tamilnadu epaper

சர்தார்ஜி

சர்தார்ஜி


சேரன் எக்ஸ்பிரஸ் கோவையை நோக்கி தனது பயணத்தை துவங்கியது. 

உறவினர் இல்ல விசேஷதிற்காக தனது மகள் அபியுடன் வந்திருந்த கவிதா, கோவைக்கு திரும்பிக்கொண்டிருந்தாள். 

அவளது கணவர் அலுவலக வேலை அதிகமாக இருப்பதால் வர இயலாது என கூறிவிட்டதால், மகளுடன் அவள் மட்டும் வர வேண்டியதாயிற்று.

மகள் அபிக்கு காலையிலிருந்து கொஞ்சம் காய்ச்சல் இருந்ததால், மறுநாள் ஊருக்கு போய் மருத்துவரிடம் காண்- பித்துக்கொள்ளலாம் என முடிவு செய்து தற்காலிகமாக மாத்திரை மட்டும் அளித்துவிட்டு ஊருக்கு கிளம்பி விட்டாள்.

ரயிலில் தனக்கு எதிர் படுக்கையில் அமர்ந்து இருந்த சர்தார்ஜி -யை

பார்த்தவுடன் கவிதாவுக்கு இனம் புரியாத எரிச்சலும்கோபமும் வந்தது.

அதற்கேற்றார்போல, அந்த சர்தார்ஜியும் அப்பெட்டியில் ஏறியதிலிருந்து, யாரிடமோ இந்தியில் சத்தமாக பேசியவாறு இருந்தார்.

கவிதவுக்கு அது மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. 

மேலும், பஞ்சாபிக்காரர்கள் என்றாலே சுத்தமற்றவர்கள் எனவும், தமது தலையில் அணியும் டர்பனை கூட சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு தவறான எண்ணத்தையும் மனதில் பதிய வைத்திருந்தாள்.

  வடஇந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வரும் வட இந்தியர்கள் பலரும் அழுக்கு உடையுடன் வருவதையும், ரயில்வே ஸ்டேஷன் நடைமேடையிலேயே கூட்டமாக உட்கார்ந்து சுக்காரொட்டி செய்து சாப்பிடுவதையும் பார்த்திருக்கிறாள்.

எனவே, அவளுக்கு பஞ்சாபியர்களை கண்டால் ஒரு விதமான வெறுப்பு. 

கவிதா குழந்தையை இட்லி சாப்பிட செய்து விட்டு, அவளும் உணவு அருந்தியபின் படுக்க ஆயத்தமானாள். 

எதிர் சீட் சர்தார்ஜியும் தன்னுடைய சாப்பாட்டு பொட்டலத்தை பிரித்து கொண்டு வந்திருந்த சுக்கா ரொட்டியும், சப்ஜியும் சாப்பிட ஆரம்பித்தார்.

கவிதா மகள் அபியை படுக்க செய்தபின், தானும் படுத்துக்கொண்டாள்.

நடுஇரவில் குழந்தை அபியிடமிருந்து வினோதமான ஒலி எழும்புவதை கேட்டு திடுக்கிட்டு எழுந்த கவிதா, குழந்தை மூச்சுவிட சிரமப்படுவதையும், வலிப்பு வந்ததுபோல் உடம்பு தூக்கி, தூக்கி போடுவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து பயத்தில் அழ ஆரம்பித்தாள்.

குழந்தையின் உடம்பு அனலாக கொதித்தது. 

அதற்குள் இதர பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்து,

ரயிலில் டாக்டர் யாரும் பயணிக்கிறார்களா? என விசாரிக்க சென்றனர்.

இதற்கிடையில், கவிதாவின் அழுகை சத்தம் கேட்டு எழுந்த சர்தார்ஜி நிலைமையை புரிந்துகொண்டார்.

அனைவரையும் விலக சொல்லிவிட்டு, தனது பெட்டியிலிருந்து ஸ்டெதஸ்கோப்பை எடுத்து குழந்தையை பரிசோதித்தார். உடனடியாக தனது மருத்துவ கிட்டை எடுத்து ஒரு ஊசி போட்டார். சில மாத்திரைகளையும் உடனே குழந்தைக்கு கொடுக்கும்படி கவிதாவிடம் கூறினார்.

சிறிது நேரத்திற்கு பிறகு அபியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, காய்ச்சலும் குறைந்து, இயல்பு நிலை திரும்பியது.

அதுவரை சர்தார்ஜியும் குழந்தையின் அருகில் அமர்ந்து கவனித்துக்- கொண்டிருந்தார்.

கவிதாவும் பயம் நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பினாள்.

அப்போதுதான் அங்கிருந்த அனைவருக்கும் சர்தார்ஜி

ஒரு மருத்துவர் என தெரியவந்தது.

சர்தார்ஜிக்கு நன்றி தெரிவித்து எங்கிருந்து வருகிறீர்கள் ? என கேட்டபோது,

ஊட்டி -வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மைய்யத்தில் டாக்டராக பணிபுரிவதாகவும், விடுப்பில் பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்புவதாகவும் அரைகுறை தமிழில் தெரிவித்தார்.

கவிதாவை பார்த்து நீங்க பயப்பட வேண்டாம், “she will be alright,

ஊருக்கு போனவுடன் உங்க டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணிடுங்க” என்றார். 

கவிதா, சரி என்று அவரிடம் கூறினாள்.  

அந்த சர்தார்ஜியை பார்த்து எரிச்சல் அடைந்ததற்கும், பஞ்சாபியர்களை பற்றி தவறாக எண்ணியதற்கும் மிகவும் வருத்தப்பட்டு, மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்.

அவர் மட்டும் அந்த நேரத்தில் இல்லாமல் போயிருந்தால், தனது மகளின் நிலைமை என்ன ஆகியிருக்குமோ? என நினைத்து கவலை கொண்டாள்.

இனி எக்காலத்திலும் யாரையும் உருவத்தை பார்த்து தவறாக மதிப்பீடு செய்ய கூடாது என தீர்மானித்து கொண்டாள்.

மீண்டும் அவரிடம் தனது பெண்ணை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டாள் கவிதா !

சேரன் விரைவு ரயில் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது.



-கோபாலன் நாகநாதன்,

சென்னை -33