tamilnadu epaper

கல்யாண அழைப்பு

கல்யாண அழைப்பு


                    ரேவதி கையில் காபியுடன் ரமணனிடம் வந்தாள். முன் பாதத்தை தரையில் ஊன்றி ஊஞ்சல் ஆட்டத்தை நிறுத்தினவர், கையில் காஃபியை வாங்கிக் கொண்டார். அருணா தான் ஃபோன் பண்ணினாள். அவளுடைய அத்தை சித்ராவின் பையன் மகேசனுக்கு வைகாசி மாதம் கல்யாணமாம். அதற்காக ஒரு வாரம் இந்தியா வருகிறாராம். பூரணன் வரவில்லை. அவள் மட்டும்தான் வருகிறாளாம். தை மாதம் ; ஜனவரி26 தேதியில் நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது. நாம் அவசியம் திருச்சியில் நடக்கும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள வேண்டும்; என்று ஹோம் மினிஸ்டர்.. அதான் உன் நாட்டுப் பெண் ஆர்டர் போட்டிருக்கா;" என்றார் பரிகாசமாக.

                " அவ ஏதாவது சொல்லுவாள்! கல்யாணத்துக்கு கூப்பிடும்போது பார்த்துக் கொள்ளலாம். நிச்சயதார்த்ததிற்கு நேர் சம்பந்திகளையும் கூட பிறந்த முதல் வட்ட உறவினர்களையும் மட்டும்தான் கூப்பிடும் வழக்கம். அது அவளுக்குத் தெரியாது. நாம் அவள் பெற்றோரிடம் ஃபோனில் விசாரித்தால் போதுமானது' என்றாள்; ரேவதி. '' சித்ரா அத்தை ஃபோன் பண்ணிக் கூப்பிட்டால்...என்று இழுத்தார்; ரமணன். ' அதெல்லாம் கூப்பிட மாட்டார்கள். வழக்கம் இல்லை. அருணாவின் அப்பா கூப்பிட்டால்; போக வேண்டி வருமா; என்று கேட்காதீர்கள். வழக்கம் இல்லாத வழக்கத்துக்கு பதில் சொல்ல என்னால் ஆகாது. இதெல்லாம் அருணா காதுக்கு கொண்டு போகவேண்டாம்.' என்று பேச்சை முடித்தாள்; ரேவதி

                       மகேசன் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடந்தேறியதாக அருணாவின் பெற்றோர் சொன்னார்கள். மணப்பெண் மருத்துவர். அவள் அப்பா மின் தூக்கி செய்யும் கம்பெனி வைத்திருக்கிறார்.. அம்மா கனரா பேங்கில் ரீஜனல் மேலாளர். ஒரே பெண். விமரிசையான சீர் வரிசைக்குக் கேட்பானேன்.

                      நாட்கள் வேகமாக ஓடின. அருணா ஒரே வாரத்திற்காக வருகிறாள். நீண்ட லிஸ்ட் வாட்ஸ்அப்பில் வந்தாச்சு. " அம்மா ! ரெடியாக சாமான்களையெல்லாம் கட்டி வைச்சுடுங்கோ. நான் ஒரு நாள்தான் நம்மாத்துக்கு வர முடியும். நாம் கல்யாணத்தில் சந்திக்கலாம். அத்தை பத்திரிகை அனுப்புவார்கள். இரண்டு பேரும் வந்து விடுங்கள். ஓரு நாள் முன்னே வந்தால், நீங்கள் திருச்சியிலிருந்து காரைக்குடி கூட போய் வரலாம். உங்கள் சிநேகிதிக்கு ஃபோன் பண்ணி பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.' அவனுக்கு நாரத்தங்காய் தொக்கு வேண்டுமாம். லிஸ்ட்லே அது இல்லை. மறந்துடாமல் பண்ணி விடுங்கள். இல்லை என்றால், என்னைத் திருப்பி இந்தியாவுக்கே அனுப்பி வைத்துவிடுவான்' என்று அருணா மூச்சு விடாமல் பேசினாள். எல்லாவற்றுக்கும்,'ம்' என்ற ஒரே பதில்தான் ;அவளுக்கானது; எப்போதும் ரேவதியிடம்,

                     ஒருநாள் மாலை அருணாவின் சித்ரா அத்தையிடமிருந்து ஃபோன்.‌ நலம் விசாரிப்புகளுக்கு அப்புறம் 'மகேசனுக்கு வைகாசி மாதம் கல்யாணம். பத்திரிகை அனுப்புகிறேன். நீங்கள் வந்து நடத்திக் கொடுக்க வேண்டும்'

                      கல்யாண தேதி நெருங்கி வர, இன்னும் தபாலில் பத்திரிகை வரவில்லை. நம் வழக்கப்படி, சித்ரா அத்தையின் கணவரும் ரமணனிடம் பேசவில்லை. வாட்ஸ்அப்பிலும் பத்திரிகை வராத நிலைடயில் எப்படி கல்யாணத்திற்குப் போவது? ரேவதிக்கு இதை ஒரு விஷயமாக அருணாவிடம் பேச விருப்பம் இல்லை. அருணாவின் பெற்றோரும் கல்யாண பத்திரிகை பற்றி ஏதும் பேசவில்லை. 

                     ரேவதிக்கும் ரமணனுக்கும் இந்த திருமணத்தை ஒட்டி அருணா வருவதால் , அவளோடு இரண்டு , மூன்று நாட்கள் இருக்கலாமே , என்ற நப்பாசை.

                          ஏதும் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி எழுதினால், 'டிக்கட் ரிசர்வ் பண்ணியாச்சா' என்று கேட்பாள். நேரே வரும் போது ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம், என்று இருந்தார்கள். 

                ரேவதிக்கு சற்று ஏமாற்றம்தான் என்றாலும்,' பரவாயில்லை; நாம் கல்யாணத்தில் கலந்துகொண்டு

அருணாவை பார்த்து வரலாமே என்று முனைப்பில் இருக்கும் ரமணனை சமாளிப்பதுதான் பெரிய வேலையாய் இருந்தது

                     அருணா, சென்னை வந்ததும் ஃபோன் பேசினால், யாருக்கும் சங்கடமின்றி, என்ன சொல்லி சமாளிப்பது; கல்யாண பத்திரிகை வரவில்லை என்று சொன்னால் சரியாக இருக்குமா? பத்திரிகை இல்லாமல் சம்பந்தி வீட்டார் திருமணத்திற்கு போவது சரியாய் இருக்குமா? இவைகளை அறிந்தால் அருணா மனம் வருத்தப்படாதா? ரேவதியின் குழப்பத்தை எவராவது தீர்த்து வையுங்கள். ஒரு நல்ல யோசனை ஒன்றை சொல்லுங்கள் 


-சசிகலா விஸ்வநாதன் . ‌