*திருச்செந்தூரில் முருகனை தரிசித்து அரோகரா கோஷத்தோடு வந்து....பழனி பஞ்சாமிர்தமாய் பயணித்துக் கொண்டிருந்தார்கள் எழும்பூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் முன்பதிவில்லா பெட்டியில் மக்கள்.
ஒருவர் அனல் மூச்சுக்காற்று அடுத்தவர் மேல் அக்னிக்கணையாய் பாய..சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு.."நம்ம ஆளுங்க எல்லாத்துக்கும் அலுத்துக்கறோம்..அந்த இந்திக்காரங்களை பாருங்க..வேலைக்கும் அசரமாட்டறாங்க..சாப்பாடு..தங்குற இடம்..எதெது கெடைக்குதோ..அததை அப்படியே ஏத்துக்கிட்டு வாழுற மனப்பக்குவம் அவங்ககிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டிய பாடம்..இப்ப கூட பாருங்க..நாம நிக்கவே கூச்சப்படுவோம்..அவங்க ரெண்டு பேரு கக்கூஸ் பக்கத்துலயே தாராளமா உட்காந்துகிட்டு வர்றதை பாருங்க.."சக பயணிகளிடம் சொன்னேன்.
"அகாங்..ஏன் சார் நீங்க வேற..இவனுங்கள போயி ரொம்ப தூக்கிப் புடிச்சி பேசுறீங்க..அவனுங்ககிட்ட கேட்டுப்பாருங்க..டிக்கெட் கூட வச்சிருக்க மாட்டானுங்க..மேலெல்லாம் பாருங்க.. ஒரே சிமெண்ட் கலவை..அதை ஒழுங்கா கழுவி தேங்காயெண்ணைய தடவக்கூட முடியாதா சார் இவனுங்களால..நீங்க எப்பவோ ஒருதடவை இப்படி வந்து போறீங்க..அதனால இவனுகளுக்கு பரிதாபப்படறீங்க..என்னை மாதிரி வாராவாரம் வந்து போனீங்கன்னா..இவனுங்க கொட்டம் என்னன்னு தெரியும்" என்றான் ஒரு இளைஞன்.
"தம்பி..நீங்க என்ன படிக்கறீங்க தம்பி" என்றேன்.
"நான் ஏரோ நாட்டிகல் இன்ஜீனியரிங் கோவையில படிக்கறேன்..இப்ப ட்ரெயினிங் கேம்ப் இண்டர்வியூ..அதுக்காக சென்னை போறேன்..சார்" என்றான்.
'ஓகோ..பெரிய இடத்து பிள்ளை போல...அதான் சகமனுசனுக்கு மரியாதை அளிப்பதும் சமூக கடமை தான் என்ற உணர்வில்லாமல் வளர்ந்து இருக்கிறான் போல'என்று நினைத்தபடி...
"தம்பி..நீ வாழ்க்கையில முன்னுக்கு வர வாழ்த்துக்கள்..ஆனா..அவங்க நம்பளவிட வயசுல மூத்திருப்பாங்களே..என்னதான் மொழி புரியாதுன் னாலும்..கொஞ்சம் மரியாதையா..பேசலாமே" என்றேன்.
"அட..விடுங்க சார்..இவனுங்களுக்கு மரியாதையாவது ..ஒன்னாவது" அலட்சியமாக சொன்னபடி ..செல்போன் அழைப்புக்கு செவிமடுத்தான்.
பெரும் ஜனத்திரளின் ஆரவாரத்தில் எதிர்குரல் புரியாமல்..லவுட் ஸ்பீக்கரில் போட்டான்.
'தம்பி..கேட்குதாப்பா..நாந்தான்..தாத்தா பேசறேன்..பத்திரமா போப்பா..நல்லா படி ராசா..படிப்புதாண்டா நம்ம குடும்ப மானம் மருவாதிய காவுந்து பண்ணும்..ஒப்பன் இருவது வருசமா தரிசா கெடக்குற நெலத்தை..வெலகூறுனப்ப சம்மதிக்காத நான்..இப்ப உன் படிப்புக்கோசரம் ஓத்துக்கிட்டேன்டா ராசா...அதுக்கு ஒம்மேல நா வச்சிருக்குற பாசம் மட்டும் காரணமில்லடா தம்பி..பண்ணைக்காரு வூட்டுல அவரோட கொள்ளுப்பேரன்.."ஏலே..முனியா..சீக்கிரமா வெந்நீ வெளாவுடா..பள்ளியோட வேனு வந்துடும்னு..என்னை அதட்டுறான்...அவங்கம்மாக்காரி ஒப்பனுக்கு புழுக்கை வேலையா குடுத்து புழக்கடையில சோறு போடுறா..இதெல்லாம் மாறனும்னா..நீ நல்ல வேலை பார்த்து ஆபிசராயி..ஜீப் காருல ஊருக்குள்ள..வரனும்டா..ஐயா.."அதற்கு மேல் எதிர்முனை கேவலோடு துண்டிக்கப்பட...
மௌனமாகவே வந்தான் இளைஞன்.சூழ்நிலையை மாற்ற..'சூடான சம்சா..டீ'என்ற குரல் போதுமானதாக இருந்தது.
தன்னை சகஜமாக்கிக்கொண்ட அவன்.."சார்..உங்களுக்கு டீ"என்க.."இல்லேப்பா..பயணங்களில்..வீட்டுலேயிருந்து சீரகத்தண்ணீ கொண்டுவந்து அதை மட்டுமே குடிக்கிறது..நன்றிப்பா"என்றேன்.
"அண்ணே..மூனு சம்சா..மூனு டீ ..எவ்வளவுண்ணே" என்றபடி காசு கொடுத்தான்.இரு கைகளிலும் டீயும் சம்சாவுமாக வாங்கி ..இந்திக்கார்களிடம் இவன் நீட்ட..அவர்கள் மிரட்சியோடு வாங்கிக்கொள்ள..புன்னகை அரும்ப என்னைப் பார்த்தான்.தனது தாத்தான், தந்தையின்..மரியாதையை இப்போதே மீட்டு விட்ட நிறைவு அவன் முகத்தில் பிரகாசித்தது*
*****************
*அரும்பூர்.க.குமாரகுரு,மயிலாடுதுறை*