ஊருக்கு எல்லையிலே
காடு வயல் கரையினிலே..
வா.. என்று அழைத்ததந்த டூரிங் டாக்கிஸ்.
சினிமா கொட்டகை
சிந்தனைக்குப் பெட்டகம்
நடனம் நாடகம் கூத்து என்று கலையோங்கு கிராமங்களில் தமிழ் வளர்த்தத் அரங்கம அது
பனைமரங்கள் தூணாக
ஓலைகளே கூறையாக
கீத்துக் கொட்டகைக்குள்
ஒரு புது உலகம் கண்டோம்.
மணலைக் குவித்து வைத்து.. மகராசன் போல் அமர்வோம்.. சேர் டிக்கெட்டு சிம்மாசனம் நமக்கு. காதல் கதை பேசும்.. பருவத்தின் சாரலிலே.. அவளோ அந்தப்பக்கம்.. ஆடவனோ இந்தப் பக்கம்.
இடைவேளை வந்துவிட்டால் விளக்கெரியும் நிலை புரியும். முருக்கு,கடலைமிட்டாய் பன்னு பருக்கியென பலவகை நொறுக்குத் தீனி.. வகையாய் வாங்கித்தின்ற வசந்த காலம் அது. டீக்கடையில் ஈ போல மொய்த்தப் பொழுது அது.
எம்.ஜி.ஆர். நாமாவோம்
சிவாஜி போல் அழுதோம். குடும்பப் படம் பார்த்து கண்கலங்கி விடைதருவோம்.
நடந்தே நாம் செல்வோம். சைக்கிலில் சிலசமயம்.. கரண்ட் இல்லையெனில் கடவுளைத் திட்டுவோம்.
விசில் பறக்கும்.. சமுதாய எழுட்சியோ சற்றே பெருக்கெடுக்கும் இசையில் மெய் மறக்கும்.. சண்டைவர முண்டா உயர்த்தும்.
பாடல்கள் மனப்பாடம். வசனங்கள் வேதவாக்கு
கவலைகள் பறந்து போக.. கால் டவுசர் கிழிந்து போக.. ஆவலாய் அமர்ந்த இடம்
இன்று இல்லை..
அத்தனையும் கட்டிடமாய்.. குடியிருப்பாய்.. ஆட்டி வைக்கும் மதுக்கடையாய்.. மாறி போச்சு இங்கே.. நாம் புரண்டு எழுந்த டூரிங் டாக்கீசு எங்கே?
-வே.கல்யாண்குமார்