tamilnadu epaper

தீராதக்குழப்பம்

தீராதக்குழப்பம்


குமரேசன் இரண்டு நாட்களாகவே மனக் குழப்பத்தோடு இருந்தான்.இது போன்ற குழப்பம் இவன் வாழ்நாளில் இதுவரை வந்ததேயில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை.காலை மணி 9 ஐ நெருங்கிய நிலையில் அவனது மனைவி சுந்தரி, நேரமாகுது.... சாப்பிட வாங்க என்றாள்.குழந்தைகள் இருவரையும், பசங்களா சாப்பிட வாங்க என்றாள்.

டிவி.பார்த்துக்கொண்

டிருந்த குழந்தைகள் இருவரும் இதோ வந்துட்டோம் என்று கோரஸாக குரல் கொடுத்தபடி, வழக்கமாக சாப்பிடும் இடமான ஹாலில் வந்தமர்ந்தனர்.

அறையிலிருந்த குமரேசன்,‌அவசரமாக சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வாசலை நோக்கி சென்றான்.

என்னாங்க... சாப்பிட்டுட்டு போங்க

என்றாள் ....

வரேன்... வரேன்...

என்று சொல்லியவாறு, குமரேசன் வீட்டிலிருந்து இறங்கி தெருவில் நடந்தான்.

தெரு கடைசியில் உள்ள மளிகை கடையை நோக்கி சென்றான்.

அங்கு இவனோடு கட்டிடவேலை செய்யும் கந்தசாமி நின்றிருந்தான்.

குமரேசனைப் பார்த்த கந்தசாமி எதுக்கு இப்ப என்னை போன் பண்ணி வரச்சொன்ன?

இன்னைக்கு தான் வேலை எதுவும் இல்லேயே....

ஆமாம்... இன்னைக்கு தான் ஞாயிற்றுக்கிழமை 

ஆச்சே... வேலை இல்லேன்னு தான் தெரியுமே....!

பின்ன எதுக்கு என்னை வரச்சொன்ன?

அது ஒன்னுமில்ல... கந்தசாமி... இரண்டு நாளா ஒரே குழப்பமா இருக்கு! அதுக்குத்தான் உன்னை கூப்பிட்டேன்...

அப்படி என்ன உனக்கு குழப்பம்! அதுக்கு நான் செய்யனும்?

சொல்றேன்...அவசரப்படாத.... அடுத்த வாரம் ரெண்டு கட்சிகளோட மாநாடு பக்கத்து டவுன்ல நடக்கப் போகுதுல்ல....

ஆமாம்... மாநாடு நடக்குறதுல உனக்கு ஏன் குழப்பம் வருது என்றான் கந்தசாமி.

என்னப்பா... ஒன்னும் புரியாது போல பேசற... நீயும் தான வரப் போற...! இரண்டு மாநாடும் ஒரே தேதியில நடக்கிறதுனால எனக்கு குழப்பம் வந்துடுச்சு! எந்த கட்சியோட மாநாட்டுல கலந்துக்கறதுன்னுதான் எனக்கு ஒரே

குழப்பமா இருக்கு!

இதுக்குதான் குழம்பிகிட்டு நிக்கறியா....இங்க பாரு.... அந்த க் கட்சிக்காரங்க மாநாட்டுக்கு லாரியிலதான் அழைச்சிட்டுப் போறாங்க..காலையில வடையும் டீயும் தராங்க... மதியம் சாம்பார் சாதம் கொடுத்து,கூடவே குவார்ட்டர் சரக்கும் கொடுக்கறதா வார்டு செயலாளர் வாஞ்சிநாதன் எங்கிட்ட சொன்னாரு.....

இந்தக் கட்சியில மதியம் கோழி பிரியாணியும், தலைக்கு 500 ரூபாய் பணமும் தராத சொல்லி இருக்காங்க... எல்லாரையும் பஸ்சுல அழைச்சிட்டு ப் போறதா இளைஞர் அணி தலைவர் மணிகண்டன் சொன்னான்.

எந்த மாநாட்டுக்கு நாம போறதுன்னு முடிவு பண்ணிகிடவேண்டியதுதான்...சரி.. அதான் நாள் இருக்குல்ல..குழப்பிக்காம இரு...

எந்தக் கட்சிக்காரன் இன்னும் அதிகமா பணம் தரானோ அந்தக் கட்சி மாநாட்டுல நாம கலந்துப்போம்..இப்ப உன் குழப்பம் தீர்ந்திடுச்சுல்ல...! சரி...குமரேசா...

நான் புறப்படறன் என்று சொல்லிக் கொண்டு கந்தசாமி சைக்கிளில் பறந்தான்.



-தமிழ்ச் செம்மல் 

நன்னிலம் இளங்கோவன்.