tamilnadu epaper

தடம் மாறும் மனசு”

தடம் மாறும் மனசு”

உங்களைப் பார்க்க யாரோ ஒருத்தர் வந்திருக்கார்...ஏதோ பர்ஸனல் மேட்டராம்” ப்யூன் ரங்கசாமி  சொல்ல,

 

      “சரி..வரச் சொல்லு” என்றார் ஜி.எம்.

 

      வந்தவன், உயரமாய், சிவப்பாய், சினிமா ஹீரோ போலிருந்தான்.  

 

      “என் பேர் சிவா!... பேங்க்ல ஒர்க் பண்ணறேன்!... ஹிண்டு மேட்ரிமொனியல் மூலமா... உங்க. ஆபீஸ்ல ஒர்க் பண்ற “நளினி”ங்கற பெண்ணை செலக்ட் பண்ணியிருக்கேன்!... அவங்களைப் பற்றி உங்க கிட்ட ரகசியமா விசாரிக்கலாம்னு வந்திருக்கேன்... நான் வந்திருப்பது அவங்களுக்குத் தெரிய வேண்டாம்... ப்ளீஸ்”.

 

      “ஷ்யூர்” என்ற ஜி.எம்., தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு, ஆபீஸில் அக்கவுண்ட்ஸ் செக்‌ஷனில் வேலை பார்க்கும் இளைஞனுக்கும் அவளுக்கும்  “கசமுசா” என்று மெகா பொய்யைச் சொல்லி வைத்தார்.

 

      “ரொம்ப நன்றி சார்” என்றபடி அவன் எழ, அவனிடம் மறக்காமல் மொபைல் எண்ணை வாங்கி கொண்டார் ஜி.எம்.சசிதரன். அவனைத் தன் மகள் பவித்ராவிற்கு ஜோடி சேர்க்கும் எண்ணத்தோடு. பின்னே?... பேங்க்கில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை அல்லவா?

 

      அடுத்த வாரத்தில் ஒரு நாள், ஜி.எம்.சசிதரன் மகள் பவித்ராவைப் பெண் பார்க்க வந்திருந்தான் அதே சிவா. பேச்சு வார்த்தைகள் எல்லாம் நல்ல விதமாய் முடிய, அன்றே நாளும் குறிக்கப்பட்டது.

 

      எக்ஸ்பிரஸ் வேகத்தில் திருமண வேலைகள் நடந்தேறியதில்... அதே மாதத்தில் திருமணமும் முடிந்தது.

 

      தன் முதுகுக்குப் பின்னால் நிகழ்ந்து முடிந்த ஒரு சதி நாடகத்தைப் பற்றி அறியாதவளாய், ஒரு பரிசுப் பொருளுடன் வந்து வாழ்த்தி விட்டுச் சென்றாள் அப்பாவி நளினி.

 

      பத்து மாதங்களுக்குப் பிறகு,

 

      “ஜி.எம்.சசிதரனோட மாப்பிள்ளை இறந்திட்டாராம்.... ரெண்டு கிட்னியும் ஃபெயிலியராம்!.... கல்யாணத்துக்கு முன்னாடியே அந்த விஷயம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்குத் தெரியுமாம்!... ஆனாலும் மறைச்சிட்டாங்களாம்!.... விதி எப்படியெல்லாம் விளையாடுது பார்த்தியா நளினி!” பக்கத்து சீட் சுமதி அங்கலாய்க்க,

 

       “ஆண்டவா!... வாழ வேண்டியவங்களை அல்பாயுசுல அழைச்சுக்கற உன்னோட செயலை நீ நிறுத்தவே மாட்டியா?” அப்பாவி நளினி ஆண்டவனைத் திட்டினாள்.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோவை