வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் கடவுளுக்கு அடுத்தபடியாக பலர் ஜோதிடத்தை நம்புகிறார்கள். எந்த பாவமும் செய்யாத எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடைசி வரைக்கும் இதே கஷ்டம்தானா? என பலரும் ஜோதிடரிடம் கேட்கும் ஆதங்கமான கேள்வி. தர்மசாஸ்திர நியதிப்படி ஒருவர் தெரிந்தும் தெரியாமலும் புண்ணியம் செய்தால் அதற்குத் தக்க பலன் உண்டு. அதே போல் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்தால் அதற்கும் தக்க பலன் உண்டு. ஆக கர்ம வினைக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு. இந்த நியதியானது அரசன்முதல் ஆண்டிவரை அனைவருக்கும் பொருந்தும். ஒரு மனிதன் இந்த பூமியிலே பிறப்பதற்கு காரணம் முற்பிறவியிலே செய்த பாவ, புண்ணியமாகும்.
அதை அனுபவிப்பதற்காகவே இப்பூமிக்கு வருகிறான். அதனால் நாம் வாழும் பூமிக்கு "தர்ம, கர்ம" பூமி என்று பெயர். ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து விடுகிறார்கள். ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு சிலரோ செய்ய நினைத்தவற்றை நினைத்த மாத்திரத்திலேயே செய்து விடுகிறார்கள். வேறு சிலர் எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை. இதற்கு பிறந்த நேரமே காரணம் என்று நடைமுறையிலே சிலர் பேச பார்க்கிறோம். ஒரு ஆத்மா தன்னுள் நிறுத்தும் கர்மா சொத்து, காமம், காசு என்ற மூன்று வழியாகவே உருவாகுகிறது. இந்த மூன்றும் தந்தை, தாய் வழி கர்ம வினை மற்றும் முன் பிறப்பின் கர்ம வினை மூலமாக ஒரு ஆன்மாவில் இயங்குகிறது. மனிதன் தன் வாழ்வில்சிவன் சொத்து குல நாசம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் கர்ம வினை தாக்கத்தால் வருபவை.
*சிவன் சொத்து குல நாசம்*
ஒரு கோவில் சொத்தை அபகரித்தால் குலமே(வம்சம்) நாசம் அடையும் என்பது தான் சாஸ்திர நியதி. சிவன் கோவில் மட்டுமல்ல அனைத்து கோவில் சொத்து மேல் ஆசைப்படுபவர்கள் சந்ததிகளும் அடியோடு நாசமாகி சீர்குலையும் என்பதாகும். அதாவது வரம் கொடுத்த இறைவன் தலையிலேயே கையை வைத்த பஸ்மாசுரன் நிலை தான் கோவில் சொத்தை அபகரித்தவர்களுக்கும் ஏற்படும். இதனால் தான் பலர் சிவன் கோவில் பிரசாதமான விபூதியை கூட வீட்டிற்கு கொண்டு வருவது இல்லை என்பதும் ஒரு சிறு காரணமாக இருக்கலாம். உளவியல் ரீதியாக கோவில் சொத்தை அபகரிக்கும் எண்ணம் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும்.சிலர் தர்ம காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள சந்தர்ப்பம் தேடி அலைகிறார்கள்.
பலர் கோவில் சொத்தை பராமரிக்க அரும்பாடுபடுகிறார்கள். உண்மையில் சிவன் சொத்து குல நாசம் என்பதன் பொருள் இதுவல்ல. சிவன் என்றால் சிவம்.
சிவம் என்பது இயற்கையாய் எங்கும் நீக்கமன்றி இருக்கின்ற ஒரு மெய் பொருளாகும். மெய் பொருள் என்பது ஒவ்வொரு உயிரிலும் இயங்கிக் கொண்டு இருக்கும் ஆன்மா. சிவம் எனும் மனசாட்சிக்குப் புறம்பாக செய்யும் அனைத்துச் செயல்களும் வினையில் பதிவாகும். இதைத்தான் சிவன் (சிவம்) சொத்து குல நாசம் என்று கூறி வைத்தனர். அதாவது ஆன்மாவில் நிற்கும் சிவம் செத்தால் (மனசாட்சி செத்தால்) குலம் நாசமாகும் என்பதே இதன் பொருள். உடலும் (சந்திரன்), உயிரும் (சூரியன்) கலந்த சிவம் எனும் ஆன்மாவிற்கும் உள்ளுணர்விற்கும், மனசாட்சிக்கும் எதிராக செயல்பட்டவர்களுடைய வாழ்நாள் கொடூரமான நரக வேதனை மிகுந்ததாக இருக்கும்.
உடலும், உயிரும் துன்புறும் வகையில் பல துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
பல பெரும் பண வசதி படைத்தவர்கள் வாரிசுகளால் தீராத மன வேதனை அனுபவிப்பதற்கு இதுவே காரணம். சென்ற பிறவிகளில் தீராத தீர்க்க முடியாத பாவங்களை புரிந்தவர்கள் இந்த பிறவியில் மீள முடியாத தண்டனையை பல்வேறு வழிகளில் அனுபவித்து தீர்க்கிறார்கள்.
யாரும் தான் செய்த தவறை ஒத்துக் கொள்வதில்லை என்பதால் தான் பிரபஞ்சம் கடந்து வந்த ஜென்ம நினைவுகளை மனிதர்களிடம் இருந்து அகற்றி விடுகிறது. அதே போல் எவ்வளவு பரிகாரம் செய்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிப்பவர்களின் ஜாதகத்தில் நிச்சயம் கிரகண தோஷம் இருக்கும். அல்லது சூரியன், சந்திரனுக்கு ராகு கேது சம்பந்தம் இருக்கும்
சிவசக்தி
நாப்பிராம்பட்டி
ஊத்தங்கரை
கிருஷ்ணகிரி மாவட்டம்