ஆரியன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். காலை எழுந்ததிலிருந்து மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தான். காரணம் அவனது மாமா, அத்தை... எல்லோரும் வெளிநாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதற்காக தான். அவர்களின் வருகைக்காக மிகவும் ஆவலோடு காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்தில் அவனது மாமா, அத்தை,மாமாவின் குழந்தைகள் என அனைவரும் வந்தார்கள். அவனுக்காக அவனது மாமா நிறைய வெளிநாட்டு சாக்லேட்... பிஸ்கட் போன்றவற்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.அவர்களோடு பேசி மகிழ்ச்சியோடு அந்நாளை செலவழித்தான். மாமாவின் வருகைக்காக அவன் பள்ளிக்கு விடுப்பு எடுத்திருந்தான். அதனால் அன்று அவனைப் பார்க்க அவனது நண்பன் சாய் சித்தார்த் வீட்டிற்கு வந்தான். அவனிடம் ஆரியன் மாமா வந்ததைப் பற்றி கூறி மகிழ்ந்தான். சிறிது நேரம் பேசிவிட்டு நண்பன் வீட்டிற்கு சென்று விட்டான். உள்ளே வந்த ஆரியனிடம் அவனது தந்தை ஏன் உனது நண்பனுக்கு மாமா வாங்கி வந்த பிஸ்கட்.. சாக்லேட்... போன்றவற்றில் எதுவும் கொடுக்கவில்லையா என்று கேட்டார். அதற்கு ஆரியன்,,..மாமா எனக்காக வாங்கி கொடுத்தது. நான் ஏன் அவனுக்கு கொடுக்க வேண்டும்... அவனுக்கு கொடுத்தால் என்னுடைய பங்கு குறைந்து விடாதா என்றான்.
அதற்கு தந்தை பொறுமையாக அவனை அழைத்து...அருகில் அமர வைத்து, இதோ பார் ஆரியா... உனக்கு கொடுத்ததை மற்ற எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இன்று உன்னை தேடி வந்த ஒரு நண்பனுக்கு கொஞ்சம் கொடுத்திருக்கலாமே. அது உன் நட்பையும் வலுப்படுத்தும் அல்லவா. எப்போதும் நமக்காக என்று மட்டும் நாம் இருக்கக் கூடாது. நமது பண்பாடே விருந்தோம்பல் தான். நம் வீட்டிற்கு உன் நண்பர்கள் யாரேனும் வந்தால் அவர்களை உபசரிக்க கற்றுக்கொள். அவர்கள் வெளியே சென்ற பின், அவர்களுக்கு கொடுக்காமல் ஒரு பொருளை மறைத்திருந்து வைத்து உண்ணுதல் கூடாது. அது அமிழ்தமே ஆனாலும் உண்ணக்கூடாது என்று வள்ளுவர் கூறியுள்ளார். அதனால் நீயும் உன் நண்பர்களுக்கு சிறிதளவேணும் கொடுத்துவிட்டு நீயும் மகிழ்ச்சியோடு இரு என்று கூறினார். ஆரியனும் இனி அவ்வாறே செய்கிறேன் என்று தந்தைக்கு வாக்குறுதி கொடுத்தான். வாக்குறுதி கொடுத்தபடி மறுநாள் ஆரியன் பள்ளிக்குச் செல்லும் பொழுது தன் நண்பன் சாய் சித்தாத்திற்கு சிறிது சாக்லேட் எடுத்துச் சென்று கொடுத்து மகிழ்ந்தான்.
குறள் :
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று .
-முனைவர் உமாதேவி பலராமன்,
117 பைபாஸ் சாலை,
திருவண்ணாமலை,
606601. 9486365350.