tamilnadu epaper

சாமியும் ஆசாமியும்

சாமியும் ஆசாமியும்

அந்த ஊரில் சாமி என்பவர் நாத்திகவாதி. அடிக்கடி அவருக்கும் பக்கத்து வீட்டு நண்பர்களுக்கும் கடவுள் உண்டா, இல்லையா என
ஒரு சொற்போர் நடந்து
கொண்டே இருக்கும்! 

சாமி என்பவர் மனிதர்களைப் போல் மரங்களையும் அதிகம் நேசிப்பவர்! வீட்டில் ஏகப்பட்ட மரங்களை பிள்ளை போல வளர்த்து
வந்தார்! 

ஒருமுறை சாமியும் அவர்
நண்பர்களும் பேசிக்கொண்டிருக்கும் போது, 

" கடவுள் இருக்கிறாரா இல்லையா? 'என நண்பர்கள் கேட்டனர். 
அதற்கு சாமி, "கடவுள் இல்லை! மனிதனுடைய முயற்சியால் தான் வெற்றி, தோல்வி வருகிறது! நமக்கு நடக்கும் நன்மைக்கும் தீமைக்கும் நாம் தான் காரணம்! கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்
அல்லது காப்பாற்றினார்
என்பதெல்லாம் மூடத்தனம்!" என்றார். 

நண்பர்கள் விடாமல், "சாமி! நீ சொல்வது தவறு! கடவுள் இல்லாமல் இவ்வுலகில் மனிதன் மட்டுமல்ல பிற
உயிர்கள் இவ்வளவு ஏன்
இந்த மரத்தைக்கூட
காப்பது கடவுள் தான்! இதை நீ ஒரு காலம் வரும்போது புரிந்து கொள்வாய்!" என பல விவாதங்கள் நடந்து பின்னர் கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் சாலைகளை அகலப்படுத்தும் பணி துவங்கியது. சாலையோர மரங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். 

வெளியே இருந்த வேலுவின் மரத்தை வெட்டுவதற்கு அடுத்து வருவார்கள்! 

அப்படி வந்தால் என்ன செய்து விடுவார்கள் பார்ப்போம் என்று வீட்டிற்குள் இருந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தார் சாமி! 
சிறிது நேரத்தில் நகராட்சி ஆட்கள் சாமியின் மரத்தை நோக்கி வந்தனர். 
சாமியும் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்! 
மரத்தின் அருகில் வந்தவர்கள் சிறிது நேரம் கழித்து கையை எடுத்து கும்பிட்டபடி பக்கத்து மரத்திற்கு சென்றனர்! 

மரத்தை நோக்கி வீட்டுக்குள் இருந்து வந்த தன்னை எதற்காக கை எடுத்து கும்பிட்டபடி செல்கின்றனர் என்று
குழம்பியவாறு மரத்துக்குக் கீழே பார்த்த
சாமிக்கு ஆச்சரியமாக இருந்தது! 

மரத்தைச் சுற்றி மஞ்சள் துணி கட்டப்பட்டு, குங்குமம் வைத்து மரத்தை சாமியாக்கி இருந்தனர்! யார் வேலையாக இருக்கும் என்று தீவிர யோசனையிவ் சாமி இறங்கிய போது அவர் மனைவி குறுக்கே வந்து,
 
"என்னங்க! நான்தான் ராத்திரியே மஞ்சள் துணியைக் கட்டினேன்! 
இல்லையென்றால் நீங்கள் பாடுபட்டு வளர்த்த மரத்தை இந்நேரம் வெட்டிச் சாய்த்திருப்பார்கள்! 
கடவுள் தாங்க இந்த மரத்தைத் காப்பாத்தி இருக்கார். 
சாமி கும்பிட மாட்டீங்க நீங்கள்! உங்களைக் கேட்காம இப்படி செய்திட்டேன்! 
நம்ம மரத்தைக் காப்பாற்ற திடீரெனத் தோன்றியது எனக்கு! 
இதைத்தவிர வேறு வழி தெரியவில்லை!"
என்று பேசியவள் அப்போதுதான் கவனித்தாள் தன் புருஷன் மரத்தைத் தொட்டு கும்பிட்டு விட்டு
நெற்றியில் குங்குமம் பூசிக் கொண்டிருந்ததை!. 

 - பிரபாகர் சுப்பையா, மதுரை-12