tamilnadu epaper

கறிச் சோறு

கறிச் சோறு

 

கோவிலுக்குச் செல்லும் பழக்கமே இல்லாத நான் கோவிலுக்கு எதிரே கூடியிருந்த கூட்டத்தையும், அங்கிருந்து ஒலிக்கும் உடுக்கைச் சத்தத்தையும் கேட்டு, "என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே?" என்று நினைத்தபடி அங்கு சென்றேன்.

 

மத்தியில் சாமியாடி தனது ஜடாமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு, கையில் ஒரு உடுக்கையை வைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தான். "அடேய்... மழை பெய்ஞ்சு ஒன்றரை வருஷமாச்சுடா.... இப்படியே போனா பஞ்சம் வரும்டா.... எல்லோரும் கத்தாழையையும், காட்டு எலியையும் திங்கிற நிலைமை வந்துடும்டா"

 

  "ஆத்தா... வேண்டாம் ஆத்தா... என்ன பரிகாரம்னு சொல்லு ஆத்தா... செஞ்சிடலாம்"

 

  "கிடா வெட்டி கறிச்சோறு படையுங்கடா"

 

   உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன் நான். "இந்தச் சாமியாடிக்கு கறிச்சோறு திங்கணும்னு ஆசை வந்துருச்சு... ஆத்தா பெயரைச் சொல்லிக்கிட்டு ஏற்பாடு பண்றான்"

 

  அதற்குள் எங்கிருந்தோ ஒரு கருப்பு நிற ஆட்டுக்குட்டியை ஒருவன் இழுத்து வந்து சாமியாடி முன் நிறுத்த, யாரோ ஒருத்தன் வேகமாய் வந்து அதன் கழுத்துக்கு மாலை போட, பூசாரி அதன் நெற்றியில் பொட்டு வைக்க, பலிக்காக தயாரானது ஆட்டுக்குட்டி.

 

  "நாளைக்கு விடியக் காத்தால ஆறு மணிக்கு ஆடு வெட்டப் போறோம் சாமி... எல்லாரும் வந்துருங்க சாமி" ஒருவன் கூவலாய்ச் சொல்ல,

 

 எல்லோரும் கலைந்து சென்றனர்.

 

 இரவு,

 

  உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கிடந்தேன். நினைவில் அந்த கருப்பு ஆட்டுக்குட்டியே வந்து வந்து போக, மெல்ல எழுந்து ஜன்னல் வழியே கோயிலை பார்த்தேன். மண்டபத் தூணில் கட்டப்பட்டிருந்த அந்த ஆட்டுக்குட்டி தூங்காமல் அங்குமிங்கும் ஆடிக் கொண்டே இருந்தது.

 

  மெல்ல எழுந்து மணி பார்த்தேன் மூணு. தெருவில் இறங்கி இருபுறமும் பார்த்தேன். யாருமே இல்லை.

நிதானமாய் நடந்து அந்த ஆட்டுக்குட்டியை நெருங்கி அதன் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டேன். அது ஒரே ஓட்டமாய் ஓடி இருட்டில் மறைந்து போனது.

 

 மறுநாள் காலை 6:00 மணி.

 

 "நேர்ந்து விட்ட ஆட்டுக்குட்டியை காணோம்டா... இது ஊருக்கு ஆகாதுடா... இங்க இனி பல வருஷத்துக்கு மழையே வராதுடா... பஞ்சம்தாண்டா... பட்டினிதாண்டா... வறட்சி தாண்டா... ஊரே மயானமாகப் போகுதடா" சாமியாடி கத்திய போது.

 

மேலிருந்து சின்னச் சின்னதாய் மழைத்துளிகள் விழ ஆரம்பித்து, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகி, பெருமழையாய்க் கொட்ட,

 

சாமியாடி பேய்முழி முழிக்க,

 

அந்த ஆட்டுக்குட்டிக்கு நான் செய்த உதவிக்கு கிடைத்த பலன் இது... என்று நினைத்துக் கொண்டே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோயமுத்தூர்