நாம் செய்யும் செயல்களுக்கு 'கை' பயன்படுகிறது போல நாம் பேசும் பேச்சுக்கும் அப்பப்ப 'கை' பயன்படுது... அதுவும் விதவிதமா பயன்படுது... அது எப்படின்னு சொல்றேன்..!
எனக்கு இப்ப 70 வயசாகுது... 25 வருஷத்துக்கு முன்னாடி ஒரு மாசக் கடைசியில ஒரு நாளில் நடந்த நிகழ்வு அப்படியே உங்கள் கண் முன்னால்...!!!
அன்று காலையில என் பொண்ணு காலேஜுக்குப் போறப்ப "அப்பா... 'கை'ச்செலவுக்குப் பணம் கொடுங்க... நேத்தே கொடுக்க மறந்துட்டீங்க " ன்னு சொன்னாள்... நான் அவகிட்ட நூறு ரூபாயைக் கொடுத்துட்டு...நேத்து கொடுக்கலையே... எப்படிச் சமாளிச்சேன்னு கேட்டேன். என் பொண்ணு , " ஒரு தோழிக்கிட்ட அம்பது ரூபா 'கை'மாத்து வாங்கினேன் " னு சொன்னாள். அப்படிச் சொல்லிட்டு " ஏம்பா மாசக்கடைசியானாப் போதும் 'கை'யக்கடிக்குதுன்னே சொல்லிட்டுருக்கீங்களே " ன்னு ஆச்சரியமாக் கேட்டாள். நான்,
" பின்ன என்னடி செய்றது... உன் படிப்புச் செலவுக்கே அப்பப்ப நிறைய பணம் 'கை'ய விட்டுப் போகுதே " ன்னு சொன்னேன். அவளும் " சரி சரி எனக்கு காலேஜுக்கு டைம் ஆச்சு... நான் கிளம்பறேன்... வந்து பேசிக்கறேன் " னு சொல்லிட்டுப் போய் விட்டாள்.
நானும் ஆபீஸுக்கு கிளம்பிப் போனேன். போகும் போது ஒரு நண்பர் வீட்டுக்குப் போய் அவர்கிட்ட , "சம்பளம் வந்ததும் கொடுத்துடறேன்... அவசரமா ஆயிரம் ரூபா வேணும்"னு கேட்டேன். ஆனா அவரு 'கை'ய விரிச்சிட்டாரு... ஆபீஸுக்குப் போனதும் இன்னொரு நண்பர் எனக்கு ' கை ' கொடுத்தாரு... ஆயிரம் ரூபா கிடைச்சது... ஆனா சாயங்காலம் ஆபீஸ்லேர்ந்து பஸ்ல வரும்போது எவனோ ஒருத்தன் என் ஹேண்ட் பேக்ல பிளேடு போட்டு 'கை' வரிசையக் காட்டிட்டான்... என்ன செய்ய 'கை'க்கு எட்டினது வாய்க்கு எட்டலை... நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுக்கிட்டே வீடு வந்து சேர்ந்தேன்.
என் பொண்ணு காலேஜ் விட்டு வந்தவுடனே ராத்திரி ஏழு மணிக்கு என் கிட்ட , " அப்பா... நீங்க ஏதாவது சைடுல அம்மா பேர்ல பிஸினஸ் ஆரம்பிச்சா என்ன... 'கை' நிறைய பணம் கிடைக்குமே " ன்னு சொன்னாள். நான் அவக்கிட்ட , " பிஸினஸ் ஆரம்பிக்கணும்னா 'கை' வசம் கொஞ்சமாவது பணம் இருக்கணும்... இல்லாட்டி 'கை'த்தொழில் ஏதாவது தெரிஞ்சிருக்கணும்"னு சொன்னேன். என் பொண்ணு விடலை...
