விஷாலுக்கான கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை அவனது நண்பர்கள் ஒட்டத் தயாரானபோதுதான் ஒருவர் வந்து, அவர்களை விஷாலின் தந்தை பிரபாகர் அவசரமாக அழைப்பதாகச் சொன்னார்.
தங்களை எதுக்காக விஷாலின் அப்பா அழைக்கிறார் என்று புரியாமல் ஓடி வந்தார்கள் அவர்கள்.
“விஷாலுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் பண்ணி வெச்சுருக்கீங்களா? – நிதானமாகக் கேட்டார் பிரபாகர்.
“ஆமா அங்கிள்” –கூட்டத்தில் ஒருவன் சொன்னான்.
“கண்ணீர் அஞ்சலி போஸ்டரை இப்ப ஒட்ட வேண்டாம். நாளைக்கு ஒட்டினா போதும்…” –பிரபாகர் சொன்னது விஷாலின் நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“அங்கிள்! விஷால் பாடியை இன்னிக்குத்தானே தகனம் பண்றோம். இன்னிக்கு ஒட்டினாத்தானே சரியா இருக்கும்!” –விஷாலின் நண்பன் ஒருவன் கேட்டான்.
“வரவேண்டியவங்க எல்லாம் வந்துட்டாங்க. இந்தப் பகுதி மக்களுக்கு என் பையன் இறந்து போனது தெரிஞ்சாச்சுல்ல…” –பிரபாகர் சொன்னார்.
“ஆமா அங்கிள். ஆனாலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை நாளைக்கு ஒட்டினாப் போதும்னு எதுக்காகச் சொல்றீங்க?” –விஷாலின் நண்பன் கேட்டான்.
“என் பையன் விஷால் பைக்ல அதிக வேகத்துல போனதாலதான் விபந்து நடந்து இறந்திருக்கான். இந்த செய்தி நாளைக்கு நியூஸ் பேப்பர்ல வரும். அந்தச் செய்தியை பெருசா ஃபோட்டோ காப்பி எடுத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டரோட சேர்த்து ஒட்டுங்க. இறந்துபோன என் மகன் இனி திரும்பி வரமாட்டான். ஆனா என்னோட மகன் வயசுல இருக்கிற பிள்ளைங்களுக்கு அதைப் பார்க்கும்போது இனி அதிக வேகமாக பைக்ல போகக்கூடாதுன்னு எண்ணம் வரும். நீங்களும் வேகமாக போகாதீங்க. இருக்கிறவங்களாவது நீண்ட நாள் நல்லபடியா வாழணும். கண்ணீர் அஞ்சலிங்கிறது வெறும் வருத்தத்தைத் தெரிவிக்கிறதா மட்டும் இருந்தா போதாது, ஒரு படிப்பினையாவும் இருக்கணும்” –பிரபாகர் கண்ணீரைத் துடைத்தபடி சொல்ல,
“ஓ.கே அங்கிள்” –சொன்ன விஷாலின் நண்பர்களின் முகத்தில் திருப்தி தெரிந்தது.
-கீர்த்தி