tamilnadu epaper

ஐ.பி.எல்.: ஒரு வாரத்திற்குள் நடக்கவில்லை என்றால்... -இங்கிலாந்து முன்னாள் வீரர் எச்சரிக்கை

 ஐ.பி.எல்.: ஒரு வாரத்திற்குள் நடக்கவில்லை என்றால்... -இங்கிலாந்து முன்னாள் வீரர் எச்சரிக்கை

லண்டன்,


10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிர தாக்குதலில் ஈடுபட்டதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.


இதனால் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும் புதிய அட்டவணை குறித்த விவரங்கள் சூழ்நிலையை கவனமாக ஆராய்ந்த பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.



இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வந்த தாக்குதல் நேற்று மாலை 5 மணியளவில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது.


இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஐ.பி.எல். தொடர் மீண்டும் தொடங்கவில்லை என்றால் அது பி.சி.சி.ஐ.-க்கு பெரிய தலைவலியாக அமையும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் மாலன் எச்சரித்துள்ளார். ஏனெனில் ஜூன் மாதம் இந்தியா - இங்கிலாந்து இடையே பெரிய டெஸ்ட் தொடர் வர உள்ளதாக அவர் கூறியுள்ளார்.



இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “இந்தியாவிலோ, இலங்கையிலோ அல்லது வேறு இடத்திலோ ஒரு வாரத்திற்குள் ஐ.பி.எல். மீண்டும் நடக்கவில்லை என்றால், அவர்கள் செப்டம்பரில் தொடங்குவார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணிக்கு இங்கிலாந்துக்கு எதிராக ஒரு பெரிய டெஸ்ட் தொடர் வரவிருக்கிறது. அதற்கு முன் ஐ.பி.எல். முடிக்கப்பட வேண்டும் அல்லது அதற்கு பிறகு தொடங்க வேண்டும். இது பி.சி.சி.ஐ.-க்கு பெரிய தலைவலியாக இருக்கும். இரு நாட்டு வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு அடிப்படையில் சூழ்நிலைகள் அடுத்த வாரம் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என கூறினார்.