மீராவிற்கு வயது எழுபது இருக்கும்
சாய் பக்தி உடையவள். அந்த சத் சங்கத்தில் சேர்ந்து ஸ்லோகம் கதைகள் எனச் சொல்லிக் கொடுப்பாள்.
தன்னார்வத் தொண்டு செய்பவராக எங்கெல்லாம் சாய் சத் சங்கத்தால் நடைபெறும் விழாக்களுக்கும் சென்று உதவுவார்.
ஒரு பெண் அவளும் டெல்லியில் செட்டில் ஆக ஒரு அபார்ட்மெண்டில் தன்னைச் சுருக்கிக் கொண்டாள்.
இருந்தாலும் மனதை இளமையாக வைத்துக் கொண்டு அதற்கேற்ற சுறுசுறுப்புடன் வளைய வருவாள்.
அபார்மெண்ட்டில் அறுநூறு வீடுகள் அதில் குடி இருப்பவர்கள் நானூறு அத்தனை பேருக்கும் உதவியாக இருப்பதால் மீராம்மா என்றே அழைக்கப் பட்டாள்.
கொரானா வருவதற்கு முன்பிருந்தே இடைவெளி பின்பற்றுபவர். தன்னை யாரும் தொடாமல் பார்த்துக் கொள்வாள். ஆனாலும் அதில் விகல்பம் இருக்காது.
நாங்கள் எல்லாம் அப்பா மடியில் வளர்ந்தவர்கள் அல்ல. அம்மாவையே தூர நின்று ரசித்தவங்க. அம்மாவையும் கூட hugபண்ணியது கிடையாது.
"அப்போ வீட்டுக்காரர்!!!"..
"அவரையும் தான் என்பாள். அந்தக் காலத்தில் ஒரு ரசிப்பு இருந்தது வாழ்க்கையில் ஒரு அழகு இருந்தது".
"அப்போ, இந்தக் காலத்தில் இல்லையா மீராம்மா?"
"நானும் எங்க வீட்டுக்காரரும் அவ்வளவு அன்யோன்னியம்",என்பாள் ராதா.
அதற்கு மீராவும் ,"சமயம் கிடைத்தால் போட்டுத் தாக்கறையே
கன்னாபின்னான்னு பேசறியே!" அதெல்லாம் நாங்க செய்ய மாட்டோம்".
"ஈசுதல் ,உரசுதல், தொடுதல் என்பதெல்லாம் எங்க காலத்தில் ஒரு அருவருப்பே!", என்றாள் மீரா.
"அதற்குத்தான் அனுபவித்தோமே, இனி, நாங்களும் ஜாக்கிரதையாக இருப்போம் மீராம்மா" என்றாள் ராதை.
"அதெல்லாம் உங்களாலே முடியாது.இதெல்லாம் இயற்கையா வரணும்", என்றாள் மீரா..
"சரி, இன்னும் ஒரு வாரத்திற்கு நான் கீழே இறங்க மாட்டேன்", என்றாள் மீரா.
"ஏம்மா! எங்காவது டூரா?", என்றார்கள்.
"இல்லை ,இல்லை, என் மக மாப்பிள்ளை பேத்தி வரப் போறாங்க!" "கிளம்பிட்டாங்க, இரவு ஒன்பது மணிக்கு வந்திருவாங்க", என்றாள் மீரா.
"என்ஜாய் பண்ணுங்கள் மீராம்மா", என்றனர்.
ஒன்பது மணிக்கு அவர்கள் வரவே அவர்களுடன் தன் வீட்டிற்கு வந்தாள் மீரா.
"பாட்டி! நீ ரொம்ப க்யூட்! ",என்றது பேத்தி அனன்யா.
"இப்படி எல்லாம் நாம் சொல்வோமா?" என்று நினைத்தது மீராவின் மனம்.
இரவு டின்னர் முடிந்து படுக்க எல்லாரும் போயாச்சு. அது ஒரு இரண்டு bk அடுக்குமாடி. ஒரு அறையில் மகளும் மாப்பிள்ளையும் போக, பேத்தி," பாட்டி! நான் உன் ரூமிற்கு வரேன்", என்றாள்.
"சரி வா, இன்னொரு கட்டிலில் படுத்துக்கோ", என்று சொன்ன மீரா
தான் தரையில் பாயை விரிக்க," பாட்டி! நீயும் என் கூடவே படுத்துக்கோ", என்றது ஆங்கிலத்தில்
"இல்ல இதெல்லாம் பாட்டிக்கும் பிடிக்காது", என்று சொல்லத் தயங்கிய மீரா," இல்லப்பா இரண்டு பேருக்கு இடம் பத்தாது கட்டிலில். நீ மட்டும் படுத்துக்கோ", என்றாள்
"அப்படின்னா, நானும் உன்கூட தரையில் படுத்துக் கொள்கிறேன்", என்றது வாண்டு.
"இதென்னது? வம்பா போச்சுன்னு", மீரா தயங்க, அவளோ கூலாக ஜம்பாகி தரையில் உருண்டாள்.
கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போன மீரா பேத்தி எழுப்புவதைக் கண்டு பயந்து போய்," என்ன அனன்யா?" என்று கேட்க
பேத்தி சிரித்துக் கொண்டே," நா எழுப்பினாக் கூட பயப்படுவியா?"..
"பாட்டி! நீ என்னக் குழந்தையா?" என்று சிரித்தாள்.
தொடுதல் என்பது நம் மனம் சார்ந்த உணர்வு. தனியாக வாழ்ந்த போதும், அதற்கு முன்பும், நம்மைத் தொட்டு எழும்படியாக யாரும் இருந்ததில்லை. பயமாக இருக்கலாம் அல்லது இரக்கமாக இருக்கலாம்.
உரிமை கொண்டு எழுப்பிய பேத்தியின் ஸ்பரிசத்தில் ஓர் இதம் இருப்பதை உணர்ந்தாள் மீரா.
-K. BANUMATHI NACHIAR
DIVAGIRI