பட்டுக்கோட்டைராஜா
இதயத்தின் சுவர்கள் எங்கும் புழுதியாய்ப் படிந்திருக்கும் காதல் நினைவுகள். மனக் கடலின் அலைகள் வந்து-வந்து கரையில் தேடிட, முழுமதியாய் அவள் முகம் கடலில் உதித்தது.
பரந்து கிடக்கும் இந்த மணல்வெளி, என்னோடு அவளையும் அற்றைய மாலைப் பொழுதுகளில் சலிக்காது சுமந்திருக்கிறது. எதிரேதான் நாங்கள் இருவரும் பயின்ற கல்லூரி. இங்கிருக்கிற ஒவ்வொரு மணல்துகளும் எங்களின் பாதச் சுவடுகளை அறியும்.
இற்றையநாளில் இடது கை பூமித்தாயின் கன்னத்தில் புதைந்திருக்க-வலது கை மணல்துகளை அளைந்திருக்க என்னோடு நான் மட்டும். அலைகளின் `ஹோ’வென்ற இரைச்சல் செவிப்பறைகளை நிறைத்துக் கிடக்கிறது.
என்னைப் பற்றிய எல்லாமும் அறிந்தவள். அவளே வலிய வந்து என்னிடம் காதலை மொழிந்தவள். பின்னாளில் என்னென்னவோ காரணங்கள் சொல்லிப் பிரிந்தவள். பிரிவாற்றாத என் மனசு சுக்குநூறாய் உடைந்த நிலையில், உடலில் உயிர் மட்டும் தேங்கியிருக்கிறது.
மனசுக்குள் மௌன அழுகை. நினைவெங்கும் காதல் தொழுகை. சட்டென என் முதுகில் ஒரு தொடுகை.-``அங்கிள், இங்கே நான் ஒளிஞ்சுக்கிறேன்…யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க!” என்று மழலை மாறாத குரலில் ஒரு சிறுவனின் வேண்டுதல். சிலிர்த்துப் போனேன்.
சில நொடிகளில்,``உன்னை நான் கண்டு பிடிச்சிட்டனே!”- என்று ஒலித்த பெண்குரல் என்னை உலுக்கிப் போட்டது. அதிர்ந்தேன். நிமிர்ந்தேன்…..
அவள்தான்.அவளேதான்.எனது ஆழ்மனதில் ஓர் அதிர்ச்சி மின்னல்.
என்னைப் பார்த்து அவள் உறைந்து நின்றாள். பின்னால் வந்த அவள் கணவன், ``ஸாரி சார், குழந்தை உங்க சட்டையில் அழுக்கு பண்ணிட்டான்!” என்ற படியே குழந்தையைத் தூக்கினான்.
`பரவாயில்லை, ஏற்கெனவே உங்க மனைவி என் மனசில் அழுக்கு பண்ணிட்டாள்!’ என்று சொல்ல நினைத்து எதுவும் சொல்லாமல் புன்னகையுடன் எழுந்து, அவர்களைக் கடந்தேன்.
ஃ ஃ ஃ