tamilnadu epaper

எங்க போய் முட்டிக்க?

எங்க போய் முட்டிக்க?

 

தன்னுடைய அபிமான நடிகர் "ஆகாஷ்காந்த்"ன் திரைப்படம் மறுநாள் ரிலீஸ் ஆவதைக் கொண்டாடும் விதமாய் ரசிகர் மன்ற ஷோ, பொது மக்களுக்கு பிரியாணி விருந்து, கட் அவுட், பேனர், ஆர்ச், என ஏகப்பட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்த கணேஷ் அந்த செய்தி கேட்டு அதிர்ந்தான்.

 

  "நடிகர் ஆகாஷ் காந்த் நடித்த 'சாரங்கன்' படத்தின் கதை தன்னுடையது என்று ஒரு எழுத்தாளர் வழக்கு தொடர்ந்திருக்கும் காரணத்தினால் நீதிமன்றம் அப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளது"

 

அதீத சோகத்திற்கு ஆளான கணேஷ் அன்று மாலையே தீக்குளித்துத் தற்கொலை செய்ய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

 

அந்த எதிர்பார்ப்பை காசாக்கும் எண்ணத்தோடு டைரக்டர் ரவியும், ஆகாஷ் காந்த்தும் எழுத்தாளரைச் சந்தித்து ஒரு பெரும் தொகையை கொடுத்து அவரைச் சரிக்கட்டி, கேஸை வாபஸ் வாங்கச் செய்கின்றனர்.

 

கணேஷின் மரணம் தந்த விளம்பரத்தால் படம் பிய்த்துக் கொண்டு ஒடி, 400 கோடி ரூபாய்க் கலெக்‌ஷனை எளிதாய்த் தாண்டியது.

 

மகிழ்ந்து போன டைரக்டர் ரவி "என்ன ஆகாஷ் சார்... உங்களுக்காக தீக்குளித்த உங்க ரசிகர் குடும்பத்திற்கு ஏதாவது நிதியுதவி செய்யலாமா?" என்று கேட்க.

 

  "நோ... நோ.. என்னோட ரசிகன் என்றால் என் படத்தை பார்த்து ரசித்து விட்டுப் போக வேண்டியது தானே?.. நானா அவனைத் தீக்குளிக்கச் சொன்னேன்?... அவன் முட்டாள்தனமாகச் செஞ்ச காரியத்துக்கு நாம நிதியுதவி வேற செய்யணுமா?... போங்க டைரக்டர் சார்... போய் "சாரங்கன் 2" படத்திற்கான கதையை ரெடி பண்ணுங்க!"என்றார் ஆகாஷ் காந்த்.

 

முற்றும்.

 

முகில் தினகரன், கோயம்புத்தூர்.