???
காகம் சனி பகவானின் வாகனமாகும். நம் முன்னோர்கள் காக்கைக்கு உணவளித்து, அதை தெய்வமாக வணங்கி வந்தனர். பொதுவாக, அமாவாசையன்று காக்கைக்கு உணவளிப்பது, இறந்துபோன நமது முன்னோர்களுக்கு உணவளித்த பலனை தரும்.
நம் வீட்டைப் பார்த்து காகம் அடிக்கடி கரைந்தால் நமது வீட்டிற்கு விருந்தினர் வரப்போவதாகச் சொல்வார்கள். அவ்வாறு காகம் செய்வது, நம் வீட்டில் நல்ல விஷயம் ஏதோ நடக்கப்போவதாக அர்த்தம். அவ்வாறு கரையும் காகத்திற்கு ஒரு கைப்பிடி அளவாவது உணவளிப்பது நல்லது.
சில சமயங்களில் நம் வீட்டிற்கு வரும் காகம் சில திசையைப் பார்த்து கரைந்து கொண்டிருக்கும். அவ்வாறு செய்தால் அதற்கான பலன் என்னவென்பதை பற்றி பார்ப்போம். காகம் கிழக்கு பக்கத்தைப் பாரத்து கரைந்தால், அரசு அணுகூல காரியங்களில் வெற்றி கிட்டும், காரிய சித்தி உண்டாகும்.
காகம் மேற்கு திசையைப் பார்த்து கரைந்தால், தானிய விருத்தி உண்டாகும். மேலும், கடலில் விளையும் பொருட்களான முத்து, பவளம் போன்றவற்றின் சேர்க்கை உண்டாகும். வடக்கு பக்கம் பார்த்து கரைந்தால், ஆடை சேர்க்கை, எடுத்த காரியத்தில் தடங்கல் ஏற்படும். தெற்கு திசையை பார்த்து கரைந்தால், லாபம் மற்றும் நட்பு கிட்டும்.
காகத்தின் எச்சம் நம் மீது படுவது நல்ல சகுணமாகக் கருதப்படுகிறது. நம் மீது இருந்த திருஷ்டி விலகியதாக அர்த்தம். நம் வீட்டில் உள்ள ஏதாவது ஒரு பொருளை காகம் தூக்கிச் சென்றால் அப சகுணமாகும். பயணம் செய்யப்போகும் நபரை நோக்கி காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், அந்த பயணத்தை தவிர்த்து விடுவது நல்லது.
நமது முன்னோர்களை கும்பிட மறந்திருந்தாலோ அல்லது திதி கொடுக்க மறந்திருந்தாலோ அதை உணர்த்தும்வகையில் காகம் தலையிலே தட்டி விட்டுச் செல்லும் என்று சொல்லப்படுகிறது. சில சமயங்களில் நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் பிற்காலத்தில் ஏற்படப்போகிறது என்றால், நம்மை எச்சரிக்கும் வகையில் காகம் நம் தலையில் தட்டிவிட்டுச் செல்லும். காகம் தனது குஞ்சிக்கு உணவளிப்பதைப் பார்த்தால், நல்ல சுபகாரியம் நடக்கப்போகிறது என்று அர்த்தம். இரவில் காகம் அசாதாரணமாக பறந்தால், அந்தப் பகுதியில் ஏதோ அசம்பாவிதம் நடக்கவிருப்பதாகப் பொருள்.
-S. Narayanan
Chennai