"அம்மாவுக்குத்தான் விதவிதமா ஸ்வீட் செய்றது 'கை' வந்த கலையாச்சே... ஏதாவது ஸ்வீட் ஸ்டால் ஆரம்பிக்கலாமே " ன்னு சொன்னாள். அதுக்கு நான், "ஏற்கனவே உங்கம்மாவை 'கை'ப்பிடிச்சவுடனேயே ஒரு ஸ்வீட் ஸ்டால் ஆரம்பிச்சேன்... அதுவும் ஒரு பார்ட்னரோடு சேர்ந்து ஆரம்பிச்சேன்... ஆரம்பிச்ச புதுசுல என்கிட்ட 'கை'யிருப்பு நிறைய இருந்துச்சு... அந்த பார்ட்னரும் முதல்ல எனக்கு வலது 'கை' மாதிரிதான் இருந்தான்... அப்புறம்தான் தெரிஞ்சது... அவனுக்கு 'கை' சுத்தம் இல்லைன்னு... நிறைய பணத்தை 'கை'யாடல் பண்ணிட்டான் " னு சொல்லிட்டுருக்கும் போதே... என் பொண்ணு கேட்டாள் ,
"அந்தப் பார்ட்னரை 'கை'யும் களவுமா பிடிச்சிருக்கலாமே " ன்னு... நான் அவகிட்ட , "நீ சொல்ற மாதிரியே அவனைப் பிடிச்சேன்... அதனால எங்களுக்குள்ள லேசா 'கை'கலப்பு கூட வந்துச்சு...என்ன செய்றது... அவனோ ஒரு 'கை'நாட்டு... பணத்தையெல்லாம் இஷ்டம் போல சொந்தக்காரங்களுக்கு கொடுத்து ஏமாந்துட்டான் " னு பழைய கதையச் சொல்லிட்டு.... என் பொண்ணை உற்சாகப் படுத்தினேன்...
"சரி சரி... அது இருக்கட்டும்... இப்ப ஒண்ணும் கெட்டுப் போகலை... நீ படிச்சு முடிச்சு நல்லபடியா வா... 'கை' மேல் பலன் நிச்சயம் கிடைக்கும் " னு சொன்னேன். என் பொண்ணும்
என்கிட்ட , " நீங்க நினைக்கற மாதிரியே நான் படிச்சு முடிச்சு நல்ல வேலைக்குப் போய் ஒரு 'கை' பாத்துடுவேன் " னு நல்ல உறுதியோட சொன்னாள்.
அந்த நேரம் பக்கத்து வீட்டுல புதுசா குடி வந்திருந்த ஒரு பெண்மணி எங்க வீட்டுக்கு அவசரமா வந்தாங்க. அவங்க வந்து எங்கம்மாகிட்ட , "என் குழந்தைக்கு திடீர்னு சளி பிடிச்சு மூக்கு நல்லா அடைச்சிருக்கு... எனக்கு 'கை'யும் ஓடலை காலும் ஓடலை " ன்னு பதட்டப்பட்டு சொன்னாங்க. எங்கம்மா என்கிட்ட , " ஒரு 'கை' மருந்து இருக்கு... கொண்டு வர்றேன் " னு சொல்லிட்டு உள்ளே போனாங்க. அதுக்குள்ள என் மனைவி , " அத்தை... அந்த குழந்தை ஒரு 'கை'க்குழந்தை... மூச்சு விட முடியாம ரொம்ப கஷ்டப்படுது... நீங்க மருந்து தர வேண்டாம்" னு சொல்லிட்டு... வீட்டுக்கு வந்த பெண்கிட்ட ,
" பிள்ளையார் கோவில் பக்கத்துல ஒரு டாக்டர் இருக்காரு... அவரு நல்ல 'கை'ராசி டாக்டர்... அவர்கிட்ட போய் உடனடியா குழந்தையக் காட்டுங்க " ன்னு சொன்னாள்.
நானும் என் மனைவியும் அந்தப் பெண் கூட துணைக்குப் போனோம். டாக்டர் ஊசி போட்டு மருந்து கொடுத்ததுல குழந்தைக்கு நல்ல குணம் உடனடியா தெரிஞ்சது. குழந்தையோட அம்மா டாக்டர் கிட்ட , "டாக்டர்... ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு என்ன 'கை'மாறு செய்றதுன்னே தெரியலே " ன்னு சொன்னாங்க. டாக்டரோ, "நான் என் கடமையைத்தான் செஞ்சேன்... கடவுள் உங்களைக் 'கை'விடலை " ன்னு பெருந்தன்மையா சொன்னாரு.
கிளினிக்கை விட்டு வெளியே வந்தோம். அந்தப் பெண்ணையும் குழந்தையையும் அவங்க வீட்டுல விட்டுட்டு நானும் என் மனைவியும் எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சோம். அந்த நேரம் டிவியில
"ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ... உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ " ன்னு பாட்டு ஒலிச்சது. நான் என் மனைவிக்கிட்ட , "பாட்டு ரொம்ப நல்லாயிருக்கே... எந்த சினிமாலே " ன்னு ஆர்வமாக் கேட்டேன். அதுக்கு என் மனைவி , " கை கொடுத்த தெய்வம் " னு சொன்னாள்.
நானும் உங்களுக்கு 'கை'கூப்பி வணக்கம் சொல்லி விடை பெறுகிறேன்.
---லட்சுமி ஆவுடைநாயகம், மடிப்பாக்கம்.