ஹவுஸ் ஓனர் செல்வராஜ்
கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
"இதோ பாரம்மா ஜெயந்தி! நீங்க இங்க குடி வந்ததிலிருந்து இந்த தெருவில் நாய் தொல்லைங்க அதிகமாயிடுச்சு. நீங்க வளர்க்குற நாய் இங்க வர்ற எல்லா நாய்ங்ககிட்டயும் சண்டை போடுது ராத்திரில நிம்மதியா தூங்க முடியறது இல்ல .யாரையாவது கடிச்சி வச்சதுன்னா நான் தானே பதில் சொல்லி ஆகணும். ஒன்னு நாயை கொண்டு போய் எங்கேயாவது விட்டுட்டு வந்துடுங்க. இல்லன்னா இந்த மாசம் வீட்டை க் காலி பண்ணிடுங்க "
என்று அவர் கூறியதும் ஜெயந்திக்கு அழுகையே வந்துவிட்டது.
சின்ன குட்டியில் இருந்து வளர்த்து வரும் பப்பியை திடீரென்று எப்படிப் பிரிவது ?
இங்கு குடி வந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது .மீண்டும் வேறொரு வீடு பார்த்து இங்கே இருந்து அங்கு கொண்டு போய் சேர்த்து குடிபோவதற்குள் போதும் போதும் என்றாகி விடுமே! இங்கே இருந்து விடலாம் என்றால் பப்பியை பிரிவதற்கு மனம் வரவில்லை .மூன்றாம் வகுப்பு படிக்கும் மகன் குமாருக்கு பப்பி என்றால் உயிர்
அன்று இரவு.கணவர் கணேசனிடம் பேசியதில் பப்பியை கொஞ்சம் தூரத்தில் எங்கேயாவது கொண்டு போய் விட்டு விட்டு வந்து விடுவது என்று முடிவெடுத்து விட்டார்கள்.
கணேசன் கார் டிரைவர் ஆனதால்
அந்தக் காரிலேயே நகரின் ஒதுக்கப்புறமாய் இருந்த ஏரியாவில் கொண்டு போய் விட்டு விட்டு வந்து விட்டான்.
அடுத்த நாள் காலை. எப்போதுமே குமார் ஸ்கூல் வேனுக்கு செல்லும்போது
கூடவே வரும் பப்பியை காணாததால் "எங்கே அம்மா பப்பியைக்காணோம் ?" என்று அவன் கேட்க உண்மையைக் கூறாமல் அனுப்பி வைத்தனர்.
மாலை பள்ளி விட்டு வந்ததும்
பப்பி காணாமல் போனதன் காரணத்தை அறிந்த குமார் அழுது புரண்டான். எனக்கு இப்பவே பப்பி வேணும் என்று அவன் பிடித்த அடத்தால் கணேசன் காரை எடுத்துக் கொண்டு தேடத் தொடங்கினான்.எங்கேயும் காணாததால் ஒருவித விரக்தியுடன் வீடு திரும்பினான்.
"இவ்வளவு நேரம் பப்பி வந்துடுமா என்று கேட்டுவிட்டு சாப்பிடாமல் கூட குமார் தூங்கி விட்டாங்க "என்றாள் ஜெயந்தி .
பப்பியைக் காணவில்லை என்றதும்
அவளும் சோகமானாள்.காலை எழுந்தவுடன் குமாருக்கு என்ன சொல்லுவது.என்று யோசித்தபடியே தூங்கிப்போனார்கள் .
காலையில் வாசல் தெளிக்க
பக்கெட்டுடன் கதவைத் திறந்தாள் ஜெயந்தி. வாசலில் இருந்த கோணிப்பையின் மீது நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தது பப்பி.
மு.மதிவாணன்
குபேந்திரன் நகர்
அரூர் 636903