சேலம்:
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை தொடர்ந்து சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். பணம் மற்றும் நகைக்காக இக்கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில், தோட்டத்து வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோரை கொலை செய்து, பணம், நகை போன்றவற்றை கொள்ளையடித்து செல்லும் சம்பவம், சமீபத்தில், அதிகளவில் நடந்து வருகிறது. சில வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இத்தகைய சம்பவம் தோட்டத்து வீடுகளில் தனியாக வசிப்போர் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நர்ஸ் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனியாக இருந்த மூதாட்டி நகை, பணத்திற்காக கொலை
இந்நிலையில் சேலத்தில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது. சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(65). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், மனைவி வித்யா(60) உடன் வீட்டில் இருந்தார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவரையும் வெட்டி விட்டு தலைமறைவாகினர். இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வித்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை மற்றும் பணத்திற்காக இச்சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் விமல்(22). இவரது நண்பர் ஜெகன்(24). இவர்களுக்கும், வேறொரு கோஷ்டிக்கும் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர், இருவரையும் சராமரியாக வெட்டினார். இதில் விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெகன், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.