ஒரு மாதமாக படாத பாடுபடுத்திய இந்தக் கேசை இப்படி அசால்ட்டாகச் சரி செய்ததற்கு ஏகப்பட்ட பாராட்டு உஷாவிற்கு.
ஆம்! விஜிலன்ஸ் அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவத்தில் இன்று தன் உள்ளுணர்வு தந்த பரிசு என நினைத்துக் கொண்டாள் உஷா.
அவன் தீவிரவாதி தான் என்று இவளது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
குற்றவாளிகள் ஏதோ ஒரு விதத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இந்த கேசில் அவன் தன்னைத் தமிழன் போலத்தான் காட்டிக் கொண்டானே தவிர தீவிரவாதி இயக்கத்தில் இருப்பது போல் காட்டிக் கொள்ளவில்லை.
ஏதாவது ஒரு குளு கிடைக்காதா என்றிருந்த நிலையில் கேள்விகள் கேட்கின்ற பொழுது அவர்கள் சொல்லும் பதில் ஓம் ஆம் இந்த வார்த்தைகள் தான் அவனை காட்டிக் கொடுத்தது.
தன் இளம் வயதில் கேட்ட இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் தனக்கு ஆறுதலாக இருந்தது போல் தோன்றியது உஷாவிற்கு.
குற்றவாளியை தன் மனது தீவிரவாதி என்று சொன்னாலும் அதற்குத் தகுந்த ஆதாரங்களை ரெக்கார்ட்டிற்குக் காட்ட வேண்டியது அவசியம்.
நம் நாடு என்று வரும் பொழுது எப்படித்தான் அத்தனை தைரியம் வருகிறது பெண்களுக்குக் குறிப்பாக இந்திய பெண்களுக்கு.
கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியில் வந்தாள் உஷா.
மைசூர் நகரின் அழகு பெங்களூருக்குக் கிடையாது. ஆனால் பெங்களூரின் அழகு தனித்துவம் வாய்ந்தது.
தனது கார் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரைவர் மிகப் பெருமையுடன் ஒரு வீராங்கணையைத் தன் பொறுப்பில் அழைத்து வருவதாகப் பெருமைப்பட்டான்.
“மேம்! நீங்கள் ஒகனே ஒபவ்வா மாதிரியே உள்ளீர்கள்!” என்று கூறினான்.
“யார் அவள்?அவளைப் பற்றிச் சொல்லேன்!” என்று கன்னடத்தில் கூற
அவனோ “நீங்கள்?...என்று இழுக்க
“நான் தமிழ்நாடு!” என்றாள் உஷா.
“ ஓ! இப்ப சொல்கிறேன் மேம்!” என்று தன் கண்கள் விரிய சொல்ல ஆரம்பிக்க
உஷாவோ வண்டியை ஊரின் ஒதுக்குப்புறத்தில் நிறுத்தச் சொல்லி ஒரு குன்றின் மேல் சாவகாசமாக உட்கார்ந்து கதையைக் கேட்க ஆரம்பித்தாள்.
“இது பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த சம்பவம் மேம். சித்ர துர்கா கோட்டையைப் பாதுகாக்கும் காவலாளி கஹலே முக்தா ஹனுமாவின் துணைவியார் தான் ஒபவ்வா.
சித்தரதுர்காவை ஆண்ட கடைசி மன்னர் மதகரி நாயக்கர்.
1779ல் மைசூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த ஹைதர் அலி.
சிறிய சிறிய கோட்டைகளைக் கைப்பற்றுவதில் வல்லவர் ஹைதர் அலி. சித்ரதுக்கா கோட்டை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்ததால் அதனைக் கைப்பற்ற ஆசைப்பட்டான்.
படைகள் சித்ர துர்காவைக் கைப்பற்ற முயன்றன. ஆனால் கோட்டை உள்ளே செல்வதற்கு எந்த வழியும் இல்லாததால் உள்ளே நுழைய முடியவில்லை.
அவனால் பலமுறை படையெடுத்து வந்தும் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை.
படையிலிருந்த ஒரு வீரன் கோட்டைக்குள் செல்லும் ஒரு பிளவைக் கண்டுபிடித்தான்.
கோட்டைக்குள் நுழையும் வாயில் ஒரு பிளவு போல் இருந்தது!’.
ஏழு கோட்டைகளை உள்ளடக்கியதால் அது ‘எழுசுட்டினா கோட்’ என்று அழைக்கப்படுகிது. ஏழு வட்டங்களின் கோட்டை என்ற அர்த்தத்தில் அழைக்கப் படுகிறது.
நுழைவாயில் சிறிதாக இருந்ததால் அதற்குள் நுழைய காலம் தாழ்த்தியது ஹைதர் அலியின் படை.
