'பஸ்' டிப்போவின் காம்பவுண்ட் சுவர்
ஓரமாக மரத்தடி நிழலில் சிறுது காலமாக வயதான ஒருவர் காலணி தைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார்.
அவர் வேலை செய்யும் இடத்துக்கு பக்கத்தில் எதிரே உள்ள இரண்டு கடைக்
காரர்களின் டூ வீலர் மட்டும் தான் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. நாளடைவில் நகருக்கு
உள்ளே தொலைவில் இருந்து வருபவர்கள் எல்லாம் அந்த வயதானவரின் தொழிலுக்கு
இடையூறாக வண்டிகளை பார்க்கிங் செய்து
விட்டு மெயின்ரோட்டில் பஸ் ஏறி அவரவர்
ஜோலி பார்க்க சென்றுவிடுவார்கள்.
வயதானவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் "வெளியிலிருந்து பொழைக்க வந்த உனக்கு இவ்வளவு திமிரா...இது எங்க ஏரியா...நாங்க அப்படித்தான் நிறுத்துவோம்
நீ வேற எங்கயாவது போயி பொழப்ப
பாரு..." என்று அதட்டிவிட்டு செல்வார்கள்.
எதிரே கடை காரர்கள் சொல்லியும் யாரும்
கேட்பதாக இல்லை.
பாவம் வயதானவர் வேறு வழி இல்லாமல் மரத்து நிழலை விட்டு தூரமாக வெயிலில் அமர்ந்து தன் தொழிலை செய்து கொண்டிருந்தார்.அங்கும் வந்து அவருக்கு
இடையூறாக டூ வீலரை நிறுத்தவந்தவரிடம்
வயதானவர் ஏதோ சொல்ல எதிர் ஆள்
வயதானவரை அடிக்க கை ஓங்கினார்.
எதிரே சலூன் கடைக்கு முடிவெட்ட வந்த சப் இன்ஸ்பெக்டர் அந்த சம்பவத்தை பார்த்து என்ன பிரச்சனை என்று கடைக்காரரிடம் கேட்க அவரும் இத்தனை நாள் அங்கு நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை விவரமாக எடுத்துச் சொல்ல, எஸ் ஐ "அப்படியா" என்று கேட்டபடி கிளம்பிவிட்டார்.
அன்று வழக்கம்போல் வண்டியை
பார்க் செய்துவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது வண்டியை காணவில்லை
என்று ஒருவர் பதற்றத்தோடு அங்கும் இங்குமாக விசாரித்துக்கொண்டிருந்தார்
கடைசியாக போலீஸ் ஸ்டேஷனில் வண்டி இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்றார்
"நல்ல வேல 'போலீஸ் செக் போஸ்ட்'ல
வண்டிங்கள செக் பண்ணும்போது இந்த வண்டி திருட்டு வண்டின்னு தெரிஞ்சி
பிடிச்சி வச்சோம்... என்னங்க சார் நீங்க படிச்சவங்கதானே... பக்கத்தில வண்டி
ஸ்டேண்ட் இருக்குல்ல... அங்க நிறுத்துனா என்ன... அஞ்சி ரூபாய்க்கு யோசிச்சிக்கிட்டு கண்ட இடத்துல நிறுத்துவீங்க...அப்புறம்
வண்டி தொலைஞ்சி போச்சுன்னு எங்க உயிர எடுப்பீங்க... நானும் கேள்விப்பட்டேன்
அந்த வயசானவர தொல்ல பண்றீங்கலாமே...இதுக்குமேல அவருக்கு
தொல்ல கொடுத்தீங்க வேற கேஸ்ல
உங்கள உள்ள தள்ளீடுவேன்..."போலீஸ்
பாணியில் மிரட்டினார்.
இப்போதுதான் அந்த வயதானவர்
எந்த இடையூறும் இல்லாமல் தன் தொழிலை செய்கிறார்.
-சுகபாலா,
திருச்சி.