"ஒன்பதுக்கு அடுத்து என்ன வரும்?" என்று யு. கே. ஜி., படிக்கும் தன் மகன் சூர்யாவிடம், குமார் எத்தனை முறை சொன்னாலும் விளையாட்டு பிள்ளை சூர்யா மனதில் பதியவேயில்லை! ஒன்றிலிருந்து ஒன்பது வரை சொல்லி விட்டு அடுத்த எண் என்ன என்று பலமாக யோசித்தும் அவனுக்கு ஞாபகத்திற்கு வரவேயில்லை!
ஒரு கட்டத்தில் குமார் பொறுமையிழந்து கோபப்பட்டான்!
அப்பா கோபப்படவும் சூர்யாவுக்கு இலேசாகக் கண் கலங்கியது! ஆனாலும் வினா வுக்கு விடை தெரியாமல் பேந்த பேந்த முழிக்கவும் குமார் கன்னத்திலும், முதுகிலும் அடி கொடுக்க
"அம்மா" என்று கதறி அழுதபடி ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக்கொண்டான்!
அடுத்த நாள் காலையில் அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்த குமார் மகன் ஆசையாய் அருகில் வந்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை கோபத்தில்!
இதைக் கவனித்த குமாரின் மனைவி,"ஏங்க! புள்ள ஏங்கிப் போவாங்க! பேசுங்க! சின்ன விஷயத்துக்கு இவ்ளோ கோபப்படாதீங்க!" என்று
மகனுக்கு வக்காலத்து வாங்கினாள்.
குறுக்கிட்ட குமார்,"எது சின்ன விஷயம்? இந்த வயசுக்குத் தெரியவேண்டியதைத்தான் தெரிஞ்சுக்க சொல்றேன்! ஒன்றிலிருந்து பத்து வரை சொல்லக்கூட இவனுக்கு ஞாபகசக்தி இல்லை! இவன் என்னத்தப் படிச்சு கிழிக்கப்போறான்? நம்ம தெருவில் உள்ள மற்ற பசங்களைப் பாரு! எவ்ளோ பிரில்லியன்டா இருக்குதுங்க!" என்று கோபமாக சொல்லியவாறு அலுவலகம் கிளம்பிச் சென்றார் குமார்.
ஆஃபீஸில் லஞ்ச் ஹவர் வந்தது! குமார் தன்னுடைய நெருங்கிய ஆஃபீஸ் நண்பருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது குமாரின் நண்பர் சாப்பிடாமல் சாதத்தைப் பிசைந்தபடி ஏதோ யோசனையில் இருந்தார். முகம் வழக்கம் போல் அல்லாமல் வாட்டமாக இருக்கவும் குமார்,"என்ன சார் ஒரு மாதிரி இருக்கீங்க? ஏதும் பிரச்சினையா?"என்று கேட்கவும்,
"ஒண்ணும் இல்லை சார்! உங்களிடம் சொல்வதற்கு என்ன? ஐந்து வயதுதான் ஆகிறது என் பையனுக்கு! செல்போனுக்கு அடிமையாயிட்டான் சார்!
செல் பாக்குறது கூடத் தப்பில்லை ஆனால் அதில் வரும் ரீல்ஸ் நிறையப் பார்த்து அதைப் போல விபரீதமான செய்கை நிறைய பழகிக் கொண்டான்! சில மோசமான வார்த்தைகளையும் பேச ஆரம்பித்திருக்கிறான்.
நான் என்ன அறிவுரை கூறினாலும் எதிர்த்து பேசுகிறான். அடம் பிடித்து எதையும் சாதிக்கிறான். இத்தனைக்கும் ஒரு பிள்ளை எனச் செல்லம் கொடுத்தது தப்பாகி விட்டது. இந்த வயதில் படிப்பை விட முக்கியமானது ஒழுக்கம் தான் சார்!
படிப்பு என்பது ஒருவர் கற்றுக்கொடுப்பது! ஒழுக்கம் நம்மையும், நம்மைச் சுற்றி நடப்பவற்றையும் பார்த்து தெரிந்து கொள்வது! வளர்த்துக்கொள்வது! இப்போது சோசியல் மீடியாக்களில் வரும் பல்வேறு தேவையில்லாத ஆப் களை பார்த்து நமது பாரம்பரிய முறை மறக்கடிக்கப்படுகிறது!"
என்று தன் மகனைப் பற்றி மிகவும் வேதனைப்பட்ட நண்பருக்கு ஆறுதல் சொல்லி அவரை சாப்பிட வைத்து சமாதானப்படுத்தினார் குமார்.
அப்போதுதான் தன் மகனுக்கு படிப்பு ஏறவில்லை என அடித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக சொல்லிக்கொடுத்து அவனைப் படிக்க வைத்துவிடலாம்.
மற்றபடி அலுவலக நண்பர் சொன்னது போல் செல்போன் பழக்கமோ, மரியாதை இல்லாத, தேவையில்லாத வார்த்தைகள் அவன் பேசியதில்லை! நன்றாக அவனை வளர்த்திருக்கிறோம்!அடுத்த வீட்டுக் குழந்தைகள் போல
அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என
கம்பேர் பண்ணக் கூடாது
அவனைக் கொஞ்சம் தட்டி விடாமல் தட்டிக் கொடுத்து படிக்க வைக்க வேண்டும் என்ற முனைப்போடு சூர்யாவைப் பார்க்க ஆவலுடன் வீட்டிற்கு வந்தார் குமார்.
குமாரரைப் பார்த்தவுடன்
"அப்பா!" என்று ஓடி வந்து
கட்டிப்பிடித்துக் கொண்டான் சூர்யா!
"அப்பா! இனிமேல் நல்லாப் படிக்கிறேன்பா!
ஸாரிப்பா! என்கூட பேசாமல் மட்டும் இருக்காதீங்கப்பா!" என்று அழுதவனைத் தூக்கிக் கொஞ்சியவாறு
" நான் உன்னை அடிச்சதுதாப்பா தப்பு! நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்! "
என்று அப்பாவும் மகனும்
மாறிமாறி மன்னிப்புக் கேட்க தூரத்தில் இருந்து தன் பங்குக்கு ஆனந்த கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள் குமாரின் மனைவி.
பிரபாகர்சுப்பையா மதுரை- 12,