இதனை அறிந்த மதகரிநாயக்கர் அப்பிளவிற்குக் காவலாளி கஹலே முக்தா ஹனுமாவை நியமித்தான். கோட்டையைக் கண்ணும் கருத்துமாக காவல் காத்தனர் அவனும் அவனது மனைவி ஒபவ்வாவும். அங்கேயே குடியிருந்தார்கள்.
“அப்படி என்றால் ஒனகே என்பது என்ன?” என்றாள்.
“ஒனகே என்பது உலக்கையைக் குறிக்கும் கன்னடச்சொல்!”
எனவே ஹைதர் அலியின் படைகள் காத்திருந்தன காலத்திற்காக.
அப்படி ஒரு சமயம் ஏற்பட்டது. கஹலே முக்தா மதிய உணவு உண்பதற்காக வீடு வந்து சேர படைவீரர்கள் ஒவ்வொரு வீரராக உள்ளே நுழையப் பிரத்தனப் பட்டுக் கொண்டிருந்தனர்.
“தண்ணீர் வேண்டும்!” என்ற தன் கணவனுக்கு அருகே உள்ள குட்டையில் நீர் எடுப்பதற்காக வந்தவள் கண்ணில் ஒரு வீரன் பட ஒபவ்வா என்ன செய்வது என்று புரியவில்லை. சிறந்த போர் பயிற்சி எடுக்காத ஒரு பெண்மணி. சண்டை போடுவதையோ போர் நடப்பதையோ பார்த்து அறியாதவள். குறைந்தபட்ச போர் பயிற்சி கூட அவளுக்குத் தெரியாது.
பயம் தொண்டையை அடைத்தாலும் கத்தினால் படைகள் தன்னையும் கொன்று தன்கணவனையும் கொன்று கோட்டைக்குள் நுழைந்து விடுவார்கள். அது நடக்காமல் காக்க வேண்டும் என்ற உணர்வு அவளுள் எழுந்தது.
“தேவுடா!” என்றவள் அங்கிருந்த உலக்கையைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
உள்ளே நுழைய முற்பட்ட வீரன் மீது ஓங்கி அடித்து பக்கத்தில் உள்ள குட்டையில் தள்ளி விட்டாள்.
அடுத்தவன் வருவதற்கு நேரம் இருந்ததால் தயாராகக் காத்திருந்தாள். அந்தப் பிளவில் ஒருவர் ஒருவராகத் தானே வர முடியும்.
இப்படியாக சில பல பேரைத் தாக்கியவள் பயமும் ரத்தமும் அவளைக் கிறங்கச் செய்தது.
தன் மனைவி தண்ணீர் எடுக்க போனவள் இன்னும் வரவில்லையே என்று நினைத்தவன் மெதுவாக வெளிவர ரத்த வெள்ளத்தில் சில வீரர்கள் கிடப்பதையும் சிலரை ஒபவ்வா இழுத்து நீரில் போடுவதையும் பார்த்தான். உடனே அபாய சங்கை ஊதி காவலர்களைத் துரிதப் படுத்தினான்.
படைவீரர்களில் பாதிப்பேர் இறந்து விட்டதால் மீதி குறைவாக உள்ள ஹைதர் அலி படை வீரர்களை நாயக்கப்படைவீரர்கள் துவம்சம் செய்தனர்.
அன்றைக்குச் சித்ர துர்கா கோட்டை காப்பாற்றப்பட்டது.
அவ்வாறு எதிரிகளை அழித்து துவம்சம் செய்த ஒபவ்வாவும் அடிகளால் காயப்பட்டிருந்தாள்.மேலும் இது பெரிய அதிர்ச்சியாக இருந்ததால் அவள் மயக்கமுற்றாள்.
அன்று மாலையே அவளது உயிர் காற்றில் இரண்டறக் கலந்தது.
கர்நாடகாவில் வீரே வனிதா..வீரபெண்மணிகளின் வரிசையில் அவளும் வந்தாள்.
இந்தப் பிளவு இன்றும் “ஒனகே ஒபவ்வா கிண்டி” என்று அழைக்கப்படுகிறது. கிண்டி என்பது பிளவு, துளை என்பதற்கான கன்னடச் சொல்.
“சித்திர துர்காவில் அரசு விளையாட்டு மைதானத்திற்கும் அப்பெயர் வைக்கப்பட்டுள்ளது அல்லவா?” என்றாள் உஷா.
“ஆம்! “வீரே வனிதே ஒனகே ஒபவ்வா ஸ்டேடியம்” என்று அழைக்கப்படுகிறது மேம். உங்களைப் பார்க்கும் பொழுது எனக்கு அவள் ஞாபகம் தான் வருகிறது!” என்றான் டிரைவர்.
“சரி! போகலாம் வா! என் பெயரும் சரித்திரத்தில் இடம்பெறுமோ!” என்று சிரித்துக் கொண்டே காரை நோக்கி நடந்தாள் உஷா.
காலமும் சிரித்துக் கொண்டே காத்திருக்கிறது அவள் புகழ் பாட!…
-K. BANUMATHI NACHIYAR
SIVAGIRI