tamilnadu epaper

குருவுக்கு மரியாதை

குருவுக்கு மரியாதை

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா 

கொண்டாட சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெரும் புலவர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்களென அணி அணியாக வரத் துவங்கினர்.

பார்ப்பதற்கு அந்த இடமே கோலாகலமாக இருந்தது.

 

அரங்கிற்கு வெளியே அறுபது வயதைக் கடந்த பெரும்புலவர்கள் தொண்டைமான், கவிபாரதியுடன் தமிழ் இலக்கிய அமைப்பின் நிர்வாகிகள் சில பேர் நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் முப்பத்தைந்து வயதான ஆசிரியர் ராஜா அங்கே வந்தபோது,

" என்னப்பா ராஜா, நல்லாயிருக்கியா" என்று தொண்டைமான் கேட்க,

"நலமாக இருக்கிறேன் ஐயா"

என்று என்றார் ராஜா.

"முன்ன மாதிரி நிகழ்வுல எல்லாம் உன்ன பார்க்க முடியறதலயே " என்னாச்சு ராஜா என்றார் கவிபாரதி.

" வாரத்துல ஞாயித்துக்கிழம ஒருநாள் தான் லீவுங்க ஐயா. அன்னைக்காவது வீட்ல இருங்கன்னு வொய்ப் ஆசபடறாங்க. அதுமட்டுமில்லாம எனக்கு பொண்ணு பொறந்திருக்கா.

அதனால தான் ஐயா எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்க முடியறதல"

"அப்படியா! ரொம்ப சந்தோஷம்.

வாழ்த்துகள் வாழ்த்துகள்..."

என்றார் பாண்டியன்.

" பொண்ணு பொறந்ததுக்கு எதுவும் ட்ரீட் இல்லையாபா?

என்று கவிஞர் மணிமேகலை கேட்டதும், " என்ன வேணும்னு சொல்லுங்கம்மா...வாங்கிக்கலாம் " 

" வாயாலே வடை சுடற ஆளு நீதான் ராஜா. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி உன்ன எப்படி பார்த்தேனோ, அதே மாதிரிதான் இப்பவும் இருக்க. கொஞ்சம் கூட மாறலபா நீ"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா "

" பரவாயில்ல, பரவாயில்ல... இந்த வார்த்த சொன்னதே போதும். உன்ன போலவே உன்னோட பொண்ணும் அறிவாளியா, திறமசாலியா வருவா... வாழ்த்துகள் ராஜா "

" ரொம்ப நன்றிம்மா "

இப்படியே அங்கிருப்பவர்களுடனான உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. ராஜா அவருடன் வைத்திருந்த டிராவல் பேக்கைத் திறந்து சில புத்தகங்களை எடுத்து அங்கிருந்தவர்களுக்கு கொடுத்தார். நூலின் அட்டைப்படத்தைப் பார்த்த அனைவரும் அருமையாக உள்ளது, சிறப்பாக உள்ளது என்று பாராட்டினர். ஐந்து நிமிடங்கள் கழித்து,

" தடையுடைத்து முன்னேறு" என்ற தலைப்பில நீ எழுதியிருக்கிற வரிங்க, பள்ளத்துல விழுந்து கிடந்தவன தூக்கி விடறமாதிரி இருக்கு. 

சூப்பர் ராஜா. தொடர்ந்து எழுது"

என்றார் தமிழறிஞர் முருகன்.

" உங்களப் போன்ற பெரியவங்களோட ஆசிர்வாதமும், ஊக்கமும்தான் என்ன எழுத வைக்குதுங்க ஐயா... "

இப்படியாக அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களை நோக்கி இளவயது காவலர் ஒருவர் வேகமாக நடந்து வந்தார். அருகில் வந்த காவலர்,

ஆசிரியர் ராஜாவுக்கு சல்யூட் அடித்தார்.அங்கிருந்த எல்லோருடைய பார்வையும் ராஜாவின் பக்கம் திரும்பியது. ராஜாவுக்கு என்ன நடக்கிறது என்றே ஒருகணம் புரியவில்லை. நம் அருகிலுள்ள பெரும்புலவர்கள், தமிழறிஞர்கள், மூத்த கவிஞர்களை விட்டுவிட்டு இவர் வயதில் குறைந்த எனக்கு வணக்கம் செலுத்துகிறாரே, அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஒருநொடி தவித்துப் போனார் ராஜா. உடனே நாற்காலியை விட்டு எழத் தயாரான ராஜாவை, " சார் நீங்க எழக்கூடாது, உட்காருங்க சார்" என்ற காவலர்.

"என்ன அடையாளம் தெரியலயா சார், நான்தான் அசோக். உங்ககிட்ட தேர்டு ஸ்டேண்டர்டு படிச்சேனே, ஞாபகம் இருக்கா சார் "என்று கேட்க, "ஓ! அப்போலோ ஸ்கூல்ல படிச்ச அசோக்கா!

ஞாபகம் இருக்கு, நல்லாயிருக்கியா? இங்க என்ன பன்ற?

" இந்த விழாவோட பாதுகாப்புக்காக வந்திருக்கிறோம் சார்"

" எப்போ வேலை கிடைச்சது "

" எட்டு மாசம் ஆகுது சார். நான் சிக்ஸ்த் ஸ்டேண்டார்டு படிக்கும்போதே நீங்க ஸ்கூல விட்டு போயிட்டீங்க. ஆனா நீங்க சொல்லிக் கொடுத்த விதமும், என் மேல நீங்க காட்டுன அன்பும் இன்னைக்கும் என் மனசுல அப்படியே பதிஞ்சிருக்கு சார்.

நான் சுமாரா படிச்சாலும் கூட,

நீ நல்ல ஹைட்டா வளருவ, தொடர்ந்து நல்லா படி, முயற்சி பன்னு, கண்டிப்பா போலிஸ் ஆகற திறமை உங்கிட்ட இருக்குன்னு அடிக்கடி நீங்க சொன்ன வார்த்தையும், ஊக்கமும் தான் இப்ப இங்க என்ன போலிஸா நிக்க வச்சுருக்கு சார். வேலை கிடைச்சதுமே ரமேஷ் சார் கிட்ட உங்க போன் நம்பர வாங்கி கால் பன்ன சார். ஆனா போன் ஸ்விட்ச் ஆப்னு வந்தது சார்.

இன்னைக்கு உங்கள பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்" என்று கூறி ஆசிரியர் ராஜா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். ராஜாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. அங்கிருந்த தொண்டைமான் " நாங்க எவ்வளவு பெரிய தமிழறிஞர்களாக இருந்தாலும் இது போன்ற பெருமை எங்களுக்குக் கிடைக்காது.

இது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத உன்னோட ஆசிரியப் பணிக்கு கிடைத்த மரியாதை.

வாழ்த்துகள்... வாழ்த்துகள்... ராஜா " என்று கூற அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

 

             பாக்யபாரதி, தருமபுரி