கவியரசு கண்ணதாசன் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் 1927 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் முத்தையா. இவரை சிறுவயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டு அங்கு 'நாராயணன்' என்று அழைக்கப்பட்டார். சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வியும் அமராவதிபுதூரில் உயர்நிலைப் பள்ளியும் 8-ம் வகுப்பு வரை பயின்றார். சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே கதையும் எழுத தொடங்கினார். 'கிரகலட்சுமி' பத்திரிகையில் வெளியான 'நிலவொளியிலே' என்பது இவரின் முதல் கதையாகும். புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்து உடனடியாக ஆசிரியராகவும் உயர்ந்தார். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றினார்.
கம்பர், பாரதியாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர். 'கண்ணதாசன்' என்ற பெயரில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதினார். காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, ஆரோக்கியசாமி உள்ளிட்ட புனைப் பெயர்களிலும் எழுத தொடங்கினார்.
'கன்னியின் காதலி' படத்துக்கு பாடல் எழுதினார். தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. 'பாகப்பிரிவினை' படத்தில் பாடல் எழுதியதைத் தொடர்ந்து 'பாசமலர்', 'பாவமன்னிப்பு', 'படிக்காத மேதை' உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் பிரபலமாகின. தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் ஈடு இணையற்ற கவிஞராகத் திகழ்ந்தார். 4000க்கும் மேற்பட்ட கவிதைகள், 5000க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களையும் எழுதியுள்ளார். பராசக்தி, ரத்தத் திலகம், கருப்புப் பணம், சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சொந்தமாக படம் தயாரித்து அதில் தோல்வி அடைந்தார். அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழக அரசவைக் கவிஞராகவும் நியமிக்கப்பட்டார். 'இயேசு காவியம்', 'பாண்டமாதேவி' உள்ளிட்ட காப்பியங்கள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன. கண்ணதாசன் கவிதைகள், அம்பிகை அழகு தரிசனம் உள்ளிட்ட சிற்றிலக்கியங்களைம் படைத்துள்ளார். இவரது 'அர்த்தமுள்ள இந்துமதம்' 10 பாகங்களாக வெளிவந்தது. 'சேரமான் காதலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். 'குழந்தைக் காக' திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது பெற்றார். பல்வேறு கருத்துகளை திரைப்பாடல்கள் வழியாக பாமர மக்களுக்கு கொண்டு சேர்த்த கவியரசர் கண்ணதாசன் உடல்நலக் குறைவு காரணமாக 54-வது வயதில் (1981) மறைந்தார். இவரது நினைவைப் போற்றுகின்ற வகையில், காரைக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: பா. சீனிவாசன், துணைத் தலைவர், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம், வந்தவாசி.