மனைவி மரித்து ஐந்து வருடமாயிற்று அவள் இருக்கும் வரை ராமசாமிக்கு எந்த கஷ்டமும் தெரியவில்லை.
ராமசாமி அரசு மருத்துவ மனையில் கேட்பாரற்று கிடந்தார் இரண்டு நாள் வயிற்று போக்கு என வீட்டில் கிடந்த வரை பக்கத்து வீட்டுக்காரர் ராஜன்தான் ஆட்டோ பிடித்து இங்கு கொண்டு வந்து சேர்த்தார்.
கொஞ்சம் பணத்தையும் அவர் பாக்கெட்டில் திணித்து "திரும்ப வந்து பார்க்கிறேன்" என சொல்லிவிட்டு செல்ல முற்பட்ட அவரின் கையை பிடித்த ராமசாமியின் கண்கள் கலங்கியிருந்தது.
அவர் ராஜனிடம் "இன்னொரு உதவி செய்விங்களா"
" சொல்லுங்க பெரியவரே"
" என் தம்பி மகள் கற்பகம் சேலத்துல இருக்கா அவள் போன் நம்பர் இந்தாங்க கொஞ்சம் சொல்லிடுங்க"
" சரிங்க"
பிறகு முழு விபரம் கற்பகத்திற்கு சொல்லப்பட்டது.
கற்பகம் அடித்து பிடித்து ஐயோ பெரியப்பாவுக்கு என்ன ஆயிற்று யாரும் கூட இல்லையே என அவசரமாய் தன் மாமியாரிடம் விபரத்தை கூறிவிட்டு தன் பிள்ளைகளை பார்த்ததுக் கொள்ளும்படி சொல்லிவிட்டு புறப்பட்டாள்.
ராமசாமி கற்பகத்தை கண்டதும் தான் தனிமையில் இல்லை பாதுகாப்புக்கு மகள் பக்கத்தில் இருக்கிறாள் எனும் உணர்வு வந்தது.
அவளை பார்த்தவர் குலுங்கி அழுதார். "அழாதிங்க பெரியப்பா நான் வந்துட்டேன் இல்ல" என தோளை ஆதரவாய் தொட்டாள் அவர் மனம் ஆறுதல் அடைந்தது.
ராமசாமிக்கு இரண்டு மகன்கள் நன்றாக படிக்க வைத்தார் இருவரும் அமெரிக்காவில் அங்கேயே அந்த நாட்டு பெண்களையே திருமணம் செய்து கொண்டு அந்நாட்டின் குடியுரிமை பெற்று வசதி வாய்ப்போடு அங்கேயே ஒரு பெரிய ஐடி கம்பெனியில் இருக்கின்றனர்.
அவர்கள் இப்பொழுது தங்கள் நாட்டை, வீட்டை, பெற்ற அப்பாவை, உறவுகளை எல்லாம் மறந்து விட்டனர். அமெரிக்கா அவர்களுக்கு சொர்க பூமி ஆகிவிட்டது.
அடிக்கடி தன் தம்பியை பார்த்து ராமசாமி "எனக்கு என்னடா ரெண்டு ஆம்பிள சிங்கங்கள் பெத்து வச்சிருக்கேன் எந்த கவலையும் இல்ல" என்பார். இன்றோ அவர்கள் அருகில் இல்லை.
கற்பகத்தை பார்த்து சொன்னார் "கடவுள் உன்ன மாதிரி எனக்கு ஒரு பொட்ட புள்ளைய கொடுக்கலமா" என கவலை பட்டார்.
"எங்க அப்பாவும் இறந்துட்டாரு இனி எனக்கு எல்லாம் நீங்கதானே" என கலங்கினாள்.
ராமசாமியின் மனம் இப்பொழுது சுகம் பெற்றிருந்தது.
கவிமுகில் சுரேஷ்
தருமபுரி