"
பிரபல தொழிலதிபர் மாதப்பன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
மாதப்பனுக்கு காலில் எலும்பு முறிந்து விட்ட நிலையில் குடும்பத்தினர் சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
அவர் தனது பிறந்த நாளுக்காக கோவிலில் விசேஷ பூஜை செய்வதற்கு காரில் சென்ற போது தான் இந்த விபத்து நடந்தது.
அன்று முதல் நாத்திகம் பேச ஆரம்பித்து விட்டார் மாதப்பன்.
" கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் அவரது கோயிலுக்கு செல்லும் பக்தரின் காரை விபத்துக்கு உள்ளாக்குவாரா ? " என்று அனைவரிடமும் வாதம் செய்ய ஆரம்பித்தார்.
பலரும் மாதப்பனின் வாதத்தில் உண்மை இருப்பதாக நம்பி அவருக்கு ஆதரவாக பேசினார்கள்.
ஒரு நாள் ஜோதிடக் கலையில் சிறந்து விளங்கும் ஒருவர் அந்த ஊருக்கு வந்தார்.
மாதப்பன் அவருடைய ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டினார்.
" இந்த ஜாதகர் இந்நேரம் இறந்து போயிருக்க வேண்டுமே " என்றார் ஜோதிடர்.
" இல்லை ஐயா ... இது என்னுடைய ஜாதகம்தான் " என்றார் மாதப்பன்.
" அப்படி என்றால் கடவுளுடைய பெரிய அனுக்கிரகம் தான் உங்களை மரணத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறது " என்றார் ஜோதிடர்.
தனக்கு ஏற்பட்ட கார் விபத்தை ஜோதிடரிடம் கூறினார்.
" கிரக நிலைப்படி சாக வேண்டிய உங்களை அந்த கடவுள்தான் காப்பாற்றி இருக்கிறார். அதை அறியாமல் நீங்கள் தெய்வ நிந்தனை செய்து கொண்டு திரிகிறீர்கள். உங்கள் தலைக்கு வந்த ஆபத்தை தலைப்பாகையுடன் போகச் செய்தது சாட்சாத் அந்த கடவுள்தான் " என்றார்.
மாதப்பனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது. கோவிலுக்கு சென்று கடவுளிடம் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டார்.
---------------------------
இது எனது சொந்த கற்பனை என்றும், வேறுபத்திரிகைக்கு அனுப்பவில்லை என்று உறுதி கூறுகிறேன்.
வெ. ஆசைத்தம்பி
தஞ்சாவூர் - 6
68, மேல தெரு
விளார்
தஞ்சாவூர் - 613006
அலைபேசி: 7904270230