளன. சிவன் கோயில்கள் இரண்டும் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாகப் போற்றிப் பராமரிக்கப்படுகிறது.
விஜயநகர மன்னர்கள் காலத்தில் பெரும்பாலும் ஏரிகள் சமுத்திரம் என்றே குறிப்பிடப்படுகிறது. அவர் அமைத்த மதகினை இன்றும் காணலாம். நீர் வெளியே எளிதாக செல்வதற்கு வளைவான அமைப்புடன் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அதில் சிற்ப வேலைப்பாடுகளும், மதகினை மூடுவதற்கு உள்ள பலகையினை சொருகுவது போன்ற குறுக்கு கல்லும் உள்ளது. இக்கல்லினை இரண்டு சிம்மங்கள் தாங்கியிருப்பது போன்று சிற்ப வேலைப்பாட்டுடன காணப்படுவது சிறப்பு.
தென்னேரி கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் செம்பியன்மாதேவி வாய்க்கால், கண்டராதித்த வாய்க்கால், மும்முடிச்சோழன் வாய்க்கால், உத்தமசோழவதி என்ற நீர் ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அண்மையில் எங்கள் கிராமத்திற்கு வருகை தந்த அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் எங்கள் ஊரின் அழகையும் வரலாற்றுச் சிறப்பையும் பற்றி முகநூலில் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார். இயற்கை எழில்மிக்க எங்கள் தென்னேரி கிராமம் வரலாற்றுச் சிறப்பும், ஆன்மீகச் சிறப்பும் கொண்ட கிராமமாகத் திகழ்கிறது. வாய்ப்பு கிடைக்கும் பொழுது எங்கள் தென்னேரி கிராமம் வந்து ஏரி மற்றும் கோயில்களைக் கண்டு போற்றி மகிழ அனைவரும் வாருங்கள்.