வெண்மேகமும் கருமேகமும் சூழ்ந்திருக்க சூரிய ஒளிப் பிரகாசம் சுள்ளென வீச கண்களை நுணுக்கிப் பார்த்தான் விக்ரம்.
அதில் கைவிளக்கும், அந்த கைவிளக்கு வெளிச்சத்தில் ஓர் உருவமும் தெரிந்தது.
உருவம் அசைந்து வரும் பாங்கில் பெண்ணோ ஆச்சர்யத்தோடுக் கூர்ந்து நோக்க பெண்தான், பெண்ணேதான்.
அழகிய மெலிந்த தேகம், காற்றிலாடும் கூந்தல், மெல்லிய ஆடை, கால்கள் மணலில் புதையப் புதைய எதை நோக்கி வருகிறாள்?
அவள் வரும் அழகைக் காண கோடி கண்கள் வேண்டும் என்ன அழகு! என்ன அழகு! எனப் பார்த்துக் கொண்டே இருந்தான் விக்ரம். அவன் அருகே வந்தவள் விக்ரமின் கண்களை நோக்கி "U r soo smart " என தலைகோதி மார்போடு அணைத்தாள்.
"விக்ரம், டேய் விக்ரம் எழுந்திரு, மணி எட்டு ஆபிஸ்க்கு நேரம் ஆச்சு ஏன் எழுப்பலேன்னு கத்துவே, எழுந்திருடா" என விக்ரமின் அம்மா உசுப்பினாள். கண் விழித்தவன் அருகில் அழகியைக் காணாது விழிக்க "என்னடா திரு திரு முழிக்கற, கனவு ஏதாவது கண்டயா, எழுந்து போ நேரமாகப் போகுது" என்றாள்.
"சரிம்மா போறேன்" என்றவன் ஓஓ எல்லாம் கனவு போல, எனத் தெளிவானான். கனவானாலும் அழகியின் நளினமும் அவளது குரலும் , அணைப்பையும் நினைத்து சந்தோஷமாக ஆபீஸ்க்கு தயாரானான் விக்ரம்.
-நா.பத்மாவதி
கொரட்டூர்