மகாகும்பாமேளா நடைபெறும் இச்சமயத்தில், கங்கை நதி குறித்த சில சிந்தனைகள் இதோ :
இமயம் நமக்களித்த கொடை கங்கை என்னும் புண்ணிய நதி. கங்கையின் புனிதம் என்றும் மாசுமறுவற்றது. கங்கையின் தூய்மையோ என்றும் பேசுபொருள் ஆவது. உத்திரப்பிரதேச மாசுக் காட்டுப்பாட்டு வாரியம், கங்கைநீர் குடிப்பதற்கு சற்றும் தகுதி அற்றது என்று அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
எனவே இந்திய தொழில் நுட்பக் கழகம், (IIT) கான்பூர், கங்கை நீரின் தூய்மை குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வு, இந்திய தரநிர்ணயக் கழகம் (BIS) குடிநீருக்குத் தகுதியாக நிர்ணயித்துள்ள 28 அளவுகோல்களின் அடிப்படையில், நடத்தப்பட்டது. அதற்காக கங்கையின் உற்பத்தி ஸ்தலமான கங்கோத்ரியிலிருந்து ஹ்ரிஷிகேஷ் வரை ஆங்காங்கே கங்கைநீர் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் கங்கைநீரின் தூய்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று கண்டது.
அஷு கோஷ் என்ற விஞ்ஞானி ஹரித்வாரில் சேகரிக்கப்பட்ட கங்கைநீரை நுண்ணோக்கியின் மூலம் செய்த சோதனைகளின்படி கங்கைநீரில் எவ்வித பாதகத்திற்கும் ஏதுவான நுண்ணுயிரிகளும், (micro-organisms) காணப்படவில்லை என அறிவித்தார். அவர் நடத்திய சோதனைகளை காணொளியாகவும் வெளியிட்டார். அவரது முடிவை உறுதி செய்வதற்காக பல்வேறு சோதனைச் சாலைகளில் AOX மைக்ராஸ்கோப் (Alternative OXidase) என்ற அதிநவீன நுண்ணோக்கி மூலம் மீண்டும் பல வல்லுநர்களால் கங்கைநீர் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், கல்ச்சர் சோதனையிலும் கூட, கங்கைநீரில் எந்தவித மாசுக்களோ, கோலிபார்ம் உள்ளிட்ட நுண்ணுயிரிகளோ காணப்படவில்லை என்றும், அந்நீரின் தூய்மை தரமானது என்றும் உறுதி செய்துள்ளனர்.
"இந்தியாவின் ஷேக்ஸ்பியர்" எனப்படும் காளிதாசன் கங்கை உற்பத்தியாகும் "இமயம் சிவனின் பெருநகை" என்று வர்ணிக்கிறான். F. W. தாமஸ் என்பவர் தான் எழுதிய "The Legacy of India" என்ற நூலில், "சிவனை மிக உயர்ந்த மலை சிம்மாசனத்தில் அமர்ந்து, பிறைச்சந்திரனை சூடாமணியாக அணிந்து, தனது ஜடா முடியின் வழியே கங்கையைப் பாயவிடும் ஒரு மாபெரும் முனிவராக உணர்ந்தாலன்றி, கங்கை மற்றும் சிவன் என்ற கருத்துக்களின் முழுமையை அறிய முடியாது" என்கிறார்.
1946ல் ராசாயனத்திற்கான நொபேல் பரிசு பெற்ற ஜான் ஹாவார்ட் நார்த்ராப், "இந்தியர்கள் கங்கையில் குளிக்கிறார்கள், அந்நீரைக் குடிக்கிறார்கள். அவர்கள் எவ்வித பாதிப்பும் அடைவதில்லையே" என்று வியந்து பேசினார். அஸிஸியின் புனித பிரான்சிஸ், "இவ்வளவு புனிதமாகவும், தூய்மையாகவும் உள்ள கங்கை நீரை அருளிய இறைவனுக்கு மங்களம் உண்டாகட்டும்" என்று கூறியதை தனது சுயசரிதையில் மேற்கோள் காட்டுகிறார், யோகி பரமஹம்ஸ யோகானந்தர். எனவே கங்கை தூய்மையானது. ஆயினும் அதன் தூய்மையைப் பேணுவது அரசின் மற்றும் மக்களாகிய நமது கட்டாயக் கடமையுமாகும்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி