tamilnadu epaper

தன் வினை...

தன் வினை...

ரெட்டியபட்டி எஸ் மணிவண்ணன்.

              "மாணிக்கம் ...கார் ரெடியா" ..என்று கேட்டுக்கொண்டே முதலாளி சிவப்பிரகாசம் வாசலுக்கு வந்தார். "ரெடி முதலாளி"... என்றவாறு காரின் கதவை திறந்து விட்டான் டிரைவர் மாணிக்கம் .சிவப்பிரகாசம் காரின் முன்பக்கம் ஏறிக்கொண்டார் .40 வயதை கடந்தவர் என்றாலும் சற்றென்று வயதை கணக்கிட முடியாது. பணக்கார தோரணை... பகட்டான வாழ்வு ...தவறு செய்ய அஞ்சாத மனசு ..எதிர்ப்பவனை இடம் தெரியாமல் அழிக்கும் துணிச்சல்.. ஈவு இரக்கமற்றவர். 

                 கார் எஸ்டேட்நோக்கிவிரைந்தது .முதலாளிக்குநம்பிக்கைக்குரியவனாய் 10 வருடங்களாய் வேலை செய்து வருகிறான். இத்தனை வருடமாய் முதலாளி செய்த அக்கிரம செயல்களுக்கு உடந்தையாக இருந்தவன். கண்டும் காணாமல் முதலாளி கொடுக்கும் பணத்துக்கு விசுவாசம்மாய் நடந்து கொண்டவன். இன்று தன்வினை தன்னை சுடும். மாணிக்கத்துக்கு சுட்டதும்துடி துடித்துப் போனான். ஊரார் வீட்டு இளம் பெண்களை முதலாளி ஏமாற்றி கெடுத்த பொழுது ..பாவத்திற்கு துணை போன மாணிக்கம் ..இன்று தான் பெற்ற மகளையே முதலாளிக்கு விருந்தாக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்ற கவலையில் என்ன செய்வதென்று தெரியாமல் துடித்தான்.

           எந்த அப்பனால் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும் ...எவளோ பெத்த பெண் பிள்ளை முதலாளிக்கு இறையாகின்ற பொழுது ...வேடிக்கை பார்த்தவன்... இன்று தனக்கு வரும்பொழுது வலிக்கிறது.

             நேற்று பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட காரை நிறுத்தியவன்... எப்படியோ மறந்து தன்னுடைய கைப்பேசியை வைத்துவிட்டு இறங்கினான்... அந்நேரம் கைபேசி ஒலிக்கவே ...சிவப்பிரகாசம் எடுத்துப் பேசினார் ...எதிர் முனையில் சுமதி... மாணிக்கத்தினுடைய மகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினாள். அப்பொழுதுதான் மாணிக்கத்திற்கு வயசுக்கு வந்த பெண் பிள்ளை இருப்பது தெரிந்தது. காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு மாணிக்கம் காரை ஸ்டார்ட் செய்தான் . கார் போய்க்கொண்டிருந்தது.

               "மாணிக்கம் ..உன் மேல நான் எவ்வளவு நம்பிக்கை வச்சுஇருந்தேன். நீ இப்படி மறைப்பேனு நம்பவே இல்லை.." என்றார் சிவப்பிரகாசம். மாணிக்கத்திற்கு எதுவும் புரியவில்லை ."என்ன முதலாளி சொல்றீங்க ...கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.." என்றான். "உனக்கு வயசுக்கு வந்த ஒரு மகள் இருக்காங்கிற விசயத்தை என்கிட்ட மறைச்சிட்டயே..."என்றார். மாணிக்கம் சற்றென்று பிரேக் அடித்து காரை நிறுத்திவிட்டு திடுக்கிட்டான்.

               "நீ பெட்ரோல் போட இறங்குறப்ப போன் வந்துச்சு ... நான் எடுத்துப் பேசினேன்... அப்பத்தான் உனக்கு ஒரு மக இருக்குங்கிற விசயமே தெரிஞ்சது..." மாணிக்கம் உடல் நடுங்க பயந்தான். அவன் பயந்தது மாதிரியே நடந்தது. "மாணிக்கம் நாளை உன் மக எஸ்டேட்டில் இருக்கணும் ...கூட்டிட்டு வரது உன் பொறுப்பு ..."என்றான். நிலை குலைந்து போனான் மாணிக்கம் ...செய்வதறியாது தவித்தான் ...பெற்ற மகளையே கூட்டி கொடுக்கிற துர்பாக்கிய நிலைக்கு வந்து விட்டோமோ என்று துடித்தான். எதுவும் பேசாமல் மௌனமாய் காரை ஓட்டினான். "என்ன மாணிக்கம் நான் கேட்ட கேள்விக்கு பதிலே காணோம்.. அப்படி என்ன யோசிக்கிற .."என்றான் சிவப்பிரகாசம்... கார் மலைப்பாதைய நோக்கி போய்க் கொண்டிருந்தது.

                  "முதலாளி ...நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் ..நான் பண்ணுன தப்புக்கு இப்ப தண்டனை கிடைச்சிருச்சு..." என்றான் . "மாணிக்கம். என்னடா சொல்ற ..."முதலாளி கேட்டார். "இத்தனை நாளா நீங்க பண்ணின தப்புக்கு நான் உடந்தையாக இருந்தேன் ...இப்ப நான் பெத்த மகளையே ..."அதற்கு மேல் பேச முடியாமல் விம்மினான் மாணிக்கம்..

                   "டேய் மாணிக்கம் ...என்ன பத்தி தான் உனக்கு நல்லா தெரியுமுல... நான் ஆசைப்பட்டுட்டா அதை அடைஞ்சே தீருவேன்...". " தெரியும் முதலாளி ...ஆனா, இப்ப என்னைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்கங்க... என்னடா சொல்ற புரியலையே...?" "புரியும்படி சொல்றேன் முதலாளி... தெய்வம் நின்று கொல்லும்.... "என்றான்."டேய் மாணிக்கம் புரியும்படி தெளிவா சொல்லு.... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ...நாம செஞ்ச பாவத்துக்கு தண்டனையை நாமதான் அனுபவிக்கணும்... இப்ப நீங்க செஞ்ச பாவத்துக்கு தண்டனை அனுபவிக்க போறீங்க ..புரியுதா முதலாளி... "என்றான்.

           "டேய் என்ன உளர ...என்ன தண்டனை.... முதலாளி நீங்க சாகப் போறீங்க... அதுதான் தண்டனை.... நீங்க செஞ்ச பாவத்துக்கு நான் துணை போனதால எனக்கும் தண்டனை ...நானும் உங்களோட சேர்ந்து சாகப் போறேன்..." மாணிக்கம் சற்றென்று காரை திருப்பினான் . அந்த மலை உச்சியில் 500 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது.

                                                             (முடிவுற்றது)