tamilnadu epaper

குலவிச்சை

குலவிச்சை

 - திருமாமகள்


 அப்பாவுக்கு திடீரென்று இப்படி முடக்குவாதம் வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.


 டாக்டர் என் முகத்தில் இருந்த கலக்கத்தை பார்த்துவிட்டு என்னிடம் சொன்னார். 


" இங்க பாருங்க சார் மனுஷன் ரெஸ்ட்டே இல்லாம வேலை செஞ்சுட்டு இருக்காரு அதுவும் அவரு என்ன செய்றாரு தெரியுமா.. வாரத்துக்கு ரெண்டு சமையல் ஒத்துக்குறாரு... அவரோட முடக்கு வாதத்துக்கு இது ஒன்றுதான் காரணம்னு நான் சொல்ல மாட்டேன்.. அவருக்கு ஏதோ வேற பிரச்சினை இருந்திருக்கு பாக்காம விட்டுட்டாரு அது இவ்வளவு சீரியஸா கொண்டுவிட்டுருச்சு.. " இதுதான் டாக்டர் சொன்னதின் சாராம்சம்.


" ஓகே டாக்டர் நீங்க சொன்னபடியே 

யுனானி ஸ்டார்ட் பண்றேன்.. " சொல்லிவிட்டு அப்பாவையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.


 "அடுத்த வாரம் ஒரு பெரிய கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருக்கேன்டா.. இப்ப போய் எப்படி அவங்க கிட்ட மாட்டேன்னு சொல்ல முடியும்... நான் ஒன்னு சொல்றேன் அதை கேளு நான் என்னென்ன சாப்பாடு செய்வேனோ அதை எல்லாத்தையும் உனக்கு நான் சொல்லி தரேன் எனக்கு பதில் நீ போய் பண்ணிடு" என்றதும் அப்பா என்று நான் போட்ட சத்தத்தில் அவர் விதிர் விதிர்த்து போனார்.


" அப்பா நீங்க சின்ன வயசுல எல்லாம் உங்க கூட கல்யாணத்துக்கு கூட்டிட்டு போவீங்க..அப்ப நான் உங்க கையால ஸ்வீட் வாங்கி சாப்பிடணும்னு வருவேன்... நீங்க எப்படி சமைப்பீங்கன்னு பார்த்து இருக்கேன்... அவ்ளோ தான்... உங்க சமையல் டேஸ்ட் அது நல்லா பதிஞ்சுருக்கு... ஆனா... இப்ப நான் சொந்தமா பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன் இதெல்லாம் விட்டுட்டு நான் போய் அங்க எப்படி சமைக்க முடியும்.. அதுவும் உங்க கை பக்குவம்... "


"விடுடா பார்த்துக்கலாம்..."


 அப்போது அந்த கால் வந்தது அப்பாவின் முகம் எல்லாம் வியர்வையுடன் கூடிய பதட்டம்.


" சொன்னபடி நான் வந்திருவேன்.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க" என்று சொல்லிவிட்டு என்னை பார்த்தார்.


 சற்று நேரத்தில் வாசலில் நிழலாடியது அவருக்கு கீழே வேலை செய்யும் சமையல் காரர்கள் வந்தார்கள். அப்பாவின் சில ஆலோசனைகள். ஒரு வாரமாக அவர்களுடன் என்னை உட்கார்த்தி வைத்து விட்டார்.


 அடுத்த வாரமும் வந்தது. கல்யாணம் களை கட்டியது. ஆஹா ஓஹோ என்று ஒரே பாராட்டு.


" கேசவன் சார் உங்கள மாதிரி யாராலயுமே செய்ய முடியாது எப்படித்தான் இந்த மைசூர்பாக இந்த பதத்துக்கு கொண்டு வரீங்களோ? அடுத்து அந்த அவியல்... ஆஹா.. ஹா.. " என்று ஆளாளுக்கு பாராட்டி விட்டு சென்றார்கள்.


 கல்யாணத்தையும் நல்லபடியாக முடிந்தாகிவிட்டது வீட்டுக்கு வந்தேன்.


 மறுநாள் பெரிய தாம்பாளத்தில் கட்டு கட்டாக பணம், இனிப்பு எடுத்துக்கொண்டு கல்யாண வீட்டுக்காரர்கள் வரிசை கட்டி 

நின்றார்கள்.


" தம்பி கேசவன் ஐயாவை பார்க்க வந்தோம் கூப்பிடுவீங்களா..?


" உள்ள வாங்க அப்பாக்கு ஒரு வாரமா உடம்பு சரியில்லை.. "என்றதும் அவர்கள் என்னை திடுக்கிட்டு பார்த்தார்கள்.


" நேத்து வந்து சமைச்சது... நளனோ.. அவருடைய நேர்மைக்கும் உழைப்புக்கும் வந்துட்டாரா? சொன்னவர்களின் வாரத்தையில் ஆச்சரியம் கொப்பளித்தது.


" அப்பாக்கு ஒரு வாரமா முடக்குவாதம் உங்ககிட்ட ஒத்துக்கிட்டாரு ஆனா..என்ன செய்யறதுன்னு தெரியல நான் வரேன்னு சொன்னா நீங்க ஒத்துக்க மாட்டீங்க அதனால அப்பாவோட வேஷத்தை போட்டுக்கிட்டு..கொஞ்சம் வெள்ளை டை.. அப்பாவோட கண்ணாடி மாதிரி....அப்படியே அப்பாவா வந்தேன்... முண்டாசும், முக கவசம் ரெண்டும் எனக்கு உதவிச்சு.. "


" ஆள் மாறலாம்.. ஆனா...அந்த சமையல் அப்படியே அதே மணத்தோட இருந்ததே.. அது எப்படி தம்பி..?


" அப்பா சமையல சாப்பிட்டு சாப்பிட்டு...அப்பா கூட நான் சின்ன வயசுல வந்தேனே அதெல்லாம் என் மனசுல பதிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.... மேலும் அவருக்கு கீழே வேலை செஞ்சவங்க அப்பாவை பார்த்து பார்த்து அதே மணத்தையும், சுவையையும் கொண்டு வந்துட்டாங்க... எல்லாத்துக்கும் மேல ஒன்னு இருக்குல்ல.. அப்பாவோட ஜீன்.. அதான்... குலவிச்சை கல்லாமல் பாகம் படும்னு ஆயிடுச்சு.. "


 அப்பா என்னை பார்த்த பார்வையில் நம்பிக்கை தெரிந்தது. இனி நீ என் தொழிலை பார்த்துக் கொள்வாய் என்பதாய். தெரியாமலா சொன்னார்கள் மூதாதையர்கள். அனுபவித்து சொன்ன பழமொழி.