tamilnadu epaper

சுந்தர காண்டம் படிப்பதன் பலன்...

சுந்தர காண்டம் படிப்பதன் பலன்...

 

இராமாயணத்தில் 'சுந்தர காண்டம்' தான் மிகச் சிறந்தது என்று போற்றப்படுகிறது. மற்ற காண்டங் களை கதாநாயகன் என ராமனைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறது. ஆனால் 'சுந்தர காண்டம்' ஒன்றுதான் பிராட்டி சீதையைப் பற்றியும் பக்தன் ஆஞ்சனேயரைப் பற்றியும் கூறுகிறது. 

 

ஸ்ரீவைஷ்ணவத்தில், பகவானை விட பிராட்டிக்குத் தான் ஏற்றம் அதிகம். பகவானுடைய அடிகளை நாம் அத்தனை போற்றுகிறோமே அதற்கு பிராட்டிதான் காரணம். பாற்கடலில் அவன் தூங்கும்போது அவன் பாதங்களை பிராட்டி வருடி விடுவதின் காரணமாக அவன் பாதங்கள் தனி சக்தியை பெறுகின்றன. ஆக அந்தப் பிராட்டியைப் பற்றியும், பக்தன் ஆஞ்சனேயரைப் பற்றியும் முழுவதும் பேசுவதால் 'சுந்தர காண்டம்' முக்கியத்துவம் பெறுகிறது.

 

ஹனுமாரின் சாகச செயல்களை விவரிக்கும் இந்த காண்டத்திற்கு வால்மீகி முதலில் 'ஹனுமத் காண்டம்' என்று பெயரிட்டார். உடனே ஹனுமார் அவர் முன் தோன்றி தன் பெயரில் ஒரு காண்டமும் இருக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். உடனே வால்மீகிக்கு ஆஞ்சனேயர் குழந்தையாக இருந்த காட்சி கண் முன் வர, அவருடைய தாயார் அஞ்சனா தேவி குழந்தை ஹனுமனை ''சுந்தரா'' என்று வாஞ்சையுடன் அழைத்தது தெரிந்தது. ஆகவே அக்காண்டத்திற்கு 'சுந்தர காண்டம்' என்று பெயரிட்டார். பாவம் ஹனுமார்! ராமர் அழகானவர் ஆனதால் அவர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது என்று சந்தோஷமடைந்தார். 

 

இது ஏன் சுந்தர காண்டம் என்றால் பகவானுடைய திவ்ய மங்கள உருவம் மிக அழகாக வர்ணிக்கப்படுகிறது. ராமனுடைய அழகை ஹனுமார் சீதைக்கு மிக அழகாக வர்ணிக்கிறார். உபமானங்கள் சிறந்து விளங்குவது இந்த காண்டத்தில்தான். இலங்கையில் ஹனுமான் சந்திரோதயத்தை வர்ணிப்பதை இன்றெல்லாம் படித்து மகிழலாம்.

 

அனுமன் என்னும் பக்த ரத்தினம், சுந்தர காண்டம் என்னும் மந்திர ரத்தினம் ஆகிய இருரத்தினங்களை ராமாயணம் என்னும் பொக்கிஷம் நமக்கு அளித்துள்ளது.

 

 பக்தர்களில் சிறந்தவர் அனுமன்.கணப்பொழுதும் ராம நாமத்தை மறவாதவர்அவர்.ராமரின் அருளை விரைவில் அடையவிரும்புவோர் ஒருமுறை 'ஸ்ரீராமஜெயம்' என்று சொல்லி அனுமனை சரணடைந்தால் போதும்.

இதனால் அவர் 'பக்த ரத்தினம்' என போற்றப்படுகிறார். 

 

வாழ்வில் எத்தகைய துன்பம், கவலை, தடைகள் குறுக்கிட்டாலும் மந்திர ரத்தினமாகிய சுந்தர காண்டத்தை படித்தால் சூரியனைக் கண்ட பனி போல அவைகள் பறந்தோடும்.

 

 அனுமனின் அருள் பெற 'சுந்தரகாண்டம்' படிப்பதே சிறந்த வழி.

 

-ப.சரவணன்.