அரவிந்தனும், அவனது அம்மாவும் பெண் வீடு பார்த்து விட்டு ஆட்டோவில் தங்களது வீட்டுக்கு த் திரும்பி கொண்டிருந்தனர்.
என்னப்பா... இந்த பொன்னும் கறுப்பாத் தான் இருக்கு.... எனக்கு என்னமோ சுத்தமா ப் பிடிக்கவேயில்லை.
அம்மா... என்னமா இப்படி சொல்ற... இதோட ஏழு இடத்துல பெண் பார்த்துட்டோம். பொன்னு கறுப்பா இருக்கு... குட்டையா இருக்கு.. உயரமா இருக்குன்னு... ஏதாவது குறை கண்டு பிடிச்சிகிட்டே பார்குறப் பெண்ணையெல்லாம் வேண்டாம்னு சொல்லிகிட்டே இருக்கே... எனக்கு ஒன்னுமே புரியல...! நீ என்ன முடிவுப் பண்ணியிருக்கிறேன்னு தெரியல... ஏம்மா... என்னமா உனக்குப் பிரச்சினை?
அரவிந்தன் சற்று கோபத்துடன் தனது அம்மாவிடம் கேட்டான்...
அரவிந்த்... கோபப்படாத... உனக்கு சிவப்பா நல்ல லட்சணமாப் பொன்னுப் பார்க்குனும்னு தாம்பா இப்படி எல்லாப் பெண்களையும் வேண்டாம்னு சொல்லிக் கிட்டு வரேன்... அது ஏன் உனக்கு புரியல...!
அம்மா.. ஒரு நிமிசம்... இங்கே இந்த ஒட்டல்ல ஒரு காபி சாப்பிட்டுட்டு போவோம்... என்று அம்மா விடம் தெரிவித்துவிட்டு, ஆட்டோக்காரரிடம், அண்ணே... அப்படியே அந்த ஓட்டலுக்கு போங்கண்ணே... ஒரு
காபி சாப்பிட்டுட்டு போவோம்...
ஒட்டலில் காபி சாப்பிட்டு முடித்ததும் இருவரும் ஆட்டோவில் புறப்பட்டனர்...
வீட்டுக்குள் வந்ததும் அரவிந்த் தனது அம்மாவிடம் கேட்டான்...
அம்மா... பெண் பார்க்க போனப்ப ஒரு ஆட்டோவுல போனோம்.. அந்த ஆட்டோக்காரரு என்ன சிவப்பாவா இருந்தாரு... அடுத்தது ஒட்டல்ல போய் காபி சாப்பிட்டோம்... அங்க உனக்கு காபி கொண்டு வந்து கொடுத்த சப்ளையர் சிவப்பாவா இருந்தாரு...! கறுப்பா இருந்தாருன்னு காபி சாப்பிடாம நீ வந்துட்டியா...! அதே மாதிரி ஆட்டோ ஓட்டுநவரு கறுப்பா இருந்தாருன்னு நீ ஆட்டோவுல ஏறாம இல்லீல்ல... அம்மா... கறுப்பு, சிவப்புன்னு ங்கறது நாம ஏற்படுத்திகிட்ட ஒரு கற்பனைதாம்மா...
பொன்னு அழகா இருக்கா..! நல்ல குடும்பமா.. இதை மட்டும் பார்த்தா போதும்மா....!
அரவிந்தன் சொன்னதைக் கேட்டு அவனது அம்மா கிரிஜா அமைதியாக நின்றாள்.
७७७७७७७७७७७७७७७७७७७७
நன்னிலம் இளங்கோவன்.
மயிலாடுதுறை.