tamilnadu epaper

எங்கள் ஊர் யா .ஒத்தக்கடை சிறப்பு

எங்கள் ஊர் யா .ஒத்தக்கடை சிறப்பு

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் ஊர் யானைமலை ஓத்த கடை .இந்த யானைமலையின் நீளம் 4 கிலோமீட்டர் அகலம் 1200 மீட்டர் ,உயரம் 400 மீட்டர் கொண்டது.

             இந்த யானைமலை ஒத்தக்கடையில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக யோக நரசிம்மர் கோவில் சமணர் சைவம் வைணவ வழிபாட்டுத் தலங்களை கொண்ட மலை. நடு நாயகமாக யோக நரசிம்மர் அமர்ந்துள்ளார். அருகில் முருகன் கோவிலும் உச்சியில் சமணர் குகை,யானைமலை வடகோடியில் வேதநாயகர் ஆன பெருமாள் கோவில் என பக்தி மணத்தோடு இந்த மலை விளங்குகிறது.

மதுரையில் இருந்து வரும்போது பிரமாண்ட மலை நம்மை வரவேற்கிறது. அங்கு யானை ஒன்று முன்புறம் தும்பிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்துடன் இருப்பதைக் கண்டு வியக்கலாம். இதன் காரணமாக இந்த மலை யானை மலை என்று ஆனது.

இதற்கு மற்றொரு கதையும் உண்டு .பாண்டிய நாட்டில் வாழ்ந்த சில போலி சமணத் துறவிகளுக்கு விக்ரம பாண்டியனை பிடிக்கவில்லை .விக்ரமபாண்டியனை பழி வாங்க அவன் மீது பகை கொண்டிருந்த பல்லவ மன்னனை அவர்கள் அறிந்திருந்தனர். பாண்டியனை போரில் வெல்ல முடியாத பல்லவ மன்னன் தந்திரம் செய்து வெல்லநினைத்தான் .அதனால் போலி சமண துறவிகளை காஞ்சிக்கு வரவழைத்து பாண்டிய நாட்டை அழிக்கும் விதமாக ஒரு யாகம் செய்ய சொன்னான்.

     அவர்களும் சம்மதித்து வேப்பெண்ணையை தீயில் விட்டு எட்டி குச்சிகளை கொண்டு கொடூரமாக ஒரு கேள்வியை காஞ்சியில் செய்தார்கள் .அந்த வேள்வியில் இரும்பு உலக்கையை ஏந்தி கொண்டு ஒரு பெரிய யானை தீயில் இருந்து வெளியே வந்தது. அந்த சமயத் துறவிகள் அந்த யானையிடம் "போய் பாண்டிய நாட்டை அழித்துவிட்டு வா ..!"என்றார்கள் .அந்த யானையும் காஞ்சியில் இருந்து புறப்பட்டு மதுரையை நோக்கி விரைந்து ஓடியது.

     யானை வருவதை கண்ட மக்கள் விக்கிரம பாண்டியனை சந்தித்து முறையிட்டனர் உடனே பாண்டிய மன்னன் நால் வகை படைகளை தயார் நிலையில் வைத்து விட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்று இறைவனை வேண்டினான். "சிவபெருமானே நீதான் நான் நாட்டை காக்க வேண்டும்" என வேண்டினான் .கருவறையில் இருந்து புறப்பட்ட சுந்தரேஸ்வரர் மேரு மலையை வில்லாக பிடித்தார், வாசுகி எனும் பாம்பை அதில் நாணாக கட்டினார். அந்த யானை அழிப்பதற்கு ஏற்ற அம்பாக கூடலழகர் கோவில் உள்ள திருமால் நரசிம்மர் வடிவில் அந்த வில்லில் கணையாக வந்தார். மதுரை வட எல்லை சென்ற சிவபெருமான் யானை மீது அம்பு எய்தார். அடுத்த நொடியே அதை யானை மறைந்து மலையாக உருவெடுத்தது .அம்பாக புறப்பட்டு சென்ற நரசிம்மர் அந்த மலைக்குள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.

         இன்றும் ஆனைமலையின் சிவனுடைய வில்லிலிருந்து அம்பாக வந்து யானையை அழித்துவிட்டு மலைகுகையில் அமர்ந்திருக்கும் நரசிம்மரை தரிசிக்கலாம் .இந்த வரலாற்றை திருவிளையாடல் புராணத்தில் "யானை எய்த படலத்தி"ல் பரஞ்ஜோதி முனிவர் பாடியுள்ளார்.

யானை ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றம் தரும் இந்த மலை வெகு அழகு .இதன் அடிவாரத்தில் அமைந்துள்ள குடைவரை கோவிலில் ஸ்ரீ யோக நரசிம்மர் நரசிம்ம வள்ளி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். நரசிம்மர் கோவில்களிலேயே மிகப்பெரிய நரசிம்மர் மூலவர் விக்கிரகத்தை கொண்ட கோவிலாக இந்த யானைமலை ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது.

நீங்களும் மதுரைக்கு யானைமலை ஓத்த கடைக்கு வாருங்கள். யோக நரசிம்மரை வழிபட்டு யோக பலன்களை பெற்றுச் செல்லுங்கள்.

 

எழுதியவர்:சத்யா-சரவணன்,யா.ஒத்தக்கடை,மதுரை-625107