நீதிபதி இரத்தினசாமி வீட்டில் சமையல்காரனாய்ப் பணி புரியும் ராமையாவிடம் நீதிபதி கேட்டார்.
"ஏம்ப்பா ராமையா... உன் பையனை போதை மருந்துக் கடத்தல் குற்றத்திற்காக கைது செய்திட்டாங்களாமே?... நீயே உன் பையனை போலீசில் காட்டிக் கொடுத்து அரெஸ்ட் பண்ண வச்சிட்டியாமே?.. உண்மையா?"தன் மூக்கு கண்ணாடியைக் கழற்றித் துடைத்தபடியே கேட்டார் நீதிபதி ரத்தினசாமி.
"ஆமாங்கய்யா... தினமும் எதையோ கொண்டு வந்து வீட்ல கட்டிலுக்கு அடியில் மறைச்சு மறைச்சு வெச்சிட்டிருந்தான்... கையும் களவுமாப் பிடிச்சு விசாரிச்சப்ப மழுப்பினான்!... லேசா அதட்டினேன்... ஒத்துக்கிட்டான்... "அதெல்லாம் போதை மருந்துகள்!"ன்னு... அப்புறமென்ன?... நேரா போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்து அவங்களை வரவழைத்து அவனையும் அந்த போதைப் பொருளையும் அவங்க கிட்ட ஒப்படைச்சிட்டேன்" பெருமையாகச் சொன்னான் ராமையா.
சில நிமிடங்கள் அவன் முகத்தையே உற்றுப் பார்த்த ரத்தினசாமி, "சரி... அவனை ஜாமீனில் எடுக்கவோ... தண்டனையிலிருந்து மீட்கவோ.. ஏதாச்சும் முயற்சி எடுத்தியா?"
இட,வலமாய்த் தலையாட்டினான் ராமையா.
"என்னப்பா பையனோட எதிர்காலத்தை வீணாக்கிட்டியே?.. நாளைக்கு ஜெயிலிலிருந்து அவன் வெளிய வந்தா இந்த சமூகம் அவனை எப்படிப் பார்க்கும் யோசிச்சுப் பார்த்தியா?"
"ஐயா நான் மட்டும் இதைச் செய்யாமலிருந்தா பல கல்லூரி, பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கி அவர்களுடைய எதிர்காலத்தை என் மகன் கெடுத்திருப்பானே?"
"சரி... நடந்தது நடந்து போச்சு... நான் ஒரு வக்கீல் பேரைச் சொல்றேன் அவர்கிட்டப் போய் இந்த விபரங்களை எல்லாம் சொல்லு... அவர் உன் மகனை காப்பாற்ற ஏற்பாடு செய்வார்" நீதிபதி ரத்தினசாமி சொல்ல.
"தேவையில்லைங்க ஐயா... நான் யார்?... கடந்த 15 வருடங்களாக நீதிபதி ரத்தினசாமி ஐயாவுடைய வீட்டு சமையல்காரன்.... நீதிக்கே அரசரான அந்த மகானுக்கு இந்தக் கையால சமைச்சுப் போடுற பாக்கியம் பெற்றவன்!... குற்றவாளிகளைத் தப்பிக்க விடாமல் அவர்களுக்கு உரிய தண்டனையை உரிய நேரத்தில் வழங்குற நீதி தேவனான உங்க உப்பைச் சாப்பிட்டவன் அய்யா நான்!... என் மகன் என்பதற்காக ஒரு குற்றவாளியைக் காப்பாற்ற முயற்சி செய்யலாமா?... சொல்லுங்க ஐயா"
ஆடிப் போனார் நீதிபதி ரத்தினசாமி.
"சரி... நீ போப்பா... போய் வேலையைப் பாருப்பா" என்று சொல்லி ராமையாவை அங்கிருந்து அனுப்பி விட்டு சோபாவில் சாய்ந்தமர்ந்து நீண்ட நேரம் அமைதியாய் மேலே சுழலும் ஃபேனையே பார்த்துக் கொண்டிருந்த நீதிபதி ரத்தினசாமி சட்டென்று மொபைலை எடுத்து யாருக்கோ டயல் செய்தார்.
எடுத்த எடுப்பில் எதிர் முனையிலிருந்து அந்தக் கேள்வி வந்தது. "சார் பணத்தை எங்கே கொண்டு வந்து தரணும்?"
"நீ எங்கேயும் கொண்டு வந்து தர வேண்டாம் நீயே வச்சுக்கோ உன் பணத்தை.... உன்கிட்ட பணம் வாங்கிட்டு குற்றவாளியான உனக்கு சாதகமா தீர்ப்பு எழுத நான் தயாராயில்லை!" சொல்லி விட்டு இணைப்பை கட் செய்த ரத்தினசாமி, "என்கிட்ட வேலை பார்க்கிற சமையல்காரனே இவ்வளவு நேர்மையா இருக்கும் போது நான் தடம் மாறலாமா?" தன்னைத் தானே கேட்டுக் கொண்டார்.
(முற்றும்).
-முகில் தினகரன்,
கோயம்புத்தூர்.