** சனி நீராடு என்றார் ஆத்திச்சூடியில் ஒளவையார் அவர்கள். அதை நாம் சனிக்கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்ற தவறான ஒரு அர்த்தத்தை எடுத்துக் கொண்டு விட்டோம். அது அப்படி அல்ல.
சனி நீராடு என்பது, சனித்த நீரில் அதாவது, புதிதாக உருவாகிய ஓடிக் கொண்டேயிருக்கும் ஆற்று நீரும், ஊற்றாகப் பொங்கும் ஊற்று நீரும் சனித்த நீராகும். இதில் பிராண ஆற்றல் மிகுந்திருக்கும். இதில் குளிப்பது ஆரோக்கியம் என்பது தான் நிஜமான அர்த்தம்.
** கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே. இதற்கு நாம் தவறான பொருள் என்ன எடுத்துக்கொண்டோம். கப்பலே கவிழ்ந்து விட்டாலும் உன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கவலையில் உட்காராதே என்று.
ஆனால் உண்மையான பொருள் என்னவென்றால் கப்பல் வியாபாரம் செய்வது என்பது ஒரு பெரிய விஷயம் அப்படி கப்பல் கவிழ்ந்து விடும் பொழுது பொருள் நஷ்டம் மிகவும் ஆகிவிடும். கையில் எதுவுமே காசு இருக்காது அந்த சமயத்தில் கன்னக்கோலில் கை வைக்காதே. திருடனுடைய கோள்தான் கன்னக்கோல். வறுமையில் வாடும் பொழுது, வியாபாரத்தில் அனைத்தையும் இழக்கும் போது, திருடினால் என்ன என்ற எண்ணம் வரக்கூடாது என்பதுதான் அதன் அர்த்தம். கப்பல் கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே என்பது மருவி கன்னத்தில் என்று வந்துவிட்டது.
ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்று நாம் நினைப்பது, பிள்ளையார் கோவிலில் உள்ள ஆண்டியை யாரும் கவனிப்பதில்லை என்பது பொருள். ஆனால் உண்மையான பழமொழி என்னவென்றால் ஊருக்கு வெளிச்சம் பிள்ளையார் கோயிலாண்டி என்று. ஊர் முழுக்க வெளிச்சம் அடங்கி விட்ட போதிலும் பிள்ளையார் கோவிலில் மட்டும் விளக்கின் ஒளியால் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும் என்பது தான் அதன் அர்த்தம்.
இது போன்ற நிறைய விஷயங்களை நாம் தவறாக கணித்துக் கொள்கிறோம்.