ஏழை ஒருவன் தினமும் அதிகாலையில் எழுந்து தனக்கு சொந்தமான வயற்காட்டிற்கு சென்று கீரை வகைகளை பறித்து, அதை சந்தையில் விற்று ஜீவிதம் செய்து வந்தான்!
அவன் தினமும் வயற்காட்டிற்கு செல்லும் வழியில் ஒரு பிராமணர் தனது வீட்டில் ஒரு பெருமாள் விக்ரஹத்தை வைத்து துளசி இலையால் பூஜை செய்வதை பார்த்து கொண்டே போவான்!
வழக்கம்போல் ஒருநாள் கீரை வகைகளை பறிக்கும்போது, அதன் அருகே சில துளசிச் செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான். அதை பூஜைக்கு பிராமணரிடம் சேர்க்கலாமே என்று எண்ணி, கீரையுடன் துளசியையும் சேர்த்து பறித்து தலைமீது வைத்துக்கொண்டு பிராமணர் இல்லம் நோக்கி நடந்தான்!
ஆனால் அவன் பறித்த கீரைக்கட்டில் ஒரு சிறு கருநாகம் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.
பிராமணரின் இல்லத்து முன் வந்து நின்றான் ஏழை விவசாயி. பிராமணன் ஏழையைப் பார்த்தார். அவன் பின்னே அருவுருவமாய் யாரோ ஒருவர் நிற்பதைக் கண்டார்.
தன் ஞான திருஷ்டியால் அந்த ஏழையின் பின்னே நிழற்போல் நிற்பது கிரஹங்களில் நாகத்தின் அம்சமான ராகு நின்றிருப்பதைக் கண்டார்.
உடனே ஏழையிடம், "உன் தலையில் உள்ள கீரைக்கட்டை அப்படியே வைத்திரு, கீழே இறக்கவேண்டாம் இதோ வந்து விடுகிறேன்" என்று கூறி, குடிலின் பின்பக்கம் சென்று மந்திரத்தை உச்சரித்து ஏழையின் பின்னே நின்றிருந்த ராகுவை அழைத்தார்.
ராகுவும் பிராமணன் முன் தோன்றி அழைத்ததன் காரணத்தைக் கேட்டார். பிராமணரும் ராகு தேவதையை வணங்கி, எதற்காக இந்த ஏழையினை பின் தொடர்ந்து வருகிறாய்? என்று கேட்க..
ராகுவோ, இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கருநாகம் உருவம் எடுத்து தீண்ட வேண்டும் என்பது அவனுக்கு எழுதப்பட்ட விதி. ஆனால் இவன் என்றும் இல்லாத அதிசயமாக இன்று பகவானின் பிரியமான துளசியை இவன் தலையில் சுமந்து வருவதால், இவனை என்னால் தீண்ட முடியவில்லை.
இவன் தலையில் சுமந்திருக்கும் கட்டிலிருந்து துளசியை உங்களிடம் கொடுத்த அடுத்த கணமே, அவனை தீண்டிவிட்டு என் கடமையை முடித்துக் கொள்வேன் என்றார் ராகு!
அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி, ராகுவே நீர் அவனை தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா என்றார்.
ராகு, ஸ்வாமி! "இத்தனை காலம் நீர் பகவத் ஆராதனம் செய்த புண்ணியத்தின் பலனை, அந்த ஏழைக்கு தாரை வார்த்துக் கொடுத்தால் அவனது ஸர்பதோஷம் நீங்கி, நான் அவனை தீண்டாமல் சென்று விடுவேன்" என்றார்.
பிராமணரும் அகமகிழ்ந்து தான் இதுநாள் வரை எம்பெருமானுக்கு செய்த ஆராதனைப் பலன் அனைத்தையும் அந்த ஏழைக்கு தாரை வார்த்து கொடுக்க, ராகு பகவானும் பிராமணரின் தர்ம குணத்தைப் போற்றி, அங்கிருந்து மறைந்தார்!
கீரைக்கட்டில் இருந்த கருநாகம் மறைந்தது. பிராமணர் அந்த ஏழையிடம் இனி தினமும் நீயே என் பூஜைக்கு துளசி பறித்து வா என்றார். ஏழையும் மிகவும் சந்தோஷப்பட்டான், நம்மால் பூஜை செய்ய முடியாவிட்டாலும், இந்த பிராமணர் மூலம் அந்த பாக்யம் கிடைக்கிறதே என்று மகிழ்வுடன் வீடு திரும்பினான்.
வைகுண்டவாசன் ஹரி நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஆழ்ந்த பக்தியே!
பக்தியோடு சிறு துளசி இலையை சமர்ப்பித்தாலும் பரவசமாய் அதை ஏற்றுக்கொள்வான்!
நமஸ்தே துளசி தேவி!
நமோ நமஸ்தே நாராயண ப்ரியே!!
-S.Narayanan
Chennai