tamilnadu epaper

காஸ்ட்லி கிப்ட்

காஸ்ட்லி கிப்ட்


தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் சேகர் முப்பது வருடங்களுக்குப் பிறகு, தன்னுடைய முகவரியைக் கண்டுபிடித்து அவருடைய மகள் கல்யாண அழைப்பிதழை அனுப்பியிருப்பதைக் கண்டு, பிரபல தொழிலதிபர் விவேகானந்தன் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.


 "பார்த்தியாடி?... இதுதாண்டி உண்மையான நட்பு.... முப்பது வருஷம் தொடர்பே இல்லாமலிருந்தும் மறக்காமல் இன்விடேஷன் அனுப்பிச்சிருக்கார்... நிச்சயம் நாம இரண்டு பேரும் போறோம்... நல்ல காஸ்ட்லி கிப்ட்டோட" என்றார்

 மனைவியிடம் பெருமையாய்.


திருமண நாளன்று மனைவியையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய பி.எம்.டபிள்யூ. காரில் மண்டபத்தைச் சென்றடைந்தார் விவேகானந்தர்.


உள்ளே சென்றவர் தனது கல்லூரி நண்பர்கள் யாருமே காணாதிருக்க குழப்பமானார்.


அப்போது அவரை நோக்கி வேக வேகமாய் வந்த பட்டு வேட்டி பட்டுச் சட்டைக்காரர், "வாப்பா... நித்யானந்தம் எப்படியிருக்கே? எத்தனை வருஷமாச்சு உன்னை பார்த்து" என்று புன்முறுவலுடன் கை குலுக்கிய சேகரின் முகத்தை கூர்ந்து பார்த்து அதிர்ந்தார் நித்தியானந்தம்.


  "இவனா?.... என் வகுப்பில் இன்னொரு சேகர் இருந்தானே?... உண்மையில் அவன்தானே என் க்ளோஸ் ஃப்ரெண்ட்?... இவனெல்லாம் அப்பவே நாங்கள் ஒதுக்கி வச்ச மாணவனாச்சே!... போயும் போயும் இவன் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தேன்?" உள்ளுர வருந்தினார் நித்தியானந்தம்.


ஆனால் அந்த சேகரோ... மண்டபத்தில் உள்ள ஒருத்தர் விடாமல் எல்லோரிடமும் சென்று, 'என் கல்லூரி நண்பர்... இப்ப பெரிய தொழிலதிபர்... முப்பது வருஷங்களுக்குப் பிறகும் நான் அனுப்பிய இன்விடேஷனை மதிச்சு வந்திருக்கார்" என்று நித்தியானந்தத்தைப் பெருமைப் படுத்தினார்.


  "நித்தியானந்தம்... நீயெல்லாம் சமூகத்தில் ஒரு பெரிய விஐபி!... நீயெல்லாம் வர மாட்டேன்னு தான் நினைச்சேன் ஆனா நீ வந்து கலந்துக்கிட்டு என்னை பெருமைப்படுத்திட்டப்பா" சேகர் தழுதழுத்தார்.


 மேடையில் நின்று கொண்டிருந்த மணமக்களிடம் தானே கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தினார்.


 நித்தியானந்தமும் தான் கொண்டு வந்திருந்த கிப்ட்டைக் கொடுத்து போட்டோவும் எடுத்துக் கொண்டார்.


பந்திக்கு அவர்களை தானே அழைத்துச் சென்று விசேஷமாக கவனித்து, ஸ்பெஷலாய்ப் பரிமாறி, எல்லோரும் அவர்களிருவரையும் கடவுளைக் காண்பது போல் காண வைத்தான்.


அங்கிருந்து கிளம்பி காரில் வரும் போது, "ச்சை... நான் ஏமாந்துட்டேன்!.. என் வகுப்பில் இன்னொரு சேகர் இருந்தான்... நான் அவன்னு நினைச்சுத்தான் இந்தக் கல்யாணத்துக்கு வந்தேன்!..ச்சை" முன் நெற்றியில் அடித்துக் கொண்டார் நித்தியானந்தன்.


  "இவரும் உங்க வகுப்பில்    

   படித்தவர்தானே?"


  "அதுக்காகச் சொல்லலைடி... இவனெல்லாம் அந்தக் காலகட்டத்தில் காலேஜுக்கு சைக்கிள்ல வர்ற ஆளு!... நானெல்லாம் அப்பவே கார்ல காலேஜ் போனாவன்!.. இவன் கூடவெல்லாம் நாங்க சகவாசமே வச்சுக்க மாட்டோம்!.. அந்த இன்னொரு சேகர் இருக்கான் பாரு?... அவன் நல்ல பணக்காரன்!.. அவனும் கார்ல வர்ற கோஷ்டி!... அவன் கூடத்தான் எனக்கு பிரண்ட்ஷிப்!... இவனுக்குப் போய் காஸ்ட்லி கிட்டை கொடுத்திருக்கிறேனே?" அங்கலாய்த்தார் நித்தியானந்தம்.


  "சும்மா புலம்பாதீங்க!.. நீங்க கொடுத்ததை விட காஸ்ட்லி கிப்டை இந்த சேகர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்!... எப்படி?.. எல்லார்கிட்டயும் உங்களைக் கூட்டிட்டுப் போய் காட்டி... உங்களைப் பற்றியும், பணக்காரராக இருந்தும் எளிமையாய் பழகறவர்"ன்னும் சொல்லிச் சொல்லி பெருமைப்படுத்தினார்... மண்டபத்தில் இருக்கிற அத்தனை பேர் மனசிலேயும் உங்களுக்கு ஒரு உயர்ந்த சிம்மாசனத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கார்!... அது நீங்க கொடுத்ததை விட "காஸ்ட்லி கிப்ட்"ங்க."


அமைதியானார் நித்தியானந்தம்.


 - முகில் தினகரன்,

கோயமுத்தூர்.